Published:Updated:

`தமிழ், சம்ஸ்கிருத மந்திரங்கள்!' - யாகசாலை பூஜையுடன் தொடங்கிய தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா #NowAtVikatan

பெரிய கோயில் குடமுழுக்கு விழா
பெரிய கோயில் குடமுழுக்கு விழா ( ம.அரவிந்த் )

01.02.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

01 Feb 2020 7 AM

இன்று மத்திய பொது பட்ஜெட்!

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இன்று, 2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று காலை நாடாளுமன்றத்தில், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது, நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2 -வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது, மோசமான பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டுவருகிறது. ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதமாகச் சரிந் துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த மார்ச் மாதத்துடன் முடிவடையும் நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சியை 4.8 சதவிகிதமாகக் குறைத்து கணித்துள்ளது. இப்படி பொருளாதார ரீதியாகப் பல சவால்களை நாடு எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், மத்திய அரசின் பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.

01 Feb 2020 7 AM

தாயகம் திரும்பிய இந்தியர்கள்!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள வுஹான் மாநிலத்திலிருந்து, முதல் கட்டமாக 324 இந்தியர்களுடன் புறப்பட்ட சிறப்பு ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது. சீனாவிலிருந்து திரும்பிய 324 நபர்களை 14 நாள்கள் முகாமில் வைத்து கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்புக்குப் பிறகு, அவர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

`கொரோனா வைரஸ்.. முடக்கப்பட்ட நகரம்.. வுகானின் திடீர் அமைதி!’- ஒரு இளம்பெண்ணின் டைரிக் குறிப்புகள்
01 Feb 2020 10 AM

மேலும் ஒருவர் கைது!

களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷேக் தாவூத் என்பவரை ராமநாதபுரத்தில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

01 Feb 2020 5 PM

டெல்லி ஷாஹீன் பாக் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு!

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது. இந்தநிலையில், போராட்டத்தில் இளைஞர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பேசிய டெல்லி டி.சி.பி சின்மய் பிஸ்வால், ``ஷாஹீன் பாக் போராட்டத்தில் நுழைந்த இளைஞர் ஒருவர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை'' என்றார். துப்பாக்கியால் சுட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் கபில் குஜ்ஜார் என்று தெரியவந்தது.

01 Feb 2020 6 PM

9 ஆண்டுகளாகவே டி.என்.பி.எஸ்.சி முறைகேடு நடக்கிறது!

‘டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலிருந்தே அதாவது கடந்த 9 ஆண்டுகளாகவே நடந்து வந்துள்ளது என்பது தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அதிக மாணவர்கள் சைதை துரைசாமியின் பயிற்சி மையங்களைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. அதே போன்ற முறைகேடு தற்போதும் நடந்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தரகர்களின் புகலிடமாக மாறிவிட்டது. இதில் முறையான விசாரணை நடத்த வேண்டும்’ என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

01 Feb 2020 9 PM

`நாட்டு மக்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பட்ஜெட்!' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Photo: vikatan

மத்திய பட்ஜெட் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், `` ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு தமிழகம் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். விளைநிலங்களில் சூரிய மின் உற்பத்தி செய்வதற்கான முயற்சி வரவேற்கத்தக்கது. விவசாயம், பாசன வசதி, ஊரக வளர்ச்சி மேம்பாடு ஆகியவற்றை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. கீழடியையும் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும்.

தனிநபர் வருமான வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது தனிநபர்களுக்கு நிவாரணம் அளித்து பொருள் நுகர்வை உயர்த்தும் என எதிர்பார்க்கிறேன்'' என்று வரவேற்புத் தெரிவித்திருக்கிறார்.

01 Feb 2020 9 PM

`அர்த்தமுள்ள திட்டங்கள் ஏதுமில்லை!' - ஸ்டாலின்

ஸ்டாலின்
ஸ்டாலின்

பட்ஜெட் குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``பா.ஜ.க விரும்பும் கலாசாரத் திணிப்பைச் செய்யும் பட்ஜெட்டாக இருப்பது வேதனை அளிக்கிறது. பட்ஜெட்டில் அர்த்தமுள்ள திட்டங்கள் எதையும் காணமுடியவில்லை. கீழடி ஆய்வுகளின் முடிவுகளையும் மாற்றி வரலாற்றைத் திருத்தவும் திரிக்கவும் முயல்வதைத் தமிழகம் சகித்துக் கொள்ளாது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு தவிர தமிழகத்துக்கு எந்த அறிவிப்பும் தமிழகத்துக்குக் கிடைக்கவில்லை'' என்று தெரிவித்திருக்கிறார்.

01 Feb 2020 8 PM

யாகசாலை பூஜையுடன் தொடங்கிய தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா இன்று மாலை முதலாம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக கோயிலில் விமான கோபுரம், கேரளானந்தன், ராஜராஜன் கோபுரங்கள், விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், அம்பாள், சண்டிகேஸ்வரர், கரூவூரார் சன்னதி ஆகியவை திருப்பணிகள் செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த டிசம்பர்2-ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு,கோயிலில் உள்ள 12 விநாயகர் சிலைகள், 8 முருகன் சிலைகள், 252 சிவலிங்கத் திருமேனிகள், அம்பாள், ராகு, இந்திரன், ஈசானியன், நடராஜர் என 338 சுவாமி விக்ரகங்களுக்கு மா காப்பு நடத்தி, அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி தொடங்கியது. இதன் நிறைவாக இன்று பெருவுடையாருக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. இதற்காக குன்றக்குடி அருகே உள்ள நேமம் கிராமத்திலிருந்து அரக்கு, குங்குலியம் உள்ளிட்ட 8 வகையான மருந்துப் பொருட்களை கொண்ட 2.5 டன் எடையுள்ள மருந்து பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து, கங்கை, யமுனை, காவிரி உள்ள புனித நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை உற்சவ மண்டபத்திலிருந்து சிவாச்சாரியார்கள் கடங்களில் மங்களவாத்தியம் முழுங்க காலை 11மணியளவில் யாகசாலை மண்டபத்துக்கு எடுத்து வந்தனர். மேலும், கும்ப அலங்காரம்,தேவதா கலா கர்ஷணம் ஆகிய பூஜைகள் நடைபெற்றது.

பின்னர், மாலை யாகசாலை மண்டபத்தில் சுவாமி, அம்பாள், 41 உற்சவ மூர்த்திகள், 8 பலிபீடம், 10 நந்தி, 22 கோயில் கலசம் என 405 சுவாமிகளுக்கும் உரிய 705 கடங்களை வேதிகையில் வைத்து வழிபாடுகளைத் தொடங்கினர். இதில், இஷ்டதானம், தசதானம், பஞ்சதானம், யாத்ராதானம், யாகசாலை பிரவேசமும் அதனைத் தொடர்ந்து முதலாம் கால யாகசாலை பூஜையுன் குடமுழுக்கு விழா தொடங்கியது. பின்னர் பூர்ணாஹூதியும் தீபாரதனையும் நடைபெற்றது. இதற்காக 110 குண்டங்களில் 300 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையில் ஈடுபட்டனர். முதலில் தமிழில் மந்திரங்கள் சொல்லப்பட்டு, அதன் பின்னர் சம்ஸ்கிருதத்தில் பூஜைகள் செய்தனர்.

- கே.குணசீலன்

படங்கள்- ம.அரவிந்த்

அடுத்த கட்டுரைக்கு