தி.மு.க-வில் இணையும் கோவை அ.தி.மு.க முன்னாள் மேயர்...! #NowAtVikatan

19-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
தி.மு.க-வில் இணையும் கோவை அ.தி.மு.க முன்னாள் மேயர்...!
கோவை மாநகராட்சி முன்னாள் மேயராக இருந்த அ.தி.மு.க கணபதி ராஜ்குமார் விரைவில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைகிறார். சமீப காலமாக அ.தி.மு.க-வில் ஓரங்கட்டுப்பட்டு வந்த ராஜ்குமார் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதன்படி ஒவ்வோர் அரிசி குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும் என்றும், ஒரு கிலோ அரிசி, ஒரு முழுக் கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, உலர் திராட்சை மற்றும் முந்திரி ஆகியவை வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். பொங்கலுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டுவந்த நிலையில், இந்த ஆண்டு, அது ரூ 2,500 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

`தமிழக அரசின் பொங்கல் பரிசு ஜனவரி 4-ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும்’ என முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
எங்களுக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம்!
2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் தற்போது சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. தி.மு.க தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலும் தனது பிரசாரத்தை இந்த வாரம் தொடங்கினார். இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது எடப்பாடி ஊரிலிருந்து பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார்.
இந்தநிலையில் தேர்தல் ஆணையம் கட்சிகளுக்குச் சின்னம் ஒதுக்கியதில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்குக் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒதுக்கப்பட்ட `டார்ச் லைட்’ சின்னம் கிடைக்கவில்லை. அதற்கு தாமதமாக விண்ணப்பித்திருந்தது காரணமாகச் சொல்லப்பட்டது. முன்னதாக அதே சின்னத்தைக் கோரிய எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு `டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கிய அதே டார்ச் லைட் சின்னத்தை மீண்டும் ஒதுக்கக் கோரி, மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதே நேரத்தில், `எங்களுக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம்’ என எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி அறிவித்திருக்கிறது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
பிரசாரத்தைத் தொடங்கினார் முதல்வர்!

எடப்பாடியில் இன்று தனது பிரசாரத்தைத் தொடங்குவதாக நேற்று அறிவித்தார் முதல்வர் பழனிசாமி. இதைத் தொடர்ந்து, இன்று காலை தனது வீட்டிலிருந்து புறப்பட்ட முதல்வர், கரிய பெருமாள் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு, தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். பூஜைக்குப் பிறகு பிரசார வாகனத்தில் ஏறிய முதல்வர், தனது பயணத்தைத் தொடங்கினார்.
இன்று முதல் தனது பரப்புரையைத் தொடங்குகிறார்!

தமிழகத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றி திறந்தவெளியில் அரசியல், மதக் கூட்டங்களை நடத்த இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது. இந்தநிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று முதல் தனது பரப்புரையைத் தொடங்குகிறார்.
எடப்பாடியில் தனது பரப்புரையைத் தொடங்கும் முதல்வரின் பிரசாரத்தில் அனல் பறக்கும் என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். முதல்வர் வேட்பாளராக முதன்முறையாக முதல்வர் பழனிசாமி தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.