
நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பில் கூடுதல் பரபரப்பைக் கிளப்பியது தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டு.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விடிய விடிய நடந்த இந்த ரெய்டில், 10 லட்சம் ரூபாய் ரொக்கமும் பல்வேறு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தத் தொகுதியில் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. இந்தியாவிலேயே தேர்தல் ரத்து செய்யப்பட்ட ஒரே தொகுதி வேலூர்தான். பின்னர் நடந்த தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தைவிட 8,141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டுவந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 2019 டிசம்பரில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

`புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்யாமல் தேர்தலை நடத்தக்கூடாது' என தி.மு.க உச்ச நீதிமன்றத்தை நாடியது. அந்த மாவட்டங்களில் மொத்தமாகவும், மற்ற மாவட்டங்களில் நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் தேர்தல் இல்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மக்களவைத் தேர்தலையொட்டி, நாடுமுழுவதும் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாகப் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திவந்தனர்.

அந்தவகையில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமாக நாடு முழுவதும் உள்ள 70 இடங்களில் ஏப்ரல் 30-ம் தேதி சோதனை நடத்தினர். ஐந்து நாள்கள் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத 595 கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரிச் சீட்டுகள், 619 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள், 5,80,00,000 ரூபாய் ரொக்கம் மற்றும் 24,57,00,000 ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.
`இந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியைக் கற்பிக்க வேண்டும்' என்கிற புதிய கல்விக்கொள்கை அறிக்கை;

நாடுமுழுவதும் கல்லூரிகளில் இந்திப் பாடம் எனும் பல்கலைக்கழக மானியக்குழுவின் சுற்றறிக்கை, ரயில்வே போட்டித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்த வேண்டாம் என ரயில்வே அறிவிப்பு; ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கான சுற்றறிக்கைகளை இந்தியில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்ற உத்தரவு ஆகிய இந்தித்திணிப்பு நடவடிக்கைகளை எதிர்த்துத் தமிழகம் எழுப்பிய குரல் இந்தியா முழுவதும் எதிரொலித்தது.
`ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனம் பறிமுதல்; லைசென்ஸை ரத்து செய்யலாம்’ என அதிரடி உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். போக்குவரத்துக் காவல்துறையும் தன் பங்குக்குக் கெடுபிடி காட்டியது. மறுபுறம், ‘`புதிய இருசக்கர வாகனம் விற்கும்போது, இரண்டு ஹெல்மெட் இலவசமாக வழங்க வேண்டும்’’ என்று வாகன டீலர்களுக்கு உத்தரவிட்டது தமிழக அரசு.

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதங்களும் அதிகப்படு த்தப்பட்டன. பணப்பரிமாற்றம் இல்லாமல், மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது ஆறுதலான விஷயம்.
நிர்வாக வசதிக்காகப் பெரிய மாவட்டங்களைப் பிரித்துப் புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியில் இந்தாண்டு தமிழக அரசு மிகத் தீவிரமாக இறங்கியது.

கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில் தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், இந்த ஐந்து புது மாவட்டங்களுடன் வேலூர், காஞ்சிபுரம், நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஆன்மிக நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் அனந்த சரஸ் குளத்தில் உள்ள அத்திவரதர் சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுத்து ஒரு மண்டலகாலம் ஆராதனைகள் செய்வது வழக்கம்.

இதற்குமுன்பு 1979-ம் ஆண்டு இந்த வைபவம் நடைபெற்றது. அதன்பின் 2019 ஜூலை மாதம் இந்த வைபவம் நடந்தேறியது. இதையொட்டி 48 நாள்கள் காஞ்சிபுர நகரம் பரபரப்புடன் காணப்பட்டது. ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்களும் குடியரசுத்தலைவர், ஆளுநர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் தரிசனம் செய்தனர். வைபவத்தின் இடைப்பட்ட நாள்களில் இதையொட்டி ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன. அனைத்தையும் கடந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து பக்திப்பரவசம் அடைந்தனர்.
`இதெல்லாம் சாத்தியமா' என்றே எல்லோரும் நினைத்திருக்க, ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக்கிற்குத் தடைவிதித்தது தமிழக அரசு. பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்பவர்களுக்குக் கடுமையான அபாரதங்களும் விதிக்கப்பட்டன.

ஆரம்பத்தில் மக்கள் கொஞ்சம் போராடினாலும் போகப்போக புதிய முறைகளுக்குத் துணிப்பையையும், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக்கையும் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனாலும் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் அகன்றுவிட்டது என்று சொல்லமுடியாது. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பிளாஸ்டிக் ஒழிப்பு சாத்தியமில்லை.
சென்னை ஐஐடி-யில் படித்துக்கொண்டிருந்த கேரள மாணவி ஃபாத்திமாவின் தற்கொலை இந்தியாவையே உலுக்கியது. தன் தற்கொலைக்குக் காரணம் மூன்று பேராசிரியர்களே என்று மரணத்துக்கு முன்பு பதிவு செய்திருந்தார் ஃபாத்திமா.

`என் மகளைத் தற்கொலைக்குத் தூண்டியவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும்வரை போராடுவேன்' என்று பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் நீதிமன்றம் வரை சென்றார். தற்போது இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.
பள்ளி மாணவர்கள் சாதிக்கயிறு அணிகிறார்கள் என்கிற செய்திகள் தொடர்ந்து கிளம்ப, பள்ளிகளை ஆய்வுசெய்ய கல்வித்துறை உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இதுபோல மாணவர்கள் சாதிக்கயிறுகள் கட்டியிருந்தால் அதை வெட்டவும், அந்த மாணவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் பள்ளிகளுக்கு உத்தரவிட்டது பள்ளிக்கல்வித்துறை.

ஆனால் ``மாணவர்கள் கையில் கட்டும் மதக்கயிறுகளை வெட்டுவதா?’’ என்று இந்து மத அமைப்புகளும், ராமகோபாலனும் கண்டனம் தெரிவித்தனர். ஹெச்.ராஜாவும் அவர் பங்குக்கு இதை எதிர்த்துக் குரல் கொடுத்தார். ஆரம்பத்தில் கொஞ்சம் குழப்பமாகக் கருத்து தெரிவித்த செங்கோட்டையன், பிறகு கடுமை முகம்காட்டி, `சாதிக்கயிறு கட்டினால், மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிக்கை விட்டார்.
`ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. அது ஒரு இருண்ட காலம்' என்று இயக்குநர் பா.இரஞ்சித் பேசியது சர்ச்சைக்குள்ளானது. மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

`பா.இரஞ்சித்தின் கருத்து ஏற்கெனவே பல வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியதுதான்' என்று ஆதரவாகவும், அதை மறுத்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ``சர்ச்சைக்குரிய வகையில் இனி பேசக்கூடாது’’ என்ற அறிவுறுத்தலுடன், இயக்குநர் பா.ரஞ்சித்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த ஆண்டும் நீட் தேர்வு பல மாணவிகளை மரணத்தை நோக்கித் தள்ளியது. பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைசியா, தேனி மாவட்டம் தி.ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த நிதுஸ்ரீ, பெரம்பலூர் மாணவி கீர்த்தனா, நெல்லை மாணவி தனலட்சுமி என நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்டோர் பட்டியல் நீண்டது.

இத்தனை மாணவிகளின் மரணத்தோடு அதிர்ச்சி தரும் வகையில் நீட் தேர்வில் 50க்கும் அதிகமான முறைகேடுகள் நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பல மாணவர்களும் பெற்றோர்களும் கைதாயினர்.
ஸ்டெர்லைட் பற்றிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுவிட்டு, சென்னையிலிருந்து கிளம்பிய சமூக செயற்பாட்டாளர் முகிலன், காணாமற்போனார். `அவர் கடத்தப்பட்டார்' என்று முகிலன் ஆதரவாளர்கள் சொல்ல, காவல்துறை விசாரித்தும் அவர் இருப்பிடத்தை அறிய முடியவில்லை. இதற்கிடையில் அவர்மீது ஒரு பெண் பாலியல் புகார் அளித்தார்.

காணாமற்போய் ஐந்து மாதங்களுக்குப் பிறகு திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலன், தன்னை சிலர் கடத்தியதாகத் தெரிவித்தார். பாலியல் புகார் வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டார்.
பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்களிலும் பாடப்புத்தகங்களிலும் குளறுபடிகள் தொடர்கதையானது. 12-ம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தக அட்டைப் படமாக இடம்பெற்ற பாரதியாருக்குக் காவி நிறத் தலைப்பாகை இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் மாணவர்களின் பாடத்திட்டத்தில் மதநூலான பகவத்கீதை இடம்பெற்றது பரவலான எதிர்ப்புகளைச் சந்தித்தது. `கல்வித்துறையைக் காவிமயமாக்கும் முயற்சி' எனக் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி மீது, 1998-ல் கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பேருந்துகள்மீது கல்லெறிந்ததாக வழக்கு நடைபெற்றுவந்தது.

இவ்வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து சென்னைச் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அமைச்சர் பதவியையும் எம்.எல்.ஏ தகுதியையும் பாலகிருஷ்ண ரெட்டி இழந்தார். இவரது ஓசூர்த் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர் மனைவி ஜோதி வெற்றிபெற்றார்.
2017-ல் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குத் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்திய வருமானவரித்துறை, கணக்கில் காட்டப்படாத 4.71 கோடி ரூபாயைக் கைப்பற்றியது.

இதை, 2019 ஜனவரி 10-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுவாக வருமானவரித்துறை தாக்கல் செய்தது. குட்கா விவகாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், வருமானவரித்துறையின் இந்த அதிரடி ரெய்டுகளும் அமைச்சர் விஜயபாஸ்கரைச் சிக்கலில் ஆழ்த்தியுள்ளன.
ஜனவரி தொடக்கத்தில் கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பிருப்பதாக ஆவணப்படம் ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் எடுத்திருந்த இந்த ஆவணப்படத்தில், கொடநாடு வழக்கில் தொடர்புடைய ஷயான், மனோஜ் இருவரும் எடப்பாடிமீது குற்றஞ்சாட்டினர். இக்குற்றச்சாட்டை முதல்வர் மறுத்ததோடு, சென்னை மாநகரக் காவல்துறையில் அ.தி.மு.க சார்பில் புகாரும் அளிக்கப்பட்டது. ஜாமீனில் இருந்த ஷயானும் மனோஜும் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள்மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நவம்பர் 6-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், கடந்த இரண்டு ஆண்டுகளில் 150-க்கும் மேற்பட்டோரை விசாரித்துள்ளது.

ஆறு முறை நீட்டிக்கப்பட்ட இந்த விசாரணை ஆணையத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எட்டு மணிநேரம் விசாரிக்கப்பட்டார். அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், ஆணையம் தொடர்ந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தடையுள்ள போதிலும் 2020 பிப்ரவரி வரையில் ஆணையத்தின் கால அவகாசத்தை நீட்டித்துத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
நாட்டையே உலுக்கியது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. அரசியல் பின்னணியும் பணபலமும் இதன் பின்னணியில் இருந்தது அம்பலமானது.

சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட இவ்வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவி பற்றிய விவரங்களை வெளியிட்ட போலீஸ் சூப்பிரன்டெண்டென்ட்மீது நடவடிக்கை எடுக்குமாறு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அரசுத்தரப்பில் சரிவர ஆவணங்கள் முன்வைக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் தமிழக அரசுக்குக் கண்டனங்கள் குவிந்தன.
`ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு' என்கிற புதிய கல்விக்கொள்கையின் பரிந்துரை சர்ச்சைக்குள்ளானது. முதலில் `தமிழகத்தில் ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு இல்லை' என்று சொன்ன செங்கோட்டையன், திடீர் பல்டி அடித்து, பொதுத்தேர்வை அறிவித்தார்.

`இது குழந்தைகளின் மன அழுத்தத்தையும் இடைநிற்றலையும் அதிகரிக்கும்' என்று கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால், நீர்த்தேக்கங்களில் தண்ணீர் குறைந்து ஏப்ரல், மே மாதங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்தது. சென்னை உட்பட 24 மாவட்டங்கள் வறட்சிப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாகவும், கல்குவாரிகளிலிருந்தும் தண்ணீர் கொண்டுவந்து தலைநகரின் தண்ணீர்ப் பஞ்சத்தை அடக்க அரசு முயன்றது. கடல்நீரைக் குடிநீராக்கும் புதிய திட்டத்தையும், கழிவுநீரிலிருந்து நன்னீர் தயாரிக்கும் தொழிற்சாலைத் திட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். கடந்தாண்டு இறுதியில், சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 5 அடிகள் வரை உயர்ந்துள்ளதாகக் குடிநீர் வாரியம் தகவல் அளித்தது.
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய, ஜீவஜோதியின் கணவர் ப்ரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில், சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.

இதைத் தொடர்ந்து மார்ச் 9-ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்த ராஜகோபால், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஜூலை 18-ம் தேதி காலை 10:30 மணிக்கு மரணமடைந்தார் அவர்.
அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்ததால் சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் பெண் இன்ஜினீயர் சுபஸ்ரீ பலியானார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கடுமை காட்டியது.

ஆனால் சில நாள்களிலேயே மகாபலிபுரம் வந்த சீன அதிபரையும் மோடியையும் வரவேற்க பேனருக்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு. அதற்குச் சில நாள்களுக்குப் பிறகு கோவையில் நடைபெற்ற விழாவுக்காக சாலை நடுவில் வைக்கப்பட்ட அ.தி.மு.க கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி, ராஜேஸ்வரி என்ற பெண்ணின் கால் அகற்றப்பட்டது.
சென்ற ஆண்டு இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டதுபோலவே தமிழகத்தில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் கவனிக்கப்பட்டது.

மோடி அமோக வெற்றிபெற்று இரண்டாம் முறையாகப் பிரதமரானாலும், தமிழகத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஒரே ஒரு தொகுதியில் வென்று மண்ணைக் கவ்வியது. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றிபெற்று எடப்பாடி அரசு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருகை, மோடியுடன் பேச்சுவார்த்தை ஆகியவற்றையொட்டி உலகளவில் டிரெண்ட் ஆனது சென்னை மகாபலிபுரம்.

முதல் நாள் மாமல்லபுரத்தின் கோயில்களையும் சிற்பங்களையும் சுற்றிப்பார்த்தபடி பேச்சுவார்த்தை நடத்திய இருவரும், மறுநாள் நட்சத்திர விடுதியில் சிற்றுண்டியோடு சந்திப்பை முடித்துக்கொண்டனர். இரு தலைவர்கள் சந்திப்பிற்கு இடையில் கோவளம் கடற்கரையில் குப்பை அள்ளி, தனியாக ஸ்கோர் செய்யவும் தவறவில்லை மோடி.
இந்தியாவின் பழைமையான நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த விஜய கமலேஷ் தஹில் ரமானியை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்குப் பணிமாற்றம் செய்து உத்தரவிட்டது.

முடிவை மாற்றப் போராடித் தோற்று இறுதியில் ராஜினாமா செய்தார் தஹில் ரமானி. சென்னை வழக்கறிஞர்கள் அவருக்கு ஆதரவாக நின்றனர். மறுபுறம் அவர் முறைகேடாக வீடுகள் வாங்கியதாகப் புகார்களும் கிளம்பின.
‘வெற்றிகரமான தோல்வி’, ‘தாமரை மலர்ந்தே தீரும்’ போன்ற அரிய வாக்கியங்களால் தமிழகத்தைக் கலகலப்பாக்கிய தமிழிசை சௌந்தர்ராஜனை தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்தது மத்திய அரசு.

`ஆளுநர் ஆகிவிட்டதால் அரசியல் பேச மாட்டேன்' என அறிவித்தார் தமிழிசை. அவர் சென்று பல மாதங்களாகியும் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்குத் தலைவர் நியமிக்கப்படவேயில்லை.
தமிழக அமைச்சர்கள் புடைசூழ முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டன், அமெரிக்கா என்று 14 நாள்கள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தமிழில் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

வெளிநாட்டுப் பண்ணையில் மாடுகளுக்குத் தீவனம் அளித்தது, கோட்-சூட், லாஸ் ஏஞ்சல்ஸை உச்சரிக்கத் தெரியாமல் தடுமாறியது ஆகியவை வைரலாகின. `அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்திற்குப் பெறப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை விட்டார்.
சின்ன சாலை விபத்து ஒன்று சாதிக் கலவரமாக உருவெடுத்து, அரசுப் பேருந்துமீது கல்வீச்சு, போக்குவரத்து பாதிப்பு, அண்ணல் அம்பேத்கர் சிலை உடைப்பு, போலீஸ் குவிப்பு எனப் போர் பூமியானது வேதாரண்யம். காவல் நிலையத்திற்கு எதிரேயே அத்தனை கலவரமும் நடந்தேறி, ஒரு தரப்பினரின் கார் கொளுத்தப்பட்டு, காவல்நிலையமும் கல்வீசித் தாக்கப்பட்டதில் வேதாரண்யத்தில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

அம்பேத்கர் சிலை உடைப்பிற்குப் பலதரப்பட்ட அமைப்பினர் கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்த நிலையில், உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை நீக்கப்பட்டு, அரசு சார்பில் புதிய வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த ரஞ்சித்குமார், எக்ஸ்பிரெஸ் அவென்யூ மாலில் உள்ள மலக்குழியில் சுத்தம் செய்ய இறங்கியபோது விஷவாயு தாக்கி மரணமடைந்தார்.

சென்ற வருடம் மட்டும் தமிழகத்தில் 26 பேர் மலக்குழி சுத்தம் செய்கையில் மரணித்துள்ளனர். இறப்பவர்கள் பலரும் 35 வயதுக்குட்பட்டவர்கள். சமூகநீதி மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ஐந்தாண்டுகளில் 144 இறப்புகளுடன் மலக்குழி மரணங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றிருந்தது தமிழ்நாடு.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எடுத்த பொருள் கி.மு. 905-ம் ஆண்டைச் சேர்ந்தது என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்தது.

ராஜராஜசோழன் நினைவிடத்தைத் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்ற மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆய்வு நடைபெற்றது. கீழடியில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள் `2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள்', `சாதி, சமய வழிபாட்டுத் தடயங்கள் இல்லை' எனப் பல புதிய விஷயங்களை உலகுக்கு அறிவித்தன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகையில் ரூ.12.21 கோடி செலவில் கீழடி அருங்காட்சியகம் அமைப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது.
45 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள ஒலிப்பதிவுக்கூடத்தில் இளையராஜா இசையமைத்து வந்தார். இளையராஜாவைக் காலி செய்யச் சொல்லி பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் வலியுறுத்த, இளையராஜா மறுக்க, விஷயம் நீதிமன்றத்துக்குச் சென்றது.

இருதரப்பையும் சமரசமாகச் செல்லும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியது. இன்னொருபுறம் சில ஆண்டுகளாகப் பிரிந்திருந்த பாரதிராஜாவும் இளையராஜாவும் மீண்டும் இணைந்தனர். பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் இளையராஜாவுக்கு ஆதரவாக நின்றார் பாரதிராஜா.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் மாதம் நடத்தப்பட்டது. பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும்; நாசர், விஷால், கார்த்தி தலைமையில் பாண்டவர் அணியினரும் போட்டியிட்டனர்.

பாதுகாப்புச் சிக்கல், உறுப்பினர் சேர்க்கையில் குளறுபடி என்று தடைகளுக்குப் பிறகு தேர்தலை நடத்துவதற்கு அனுமதி அளித்தது உயர் நீதிமன்றம். இதனையடுத்து ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றாலும் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை தொடர்கிறது. இன்னும் வழக்கு நிலுவையில் உள்ளதால், நடிகர் சங்கத்தின் அன்றாட நிர்வாகத்தைக் கவனிக்க, பதிவுத்துறைத் துணை ஐ.ஜி பி.வி.கீதாவைச் சிறப்பு அலுவலராக நியமித்துள்ளது.
நாங்குநேரித் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த வசந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், விக்கிரவாண்டித் தொகுதியில் தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த ராதாமணி உயிரிழந்ததாலும், அந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் முடிவுகள் ஆளும் அ.தி.மு.க-வுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருந்தன. இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் முத்தமிழ்ச்செல்வனும். ரெட்டியார்பட்டி நாராயணனும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். தி.மு.க கூட்டணியின் கைவசம் இருந்த அந்தத் தொகுதிகள் அ.தி.மு.க வசம் சென்றன.
கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் என்கிறது சுகாதாரத்துறையின் அறிக்கை ஒன்று.

அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்குத் தனியாக வார்டுகள் உருவாக்கியிருப்பதாகவும், சுகாதாரத்துறை தமிழகம் முழுவதும் டெங்கு குறித்து விழிப்புணர்வுப் பிரசாரங்களை நடத்திவருவதாகவும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டது. ஆனால், ‘டெங்குவைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையையும் குறைத்துக் காட்டுவதில் முனைப்பாக இருக்கிறது’ எனப் புகார்கள் எழுந்தன.
2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க-வின் அப்பாவு, அ.தி.மு.க-வின் இன்பதுரை ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகளில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற அப்பாவு, மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடக்கவேண்டும் என்று கோரினார்.

உயர் நீதிமன்றம் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட, அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் இன்பதுரை. உச்ச நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடத் தடை விதித்தது. இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது
திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடை அக்டோபர் 2 அன்று கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களில் ஒருவர் தப்பிவிட, மணிகண்டன் என்பவரைக் காவல்துறை விசாரித்ததில், கொள்ளைச் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டது திருவாரூர் முருகன் என்பவர் என்றும், அவர் தொடர்ச்சியாகத் தென்மாநிலங்கள் அனைத்திலும் கொள்ளையில் ஈடுபடுபவர் என்றும் தெரிய வந்தது.

பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார் முருகன்.தமிழகக் காவல்துறைக்கு மாற்றப்பட்ட முருகன், சினிமாத் தயாரிப்புக்காக நகை திருடியதாக வாக்குமூலம் அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முருகன்மீதான விசாரணை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
ஊதிய உயர்வு, அடிப்படை வசதிகள், இட ஒதுக்கீடு முதலான கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டத்தில் இறங்கினர் அரசு மருத்துவர்கள். போராட்டத்தைக் கைவிடுமாறு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்தது அரசு நிர்வாகம்.

‘போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு, புதிதாகப் பணி நியமனங்கள் தொடங்கும்’ என்று இறுதி அறிவிப்பை வெளியிட்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அமைச்சரின் எச்சரிக்கையை ஏற்று, போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றன மருத்துவர் சங்கங்கள்.
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் தனது வீட்டின் அருகில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான் சிறுவன் சுஜித்.

சிறுவனை மீட்பதற்கு நடுக்காட்டுப்பட்டிக்கு விரைந்தது அரசு நிர்வாகம். சுஜித்தைக் காப்பாற்ற அருகில் துளைகள் தோண்டப்பட, பெரும்பாறைகள் இருந்ததால் அவை கைவிடப்பட்டன. தீபாவளிக் கொண்டாட்டங்களைப் பின்னுக்குத் தள்ளி தமிழகமே இரண்டரை வயதுக் குழந்தை சுஜித்தின் மீட்புக்காகக் காத்திருந்தது. 80 மணி நேர முயற்சிக்குப் பிறகு, சிறுவன் சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். இந்த ஆண்டின் மிகப்பெரிய துயரம், சிறுவன் சுஜித்தின் மரணம்.
திருவள்ளுவருக்கு பா.ஜ.க-வினர் மதச்சாயம் பூசியது விமர்சனத்துக்குள்ளானது. 'உலகமக்களுக்குப் பொது இலக்கியம் வழங்கிய வள்ளுவருக்கு மதச்சாயமா?'

என்று விமர்சனங்கள் எழுந்தன. தஞ்சை மாவட்டம் வல்லத்திற்கு அருகே திருவள்ளுவர் சிலையின்மீது சாணம் வீசி அவமதிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் அதே திருவள்ளுவர் சிலைக்குக் காவித் துண்டு, ருத்திராட்ச மாலை அணிவித்துப் பரபரப்பைக் கிளப்பினார், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்.
பொன் மாணிக்கவேல் - தமிழக அரசு மோதல் இந்த ஆண்டும் தொடர்ந்தது. ‘அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறேன்’ என நீதிமன்றத்தில் முறையிட்டார் பொன் மாணிக்கவேல்.

தமிழக அரசோ, `பொன்மாணிக்கவேல் சிலைக்கடத்தல் தொடர்பான உரிய ஆவணங்களை எங்களிடம் ஒப்படைக்கவில்லை' என்றும் `ஆஸ்திரேலியாவில் இருந்த சிலைகளை மீட்டது மோடிதானே தவிர பொன்மாணிக்கவேல் இல்லை' என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டது. இறுதியில் காவல்துறை நிர்வாக ஐ.ஜி-யாக இருந்த அன்புவை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக நியமித்தது தமிழக அரசு.
`காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் கர்நாடகம் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது' என வலியுறுத்திக்கொண்டிருந்தது தமிழக அரசு.

‘காவிரியில் தமிழகத்துக்கு 9.19 டி.எம்.சி நீரைத் திறக்க வேண்டும்’ எனக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது காவிரி மேலாண்மை ஆணையம். ஆனாலும் வழக்கம்போல் கர்நாடக அரசு நீரைத் திறந்துவிடாமல் இழுத்தடிக்க, பெருமழை பெய்ததால் தமிழகத்தின் தண்ணீர்ப்பிரச்னை தீர்ந்தது. மேக்கேதாட்டூ அணை குறித்த கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினார் தமிழக முதல்வர்.
‘`அ.தி.மு.க-வுக்கு ஒரே தலைமை தேவை. இரட்டைத் தலைமையால் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது’’ என நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு குற்றம் சாட்டினார் ராஜன் செல்லப்பா.

அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ‘`பொது வெளியில் கட்சியினர் யாரும் பேச வேண்டாம். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டும்’’ எனக் கூட்டாக அறிக்கை விட்டனர். பிறகு நடந்த பொதுக்குழுவில் சமாதானம் ஏற்பட்டு இந்தப் பிரச்னை அடங்கியது.
‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் போட்டி’ என 2017 டிசம்பரில் அறிவித்த ரஜினி, இரண்டு ஆண்டுகள் ஆகியும் கட்சியே தொடங்கவில்லை.

அதுகுறித்த கேள்வி எழுப்பப்பட்டபோதெல்லாம் `சட்டமன்றத் தேர்தலையொட்டி கட்சி தொடங்குவேன்' என்றார். திருவள்ளுவர் - காவி சர்ச்சை எழுந்தபோது, ``வள்ளுவருக்கும் எனக்கும் காவிச்சாயம் பூசும் முயற்சிகள் நடக்கின்றன. நான் மாட்டிக்கொள்ள மாட்டேன்’’ என்றார். `கமல் 60’ விழாவில் பேசியபோது, ``எடப்பாடி முதல்வரானது அதிசயம். அதிசயம் நேற்றும் நிகழ்ந்தது. இன்றும் நிகழ்ந்தது. நாளையும் நிகழும்’' என்றார்.
எட்டுவழிச்சாலைத் திட்டத்துக்காக நடந்த களப்போராட்டங்களும் நீதிமன்ற முறையீடுகளும் தொடர்ந்தன. ‘திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது’ என்றது சென்னை உயர் நீதிமன்றம். `இது தங்களுக்குக் கிடைத்த வெற்றி' என்று விவசாயிகள் மகிழ்ந்தனர். அ.தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்றார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிரான தடையை நீக்கச் சொல்லி உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியிருக்கிறது தமிழக அரசு.
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் என்பவர் தனது வீட்டைச் சுற்றிக் கட்டியிருந்த 20 அடி உயரச் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் இறந்தனர்.

`அது சாதாரணச் சுவர் அல்ல, பட்டியலின மக்கள் தன் வீட்டு அருகில் வரக்கூடாது என்பதற்காக எழுப்பப்பட்ட தீண்டாமைச்சுவர்' என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சம்பவத்தில் நீதி கேட்டுப் போராடிய தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது சர்ச்சையானது. சம்பவம் நடந்து சிலநாள்களுக்குப் பிறகு, விபத்துக்குக் காரணமான சிவசுப்பிரமணியனைக் கைது செய்தனர்.
கும்பல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு, மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் கடிதம் ஒன்றை எழுத, அது மிகப்பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

தேசத் துரோகம், மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் நடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பீகார், முசாபர்பூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. இது தேசிய அளவிலான பிரச்னை என்றாலும் தமிழகத்தைச் சேர்ந்த மணிரத்னம், ரேவதி தொடர்பானது என்பதால் தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பால் விலையை உயர்த்துவது குறித்து, கடந்த சில ஆண்டுகளாகவே பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். பசும்பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாயும், எருமைப்பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு 6 ரூபாயும் உயர்த்தப்பட்டன.

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்தது. பால் கூட்டுறவுச் சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகவும், டீசல் விலை உயர்ந்ததால் போக்குவரத்துச் செலவும் அதிகரித்துள்ளதாகவும் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பால்விலை உயர்வைத் தொடர்ந்து மின்கட்டண உயர்வும் தமிழக மக்களைக் கடுமையாக பாதித்தது.
‘பிகில்’ இசை வெளியீட்டுவிழா மேடையை அரசியல் மேடையாகப் பயன்படுத்தினார் விஜய். பேனர் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இறந்த சுபஸ்ரீ பற்றிப் பேசிய விஜய், “யார்மீது கோபப்பட வேண்டுமோ அவர்கள்மீது கோபப்படாமல், யார் யார் மீதோ பழி போடுகிறார்கள்” என்று நேரடியாகவே அ.தி.மு.க-வைச் சாடினார்.

“யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, அவரை அங்கு உட்கார வைத்தால் அனைத்தும் சரியாக இருக்கும்” என்று விஜய் பேசியது முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிடுவதாகவே இருந்தது. படத்தின் ரிலீஸ் நாள் நெருங்க நெருங்க, `பிகில்' வெளிவருமா என்ற ரீதியில் பிரச்னைகள் எழுந்து ரசிகர் ஷோவுக்கு அனுமதி மறுப்பு வரை சர்ச்சைகள் நீண்டன.
தூத்துக்குடியில் `அசுரன்' படம் பார்த்துவிட்டு, பாராட்டியிருந்தார் ஸ்டாலின். அதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் `முரசொலி அலுவலகம் இருக்கும் இடமே பஞ்சமி நிலம்தான்’ என்று ட்வீட் போட, நில ஆவணங்களை வெளியிட்ட ஸ்டாலின் `அது பஞ்சமி நிலம் என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்' என்று அறிவித்தார்.

ஆனால் `அது மூலப்பத்திரம் இல்லை' என்று ராமதாஸ் சாதிக்க, அவர்மீது வழக்கு தொடர்ந்தது தி.மு.க. பா.ஜ.க மாநிலச்செயலாளர் ஸ்ரீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தி.மு.க குறித்துப் புகார் அளித்தார். இதுவரை பிரச்னை தீரவில்லை.