Published:Updated:

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து - லைக்கா நிறுவனம் மீது வழக்குப் பதிவு? #NowAtVikatan

படப்பிடிப்பு விபத்து
படப்பிடிப்பு விபத்து

20.2.2020 | இன்றைய நிகழ்வுகளின் முக்கிய தொகுப்பு..!

20 Feb 2020 11 AM

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்துதல் மசோதா!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக மத்திய அரசு மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைக்க, தமிழக விவசாயிகளும் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், இதைத் தமிழக சட்டப்பேரவையில் சட்டமாக இயற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகளும் விவசாயிகளும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்துதல் மசோதாவை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

20 Feb 2020 1 PM

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதா தக்கல்!

சட்டமன்ற கூட்டத்தின் இறுதி நாளான இன்று, காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட மசோதாவைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவில், ‘தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகியவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாகக் கொண்டுவரும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்த முடியாது.

அதேபோல் துத்தநாக உருக்காலை, தோல் பதனிடும் ஆலைகளையும் புதிதாகத் தொடங்க அனுமதியில்லை. சட்டம் கொண்டுவரப்பட்ட தேதிக்கு முன்னதாக அங்குச் செயல்படும் திட்டங்களுக்கு எந்த பதிப்பும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயியாக இதைத் தாக்கல் செய்வதில் பெருமை கொள்வதாக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் இதற்காக முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

20 Feb 2020 4 PM

விபத்து குறித்து கமல்ஹாசன்!

சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் இருக்கும் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ``என் குடும்பத்தில் நடந்த விபத்தாக இதைக் கருதுகிறேன். 100 கோடி, 200 கோடி என மார்தட்டிக்கொள்ளும் நாம் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு தர முடியல்லை. சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லை என்பது அவமானத்திற்குரிய ஒன்றாகும்.

இதுபோன்ற விபத்துகள் இனி நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் இது. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியன் 2 படபிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிருடன் இல்லை. நூலிழையில்தான் நானும் உயிர் பிழைத்துள்ளேன். நான்கு நொடிகளுக்கு முன்புவரை நான் அந்த இடத்தில்தான் நின்றுகொண்டிருந்தேன். விபத்தில் இறந்த மூவருக்கும் தலா ஒரு கோடி கொடுக்க உள்ளேன்" என தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

20 Feb 2020 9 PM

லைக்கா நிறுவனம் மீது வழக்குப் பதிவு?

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக லைக்கா தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் இணை இயக்குனர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நசரத்பேட்டை போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் கிரேன் உரிமையாளர், புரடெக்ஷன் மேனேஜர் மீதும் 4 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு