CoronaVirus: தமிழகத்தில் 3.55 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 5,795 பேருக்குத் தொற்று! #NowAtVikatan

19.8.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
தமிழகத்தில் புதிதாக 5,795 பேருக்குத் தொற்று!
தமிழகத்தில் இன்று மட்டும் 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,384 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை, 2,96,171 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 116 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 6,123ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மேலும் 1,186 பேருக்குத் தொற்று!
சென்னையில் மட்டும் இன்று 1,186 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,20,267 ஆக அதிகரித்துள்ளது.
எக்மோ கருவி மூலம் சிகிச்சை!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், எக்மோ கருவி மூலமாக எஸ்.பி.பி-க்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
`தனிமைப்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்!’
தமிழகத்தில் தற்போது விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருவதால், மக்கள் தங்களின் தேவைகளுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வருகிறார்கள். ஊரடங்கு சமயத்தில் பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்த நிலையில் தற்போது வேலை நிமித்தமாக பலரும் சென்னை திரும்புகிறார்கள்.

இந்த நிலையில் சென்னைக்கு வரும் வெளிமாவட்ட பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
3 லட்சம் ரூபாய் நிவாரணம்!

கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் சிக்கி இறந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
`சுஷாந்த் சிங் மரணம் - சிபிஐ விசாரணை!’

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மும்பை காவல்துறை இதுவரை சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்கவும் தனது உத்தரவில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதனால் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விசாரணை வேகம் எடுக்கும் என கூறப்படுகிறது.
‘திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும்’

`தமிழக முதல்வர், துணை முதல்வரிடம் பேசி திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்க முயற்சி எடுப்போம்’ என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர்கள் மதுரையை இரண்டாவது தலைநகரம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கும் நிலையில் மற்றொரு அமைச்சர் திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என கோரியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேத்யூ சாமுவேல் தொடர்ந்த மனு தள்ளுபடி!

முதல்வர் பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி தெஹல்கா இதழ் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மனுத்தாக்கல் செய்திருந்தார். அது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று அவர் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
20 லட்சத்தைக் கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 27,67,274 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 64,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 1,092 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 52,889 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,37,871 ஆகவும் உயர்ந்துள்ளது.