Published:Updated:

‘நச்சுக்காற்றில் தொலைந்த வாழ்க்கை... ஓய்வில்லாமல் ஒலித்த குரல்!’- அப்துல் ஜப்பாருக்கு பத்ம ஸ்ரீ

அப்துல் ஜப்பார்
அப்துல் ஜப்பார்

போபால் மக்களின் துயர் துடைப்பதற்காக 35 வருடம் போராடிய அப்துல் ஜப்பாருக்கு சமூகசேவைக்கான பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது.

இந்திய வரலாற்றின் இருண்ட பக்கங்களில் டிசம்பர்-2, 1984 என தேதியிட்டு அமர்ந்துள்ளது போபால் விஷவாயு சம்பவம். சுவாசிக்கும் காற்றில் பரவிய நஞ்சு ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. ஆயிரக்கணக்கானவர்களின் இரவுகள் விடியவே இல்லை. நரகத்தின் வேதனையை அனுபவித்த மக்கள் தங்களது உயிர்களை காப்பாற்றிக்கொள்ள ஓடியது தான் துயரத்தின் உச்சம். யூனியன் கார்பைட் என்ற நிறுவனத்தில் இருந்து வெளியேறிய ‘மீதைல் ஐசோ சயனடைடு’ (Methyl IsoCyante ) என்ற விஷவாயு தான் இந்த உயிர்களை பலி வாங்கியது.

போபால் பேரழிவு
போபால் பேரழிவு

அப்துல் ஜப்பார் (Abdul Jabbar)என்ற 27 வயது இளைஞன் இந்த நச்சுக்காற்றின் கொடுமையில் இருந்து தன் தாயை காப்பாற்றிவிட வேண்டும் என 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜேந்திரா நகர் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு விரைந்தார். ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. தாய் மற்றும் சகோதரன் இறந்துவிட்டனர். அப்துல் ஜப்பாரின் 50 சதவிகித பார்வையை நச்சுவாயு பறித்துக்கொண்டது. அவர் சுவாசித்த நச்சு வாயு நாளடையில் கடுமையான நுரையிரல் பிரச்னையை ஏற்படுத்தியது.

போபால் திரும்பிய அப்துல் ஜப்பார் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எதிரான தன்னுடைய போராட்டத்தை முன்னெடுத்தார். 1987-ம் ஆண்டு போபால் கேஸ் பீடிட் மஹிலா உத்யோக் சங்காதன் ( Bhopal Gas Peedit Mahila Udyog Sangthan) என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் போபால் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்தார்.

போபாலில் மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்க டெல்லியிலும் போராட்டத்தை முன்னெடுத்தார். நகரத்தில் உள்ள 5000 பெண்களுக்கு தொழில் பயிற்சி அளித்தார். இவரது தொடர் சட்ட போராட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உச்சநீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. கடுமையான நோய்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்த போதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக தன் இறுதி மூச்சு வரை தொடரந்து உழைத்துக்கொண்டே இருந்தார் ஜப்பார். கடந்தாண்டு நவம்பர் 14-ம் தேதி மாரடைப்பால் அப்துல் ஜப்பார் உயிரிழந்தார்.

அப்துல் ஜப்பார் மனைவி
அப்துல் ஜப்பார் மனைவி
ANI

போபால் மக்களின் துயர் துடைப்பதற்காக 35 வருடம் போராடிய அப்துல் ஜப்பாருக்கு சமூகசேவைக்கான பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அப்துல் ஜப்பாரின் மனைவி, ஷயாரா பானோ ‘ இந்த செய்தி எனக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது அதேநேரத்தில் சோகமாகவும் இருக்கிறது. அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்த மரியாதையை ஒன்றாகப் பெற்றிருப்போம்” என கண்ணீர் மல்க கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு