`நாட்டு மக்களிடம் ஒரு தகவலுடன் மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறேன்!’- பிரதமர் மோடி #NowAtVikatan

20-10-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!
நாட்டு மக்களிடம் மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி உரை!
இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் ஒரு தகவலுடன் உரையாற்ற இருப்பதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா பரவலால் ஊரடங்கு மார்ச் 25-ம் தேதி முதல் அமலில் இருக்கும் நிலையில், அதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பண்டிகை காலம் அல்லது கொரோனா தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி பேசலாம் என்று கூறப்படுகிறது.
சென்னையில் கனமழை!
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்துவருகிறது. இன்று காலை முதலே சென்னையில் இருள் சூழ்ந்த சூழலே காணப்பட்ட நிலையில், நல்ல மழையும் பெய்துவருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருவதால், இருசக்கர வாகனங்களில் பணிக்குச் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆங்காங்கே சாலையிலும் தண்ணிர் தேங்கியிருக்கிறது. சென்னை மட்டுமல்லாமல், மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது.

வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்னும் 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தெலங்கானா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.