கொரோனா அச்சம்: `டி20 உலகக்கோப்பை தொடர் ஒத்திவைப்பு!’ - ஐசிசி #NowAtVikatan
20.7.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
டி20 உலகக்கோப்பை தொடர் ஒத்திவைப்பு!

ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு அக்டோபரில் நடைபெறவிருந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 2023 -ம் ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து:

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்திருக்கிறது. உலகம் முழுவதும் தடுப்பு மருந்து பரிசோதனைகள் நடைபெற்று வரும் சூழலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1,077 பேருக்கு இந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாகவும் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பதாகவும் சோதனையில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 காவலர்களுக்கு சி.பி.ஐ காவல்

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாமதுரை, செல்லதுரை, வெயில் முத்து ஆகிய 3 காவலர்களும் சி.பி.ஐ காவலில் செல்ல சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், மூன்று காவலர்களுக்கும் வரும் 23-ம் தேதி வரை சி.பி.ஐ காவலுக்கு அனுமதி அளித்துள்ளது நீதிமன்றம். அதைத் தொடர்ந்து மூன்று காவலர்களையும் சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். வரும் 23-ம் தேதிக்கு பின்னர் இவர்கள் மூவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
கீழடியில் ரூ.12 கோடியில் அகழ்வைப்பகம்!
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை வைக்க அங்கு ரூ.12 கோடி மதிப்பீட்டில் அகழ்வைப்பகம் கட்டப்படுகிறது. இதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
கீழடி படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5 கட்ட அகழாய்வுகள் முடிந்துள்ள நிலையில், 6-ம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், 5-ம் கட்ட அகழாய்வுப் பணியின்போது கிடைத்த பொருள்களை வைப்பதற்கு கீழடியில் ரூ.12 கோடியில் அகழ்வைப்பகம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, இன்று அடிக்கல் நாட்டி பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
வெறிச்சோடிய ராமேஸ்வரம்!

கொரோனா பரவல் எதிரொலி மற்றும் ஊரடங்கு காரணமாக ஆடி அமாவாசை நாளான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடத் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடற்கரைக்கு செல்வதைத் தடுக்க பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் இந்நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் ராமேஸ்வரம் கோயில் ரத வீதி மற்றும் அக்னி தீர்த்தக் கடற்கரை ஆகிய பகுதிகள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.