அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

கையைப் பிடிச்சுக்கிட்டு விடவே மாட்டேங்கிறான்... ஏதோ சொல்ல வர்றான்..! - படுத்த படுக்கையான மகன்...

அறிவாசு
பிரீமியம் ஸ்டோரி
News
அறிவாசு

பரிதவிக்கும் பெற்றோர்... உதவுமா அரசு?

படிப்பு, விளையாட்டு என 19 வயது வரை ஒரு பட்டாம்பூச்சிபோலச் சுறுசுறுப்பாக இயங்கிவந்த மகன் அறிவாசு, கடந்த இரண்டு வருடங்களாகக் கை கால் அசைவற்று படுத்த படுக்கையாகக் கிடப்பதைக் கண்டு கலங்கி நிற்கிறார்கள் கூலித் தொழிலாளர்களான பெற்றோர்!

திருப்பூர் - கரூர் மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் கரியான்செட்டிவலசு கிராமத்திலுள்ள அறிவாசுவின் வீடு முழுக்க, அவர் கோ-கோ, ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழ்கள், கோப்பைகள் பரவிக்கிடக்கின்றன. அவற்றை அவ்வப்போது, எடுத்துக் காட்டி தங்கள் மகன் அறிவாசுவிடம் அந்தக் காலத்தை நினைவுபடுத்துகின்றனர் கூலித் தொழிலாளர்களான செல்வராஜும், செல்வியும். ஆனால், மகன் அறிவாசுவிடமிருந்து முனகல் சத்தம் மட்டுமே பதிலாக வருகிறது.

கையைப் பிடிச்சுக்கிட்டு விடவே மாட்டேங்கிறான்... ஏதோ சொல்ல வர்றான்..! - படுத்த படுக்கையான மகன்...

சிறுமூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் வெடித்ததால், சுயநினைவை இழந்த அறிவாசுவுக்கு அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லை. பேசவும், எழுந்து நடக்கவும் முடியாமல் இரண்டு ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். இயற்கை உபாதை, பசி என்று எந்த உணர்வையும் வெளிப்படுத்த முடியாத தன் மகனைக் குழந்தைபோல் கவனித்துவரும் தாய் செல்வியிடம் பேசினோம்.

‘‘நானும், என் வீட்டுக்காரரும் விவசாயக் கூலிதானுங்க. ஒரே மகன் அறிவாசுவையாச்சும் நல்லாப் படிக்க வெச்சு டாக்டராக்கணும்னு ஆசைப் பட்டோம். அவனும் படிப்பில் மட்டு மில்லாம, கோ-கோ, ஓட்டப்பந்தயம், கைப்பந்துன்னு விளையாட்டுகள்லயும் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துடுவான். கடந்த 2020, மே மாசம் 28-ம் தேதி, நாங்க வேலைக்குப் போயிட்டோம். வீட்டிலிருந்தவன் திடீர்னு மயக்கம் போட்டு பேச்சு மூச்சு இல்லாம கிடக்குறதாச் சொன்னாங்க. பதறியடிச்சு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனோம். மருத்துவர்கள் பரிசோதிச்சுட்டு, ‘அவனோட சிறுமூளைக்குப் போற ரத்தக்குழாய் வெடிச்சுருச்சு. கோடியில் ஒருத்தருக்கு இப்படி சின்ன வயசுலேயே இந்த வியாதி வரும். உடனே ஆபரேஷன் செய்யணும்’னு சொன்னாங்க.

அறிவாசு
அறிவாசு

வீட்லருந்த ஆடு, மாடு, வண்டி, நகைன்னு எல்லாத்தையும் வித்தும், சொந்தக்காரங்க, ஊர்க்காரங்க உதவியாலயும் ஆபரேஷனை முடிச்சோம். இனிமே, பிசியோதெரபி சிகிச்சை அளிச்சா மட்டும் போதும்னு சொல்லி வீட்டுக்கு அனுப்புனாங்க டாக்டருங்க. கடந்த ஒன்றரை வருஷமா வீட்டுல வெச்சுதான் சிகிச்சை குடுத்துட்டு வர்றோம். நடக்கவோ, கைகளை அசைக்கவோ, பேசவோ முடியாத நிலைமையில அவன் இருக்கான். இயற்கை உபாதைகளை வெளியேத்த உதவுறது, குளிப்பாட்டுறது, சாப்பாடு ஊட்டுறதுன்னு அவன் தூங்கும்போது கூடவே ஆள் இருக்கணும்கிறதால, எங்க ரெண்டு பேரால ஒழுங்கா வேலைக்குக்கூட போக முடியல.

அவனோட அப்பாவோட டி.வி.எஸ் 50 வண்டிச் சத்தத்தைக் கேட்டா மட்டும் தன்னோட உற்சாகத்தைச் சின்ன முனகலா வெளிப்படுத்துவான். இப்போ இடது கையைக் கொஞ்சம் அசைக் கிறான். என் கையைப் பிடிச்சுக்கிட்டு விடவே மாட்டேங்கிறான். மனசுல என்ன நினைக்கறான்னு தெரியல. ஆனா, ஏதோ சொல்ல வர்றான்கிறது மட்டும் புரியுது...’’ என்றவர், அதற்குமேல் பேச முடியாமல் விம்ம ஆரம்பித்துவிட்டார்.

கையைப் பிடிச்சுக்கிட்டு விடவே மாட்டேங்கிறான்... ஏதோ சொல்ல வர்றான்..! - படுத்த படுக்கையான மகன்...

தொடர்ந்து நம்மிடம் பேசிய அறிவாசுவின் தந்தை செல்வராஜ், ‘‘ஒரே மகன்கிறதால எங்க சக்திக்கு மீறி செலவழிச்சுட்டோம். நாங்க கஷ்டப்படுறதைப் பார்த்து கரியான்செட்டிவலசு, மூலனூர் கிராம மக்கள், சொந்தக்காரங்க, என் மனைவி வேலை பார்த்த தோட்டத்துக்காரங்க, அறிவாசு படிச்ச பள்ளி நிர்வாகம், அவனோட ஃபிரெண்ட்ஸ்னு முகம் தெரிஞ்ச, தெரியாத பலர் செஞ்ச உதவியாலதான் அவன் இப்ப உயிரோடவே இருக்கான். அவன் ஆஸ்பத்திரியிலருந்து வீட்டுக்கு வந்த முதல் மூணு மாசம், தினமும் 500 ரூபா கொடுத்து பிசியோதெரபி சிகிச்சை கொடுத்தோம். அப்புறம் கையில காசு இல்லாததால காலை, மாலையில நாங்களே அவனோட கை கால்களை அசைச்சுவிடுறோம். மனசு முழுக்க பிள்ளைய எப்பிடியாவது காப்பாத்தணும்ங்கிற வைராக்கியம் இருக்கு. ஆனா, ரத்தம் உறையறதைத் தடுக்க தினமும் போடவேண்டிய ஹெஃபாரின் ஊசி போடக்கூட கையில காசில்ல... இதுல எப்படிங்க மாசா மாசம் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போக முடியும்?

தொடர்ந்து, பிசியோதெரபி சிகிச்சை அளிச்சா, என் மகன் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்ப வாய்ப்பிருக்குன்னு மருத்துவர்கள் சொல்றாங்க. `மக்களைத் தேடி மருத்துவம்’கிற மகத்தான திட்டத்தைக் கொண்டுவந்த நம்ம முதல்வர் ஐயா, என் பையனை மாதிரி ஆளுங்களுக்கு வீட்டுக்கே வந்து சிகிச்சை தரவும் ஏற்பாடு பண்ணுனா ரொம்பப் புண்ணியமா இருக்கும்’’ என்றார் கண்ணீர் மல்க.

முதல்வரும், மருத்துவத்துறை அமைச்சரும் மனதுவைப்பார்களா?