CoronaVirus: தமிழகத்தில் 3.61 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 5,986 பேருக்குத் தொற்று! #NowAtVikatan

20-08-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!
தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்குத் தொற்று!
தமிழகத்தில் இன்று மட்டும் 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,742 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை, 3,01,913 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 116 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 6,239 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மேலும் 1,177 பேருக்குத் தொற்று!
சென்னையில் மட்டும் இன்று 1,177 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,20,267 ஆக அதிகரித்துள்ளது.
`தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது!’

`விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பொது இடங்களில் சிலை வைக்க கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது’ என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும், இந்த கொரோனா காலத்தில் பல்வேறு கோயில் விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக இந்து முன்னணி அமைப்பு இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தெரிகிறது. முன்னதாக இந்து முன்னணியின் முடிவை பா.ஜ.க பின்பற்றும் என் தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.
மோடியின் கடிதம்...தோனி நன்றி!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தோனிக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். தற்போது தோனி அந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி, `` கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத சக்தி தோனி. தோனியின் ஓய்வு அறிவிப்பால் 130 கோடி இந்தியர்களும் ஏமாற்றம் அடைந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார். 2011 உலகக் கோப்பை தொடரில் இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து பெற்றி பெற்ற தருணத்தை என்று மறக்க முடியாது எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார். பல கோடி இளைஞர்களுக்கு தோனி ஒரு உத்வேகம் என பாராட்டிய மோடிக்கு தோனி தனது நன்றியை தெரிவித்திருக்கிறார்.
`அ.தி.மு.க.வினரை ஹெச்.ராஜா உரசிப் பார்க்கக் கூடாது!’

சென்னையில் இன்று பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், 'தமிழக அரசு ஆண்மையான அரசு. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டின் முன் கடந்த காலத்தில் காத்திருந்தது யார் என அனைவருக்கும் தெரியும். எனவே அ.தி.மு.கவினரை ஹெச்.ராஜா உரசிப் பார்க்கக் கூடாது' என்று கூறினார். மேலும், `ஹெச்.ராஜா சொன்ன சொற்கள், அவருக்குத்தான் பொருந்தும். பொது வெளியில் ஒரு கருத்தை தெரிவித்து விட்டு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பவர்” என்றும் விமர்சித்தார்.
`மன்னிப்புக் கேட்க மாட்டேன்!’ - பிரசாந்த் பூஷண்
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வழக்கில் உச்ச நீதிமன்றம் புதிய முடிவெடுத்துள்ளது. அதன்படி, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரசாந்த் பூஷண், தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனு தொடர்பான விசாரணை முடிந்து உத்தரவு வரும் வரை அவரது தண்டனை அமலுக்கு வராது. `இன்று தண்டனை விவரங்கள் வெளியாகும்’ எனக் கூறப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது.

இதனிடையே பிரசாந்த் பூஷண், `நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனையை ஏற்கத் தயார். மன்னிப்புக் கேட்க மாட்டேன். ஜனநாயகத்தின் அடிப்படை ஆதாரத்தைக் காப்பாற்ற விமர்சனம் என்பது அடிப்படை கடமை’ என்கிறார்,
இந்து முன்னணி நிலைப்பாட்டை பா.ஜ.க பின்பற்றும்!

``விநாயகர் சிலை ஊர்வலத்துக்குத் தமிழக அரசு அனுமதி மறுப்பது வருத்தமளிக்கிறது. டாஸ்மாக் கடையைத் திறக்க அனுமதி தந்த தமிழக அரசு, விநாயகர் சிலையைவைக்க அனுமதி மறுப்பது ஏன்?” என பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும், `விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில், இந்து முன்னணி நிலைப்பாட்டை பா.ஜ.க பின்பற்றும்’ எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மாணவர்களுக்கு உலர் உணவு திட்டம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலத்தில் இயல்புநிலை திரும்பும்வரை உலர் உணவுத் திட்டத்தை தொடரவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டத்துக்குத் தடை!’
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,`22.8.2020 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டும், கொரோனாநோய்த் தொற்றுப் பரவுதலைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும் பொதுமக்கள் நலன்கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாநோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 69,652 பேருக்கு தொற்று

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரரின் மொத்த எண்ணிக்கை 28,36,926 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 69,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 977 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53,866 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,96,665 ஆகவும் உயர்ந்துள்ளது.