`வேளாண் மசோதா விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்!’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி #NowAtVikatan
19-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!
வேளாண் மசோதா விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்!
`வேளாண் மசோதாவில் தமிழக விவசாயிகளை பாதிக்கும் வகையில் எந்த அம்சமும் இல்லை’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `வேளாண் பெருமக்களை காப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும். மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைக்கும். விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்பதால் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்’ எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
தலைமைச் செயலாளர் மீதான புகாரில் விசாரணை!

கோரிக்கை மனு அளிக்கச் சென்ற தங்களை அவமரியாதையாக நடத்தியதாக தமிழகத் தலைமைச் செயலாளர் சண்முகம் மீது தி.மு.க எம்.பி-க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் புகாரளித்திருந்தனர். இந்தப் புகாரை விசாரிக்க நாடாளுமன்ற மக்களவை உரிமைக்குழு வரும் 24-ம் தேதி கூடுகிறது.
எல்.முருகன் மீது வழக்கு!

கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாக பா.ஜ.க தமிழகத் தலைவர் எல்.முருகன் மீது மாம்பலம் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். பிரதமர் மோடியின் பிறந்தநாளன்று பொது இடத்தில் சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்ததால், எல்.முருகன் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் 100 பேர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது.
கொரோனா - இந்தியா நிலவரம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 93,337 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 53,08,014-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,247 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்திருக்கின்றன. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்புகள் 85,619-ஆக அதிகரித்திருக்கின்றன.

ஒரே நாளில் 95,880 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டநிலையில், இதுவரை 42,08,431 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார்கள். 10,13,964 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.