Published:Updated:

நிலுவையில் ரூ.200 கோடி இழப்பீட்டுத் தொகை!

சுண்ணாம்புச் சுரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
சுண்ணாம்புச் சுரங்கம்

இன்னும் தராத ஏ.சி.சி சிமென்ட்... துணைபோகிறார்களா அரசு அதிகாரிகள்?

ஏ.சி.சி சிமென்ட்ஸ் நிறுவனம், 1934-ம் ஆண்டிலிருந்து கோவையில் இயங்கிவருகிறது. மதுக்கரை, எட்டிமடை, குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அரசு நிலங்களில் கனிமவளங்களை எடுத்துவருகிறது. எடுக்கும் கனிம வளங்களுக்கேற்ப ஒரு தொகை கொடுப்பதுடன், ஒவ்வோர் ஆண்டும் அரசுக்கு இழப்பீட்டுத்தொகையையும் ஏ.சி.சி வழங்க வேண்டும். இந்த நிலையில்தான், `1997-ம் ஆண்டிலிருந்து ஏ.சி.சி நிறுவனம் அரசுக்கு இழப்பீட்டுத்

தொகையை வழங்கவில்லை’ என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. இப்படி, ஏ.சி.சி நிறுவனம் கட்டாமல் இருக்கும் இழப்பீட்டுத்தொகை, 200 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது என்ற அதிர்ச்சித் தகவலை, ‘இந்திய சாட்சிச் சட்டம்’ மூலம் வெளிகொண்டுவந்துள்ளார் கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மதுக்கரையில் ஏ.சி.சி நிறுவனம் கனிமவளங் களை எடுத்துவரும் சுரங்கம் அருகே சென்றோம். விண்ணைப் பிளக்கும் வெடிச்சத்தத்துக்கு மத்தியில், கனிமவளங்களை எடுத்துக் கொண்டிருந்தது ஏ.சி.சி நிறுவனம். இன்னும் சில ஆண்டுகள் தோண்டினால், அங்கு மலை இருந்ததற்கான சுவடே இருக்காது என்ற வகையில் பரிதாபமாகக் காட்சியளித்தது அந்த இடம்.

நம்மிடம் பேசிய டேனியல் ஜேசுதாஸ், ‘‘புவியியல் மற்றும் சுரங்கத் துறையிடம் இந்திய சாட்சிச் சட்டம் மூலம் ‘ஏ.சி.சி நிறுவனம் என்ன தொகைக்கு கனிமவளங்களை எடுக்கிறது, அதற்கு எவ்வளவு இழப்பீடு கொடுக்கிறது?’ என்று கேட்டேன். அப்போதுதான், 1997 முதல் ஏ.சி.சி நிறுவனம் இழப்பீட்டுத்தொகையே கட்டவில்லை எனத் தெரியவந்தது. 2013-ம் ஆண்டு அந்தத் தொகையைக் கேட்டு அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், ‘1997 முதல் 2013 வரை 73.45 கோடி ரூபாய் தர வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு ஏ.சி.சி நிறுவனம் ஐந்து கோடி ரூபாய் மட்டும் செலுத்திவிட்டு, மேற்கொண்டு இழப்பீட்டுத்தொகை கட்டாமல் இருப்பதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் ஏ.சி.சி நிறுவனத்துக்குச் சாதகமாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. ஆனால், மேல்முறையீடு செய்து நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளோ, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர்.

ஏ.சி.சி. சிமென்ட்ஸ் நிறுவனம், டேனியல் ஜேசுதாஸ்
ஏ.சி.சி. சிமென்ட்ஸ் நிறுவனம், டேனியல் ஜேசுதாஸ்

ஒரு டன் சுண்ணாம்புக்கல்லை, அரசு 80 ரூபாய்க்கு, ஏ.சி.சி-க்குத் தருகிறது. ஆனால், சந்தையில் ஒரு டன் சுண்ணாம்பு பவுடர் 3,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சந்தை நிலவரத்தைக்கூட தெரிந்துகொள்ளாமல்

ஏ.சி.சி-க்கு அடிமாட்டு விலையை அரசு நிர்ணயித்துள்ளது. அதேபோல, 2014 முதல் 2019 வரை 132 கோடி ரூபாய் இழப்பீட்டுத்தொகையை ஏ.சி.சி நிறுவனம் செலுத்த வேண்டும். ஆக, மொத்தம் 205 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அரசுக்கு ஏ.சி.சி செலுத்த வேண்டும். இதனால் அரசுக்கு பெரியளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எந்தத் திட்டத்தைக் கேட்டாலும் நிதி இல்லை என்று சொல்லும் தமிழக அரசு, இவ்வளவு பெரிய தொகையைப் பெறுவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஏ.சி.சி நிறுவனத்தால், இந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப் படுகிறது; வனவிலங்குகளுக்கும் நெருக்கடி அதிகரித்துவருகிறது. உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பைத் தருவதாகச் சொன்ன

ஏ.சி.சி நிறுவனத்தில், பிற மாநிலங்களைச் சேர்ந்த வர்கள்தான் அதிகளவில் பணியாற்றிவருகின்றனர். எனவே, அந்த நிறுவனத்துக்கு சீல் வைத்து, இருக்கும் கனிமவளத்தையாவது அரசு முறையாகப் பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்’’ என்றார்.

‘‘இந்த இடம், வனப்பகுதிக்கு மிக அருகில் இருக்கிறது. வெடிச்சத்தம், நச்சுப்புகை போன்ற நெருக்கடி காரணமாக, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்திலிருந்து வெளியில் வருகின்றன. அப்படி வரும் யானை களில் பல, ரயிலில் அடிபட்டு இறந்துள்ளன. விதிமுறைகள் எங்கும் கடைப்பிடிப்பதே இல்லை. புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரி ஒருவரின் முன்னிலையில் தான் கனிமவளங்களை எடுக்க வேண்டும். அதிகாரியும் களத்துக்கு வருகிறார். ஆனால், ஏ.சி.சி நிறுவனம் சொல்லும் இடங்களில் கையெழுத்து போட்டுவிட்டு, அங்கு உள்ள கெஸ்ட் ஹவுஸில் படுத்துத் தூங்கிவிடுகிறார். அவருக்கு அனைத்து வசதியும் ஏ.சி.சி செய்துவிடும். இதனால்தான், அதிகாரிகள் தரப்பிலும் வழக்கில் மேல்முறையீடு செய்யவில்லை. ஏ.சி.சி நிறுவனத்தின்மீது எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுப்பதில்லை’’ என்கின்றனர் இதன் உள்விவரம் அறிந்தவர்கள்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்குச் சென்றோம். துணை இயக்குநரை பணியிட மாற்றம் செய்துவிட்டதால், அங்கு இருந்த அதிகாரிகளிடம் நம் கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘1997 முதல் 2013 வரை கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத்தொகைக்கு அவர்கள் நீதிமன்றம் மூலம் தடை வாங்கியுள்ளனர். அந்த வழக்கிலும் நாம் எதிர்வாதம் செய்திருக்கிறோம். மேலும், 2014 முதல் தற்போது வரை வழங்க வேண்டிய 132 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம். 20 நாள்களுக்குள் அந்தப் பணத்தை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். இருப்பினும், ஏ.சி.சி மீது நடவடிக்கை எடுப்பதற்காக, எங்கள் மேலிடத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம். எங்கள் பணியை நாங்கள் சரியாகத்தான் செய்துகொண்டிருக்கிறோம்’’ என்றனர்.

நிலுவையில் ரூ.200 கோடி இழப்பீட்டுத் தொகை!

இதுதொடர்பாக விளக்கம் கேட்க ஏ.சி.சி நிறுவனத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் துறையைச் சேர்ந்த டேனியல் என்பவரைத் தொடர்புகொண்டோம். ‘‘இதுதொடர்பாக ஹெச்.ஆர்-தான் பேச வேண்டும்’’ என்றார்.

ஏ.சி.சி கோவை ஹெச்.ஆர் மேனேஜர் பத்மாவதியைத் தொடர்பு கொண்டோம். அவரும், “பத்து நிமிடங்களில் அழைக் கிறேன்’’ என்று அழைப்பைத் தவிர்த்துக் கொண்டே இருந்தார்.

பிளான்ட் இயக்குநர் அமிதவ் சிங் என்பவரைத் தொடர்பு கொண்டோம். அவர், `‘இது குறித்து போனில் பேச முடியாது’’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

மீண்டும் ஹெ.ச்.ஆர் பத்மாவதியைத் தொடர்பு கொண்டோம். அவர், ‘‘நேரில் வந்தால், சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் வாங்கித் தருகிறேன்’’ என்று கூறினார். மதுக்கரையில் உள்ள ஏ.சி.சி அலுவலகத்துக்குச் சென்றோம். சிறிது நேரம் நம்மைக் காத்திருக்கச் சொன்ன பத்மாவதி, அங்கு உள்ள மற்ற அதிகாரிகளை நேரிலும் போனிலும் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். பிறகு, ‘‘சார், இதுகுறித்து இங்கு நாங்கள் யாரும் பேச முடியாது. எங்களுக்கு அதிகாரமில்லை. மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பேசி, விரைவில் பதில் வாங்கித் தருகிறேன்’’ என்றார்.

ஆனால், ஏ.சி.சி நிறுவனத்திடமிருந்தோ, பத்மாவதியிடமிருந்தோ எந்தப் பதிலும் வரவில்லை. நாம் மீண்டும் தொடர்புகொண்ட போது, நம் அழைப்பை அவர்கள் ஏற்கவுமில்லை. பதில் கொடுத்தால், பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.