Published:Updated:

ஜனதா கர்ஃபியூ முதல் ரஜினி அரசியல் வரை... இந்தியாவும் ட்வென்ட்டி ட்வென்ட்டியும்! #Rewind2020

2020 முக்கியச் சம்பவங்கள்
2020 முக்கியச் சம்பவங்கள்

2020-ல் இந்தியாவில் நிகழ்ந்த முக்கியச் சம்பவங்களின் தொகுப்பை ஒரு ரீவைண்டாக இங்கே காணலாம்...

`2020’ என்ற இந்த நம்பரே மிகவும் ஃபேன்ஸியாக இருக்கிறது. அதேபோல் ஆண்டும் அமர்க்களமாக இருக்குமென்று எதிர்பார்த்து, பல திட்டங்களைத் தீட்டிவைத்திருந்த நம்மில் பலருக்கு, கற்பனைகூட செய்து பார்த்திராத வாழ்க்கையைக் காட்டிவிட்டது இந்த கொரோனாவும், லாக்டெளன் நாள்களும்.

வொர்க் ஃப்ரம் ஹோம், ஆன்லைன் வகுப்புகள், ஓடிடி என நாள்கள் நாம் எதிர்பார்த்ததைவிட வேகமாகவே சென்றுவிட்டாலும், கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை. நாம் சற்றும் எதிர்பார்த்திராத இந்த ஆண்டில், இந்தியாவில் நிகழ்ந்த முக்கியமான அரசியல் அட்டகாசங்கள், நம் நெஞ்சை உறையவைத்த சம்பவங்கள், டிரெண்டிங் டாப்பிக்குகளை ரிவர்ஸ் கியரில் சென்று மீண்டும் ஒரு ரீ-விசிட் அடித்துவிட்டு வருவோம் வாங்க!

ஜனவரி:

நிர்பயா வழக்கு
நிர்பயா வழக்கு

22.01.2020 - முடிவுக்கு வந்த நிர்பயா வழக்கு!

`நிர்பயா’ கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரும் காலை 7 மணியளவில் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் இந்த ஆண்டு முடித்துவைத்தது.

இரவு 9.05 முதல் அதிகாலை 3.32 வரை: நிர்பயா வழக்கில் அனல்பறந்த விவாதம்... முழு விவரம்!
கொரோனா
கொரோனா

30.01.2020 – இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி!

கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 17-ம் தேதி சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாடாக வேக வேகமாகப் பரவியது. இந்தநிலையில், வூஹானிலிருந்து கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்துக்குத் திரும்பிய இந்திய மாணவி ஒருவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதுவே, இந்தியாவில் பதிவான முதல் கொரோனா தொற்று.

பிப்ரவரி:

24.02.2020 - டொனால்டு ட்ரம்ப் இந்தியா வருகை

அமெரிக்கா அதிபரான டொனால்டு ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார். அப்போது அவரை வரவேற்று நிகழ்ந்த `நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்வில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெயரை உச்சரிக்கத் தடுமாறியதை பிசிசிஐ-யே கிண்டலடித்தது.

`நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிதான் கொரோனா பரவலுக்குக் காரணம்!’ - கொதிக்கும் சிவசேனா
ட்ரம்ப் வருகை
ட்ரம்ப் வருகை

மார்ச்:

22.03.2020 - `ஜனதா கர்ஃபியூ’

கொரோனா தாக்குதலின் ஆரம்பகட்டத்தில் அதை எதிர்கொள்ளும் நோக்கில் மக்கள் அனைவரும் `Janata Curfew’ என்னும் மக்கள் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அத்தோடு, மக்கள் அனைவரும் மாலை 5 மணியளவில் தங்கள் வீடுகளிலிருந்து கைகளைத் தட்டி கொரோனாவுக்கு எதிரான போரில் செயல்பட்டுவரும் முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டைத் தெரிவித்தனர்.

ஊரடங்கு
ஊரடங்கு

24.03.2020 - `‘முதலாம்கட்ட ஊரடங்கு’

இந்தியாவில் கொரோனா தாக்குதல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

கொரோனா ஊரடங்கில் காவல்துறை! #Rewind2020

26.03.2020 - 1,70,000 கோடி ரூபாய் நிவாரணத் தொகை ஒதுக்கீடு!

ஊரடங்கு காரணமாக பாதிப்படைந்த பொதுமக்களுக்கும், பல்வேறு தொழிற்சாலைகளுக்கும், விவசாயிகளுக்குமான நிவாரணத் தொகையாக 1,70,000 கோடி ரூபாயை மத்திய அரசாங்கம் ஒதுக்கியிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

29.03.2020 – ஊரடங்கிலும் தொடர்ந்த ஆணவக்கொலைகள்!

தமிழகத்தில் ஊரடங்கு காலத்திலும், பட்டியலின மக்கள் மீதான சாதிய வன்முறைகள் தொடர்ந்தன. ஆரணி அருகே சுதாகர் என்னும் இளைஞர் மாற்றுச் சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டதற்காகக் கொலை செய்யப்பட்டார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஏப்ரல்:

05.04.2020 - ஒளியால் ஒளிர்ந்த இந்தியா!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் போராடிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் இரவு 9 மணியளவில் தங்களது வீட்டிலுள்ள மின்விளக்குகளை அணைத்துவிட்டு தீபம் ஏற்றுமாறு பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டின் ஒரு சில இடங்களில் இது உக்கிரமாகி, தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாகச் சென்ற சம்பவங்களும் அரங்கேறின.

14..04.2020 – இரண்டாம்கட்ட ஊரடங்கு

கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக மே மாதம், 3-ம் தேதி வரையிலான இரண்டாம்கட்ட ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார்.

20.04.2020 - தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமல்

மார்ச் மாதம் முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு செயல்பட்டுவந்த நிலையில், உணவுப் பொருள்களுக்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டத்தால், கொரோனாவுக்கான விதிமுறைகளைப் பின்பற்றி தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

29.04.2020 – மாநிலங்களுக்குத் தளர்வுகள் அறிவிப்பு

ஊரடங்கு அமலிலிருந்த நிலையில், மாநிலங்கள்விட்டு மாநிலங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தகுந்த வழிமுறைகளைப் பின்பற்றி அவசர தேவைகளுக்காக மட்டும் மக்கள் மாநிலம்விட்டு மாநிலம் பயணம் மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசாங்கம் அனுமதி அளித்தது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட இ-பாஸ் நடைமுறையில் அரசியல் பிரமுகர்கள் முதல் பிரபலங்கள் வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இ-பாஸ்
இ-பாஸ்
Durairaj G

மே:

01.05.2020 – மூன்றாம்கட்ட ஊரடங்கு

கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் பாதிப்பைக் கருத்தில்கொண்டு பச்சை, சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களாகப் பிரித்து ஏற்கெனவே அமலிலிருந்த ஊரடங்கை மே 18-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

05.05.2020 - இந்தியா- சீனா ராணுவத்தினர் மோதல்!

இந்தியா-சீனா எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் இரு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் கற்களைக்கொண்டு தாக்கிக்கொண்டதால், வீரர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த மோதலின் தொடர்ச்சியாக ஜூன் மாதம் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலியாகினர். சீனத் தரப்பில் உயிரிழப்புகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. பின்னர் ஓர் அதிகாரி உட்பட 43 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது.

இந்தியா- சீனா எல்லை
இந்தியா- சீனா எல்லை

07.05.2020 - ஆந்திரா ரசாயனக் கசிவில் 11 பேர் பலி

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்திலுள்ள எல்.ஜி.பாலிமர் தொழிற்சாலையில் ஊரடங்கு காரணமாக மேற்கொள்ளப்படாத பராமரிப்புப் பணிகள் காரணமாக ஏற்பட்ட ரசாயனக் கசிவால் 11 பேர் பலியானதோடு 1,000-க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டனர்.

08.05.2020 - புலம்பெயர் தொழிலாளர்களின் மரணம்

திடீரென அமலுக்கு வந்த ஊரடங்கால் கொரோனா சிக்கலைத் தாண்டி வாழ்வாதாரச் சிக்கலுக்குப் பலர் தள்ளப்பட்டனர். அந்த வகையில், புலம்பெயர் தொழிலார்கள் பலர் போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டதால் நடைப்பயணமாக தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல முற்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் வழியாகச் சென்றுகொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் ரயில் தண்டவாளங்களில் உறங்கிக்கொண்டிருந்தபோது ரயில் வந்ததால், அதில் சிக்கி 16 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரயில் விபத்து
ரயில் விபத்து
Twitter

ஜூன்:

29.06.2020 - சீன செயிலிகளுக்குத் தடை:

இந்தியா-சீனா எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும்விதத்திலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்தியாவில் செயல்பட்டுவந்த சீன நிறுவனங்களைச் சேர்ந்த 59 செயிலிகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது அரசு. அவற்றில் ஒன்றான டிக்-டாக் செயிலி தடை செய்யப்பட்டது அதன் ரசிகர்களைப் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

ஜூலை:

03.07.2020 - பிரதமர் மோடி எல்லைப் பாதுகாப்பு வீரர்களுடன் சந்திப்பு

இந்தியா-சீனா எல்லை விவகாரம் வெடித்துவந்த சூழலில், பிரதமர் மோடி லடாக்கின் நிம்மு எல்லைக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலவரத்தை ராணுவ உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார். பின்னர் அங்குள்ள வீரர்களிடம் உரையாற்றிய மோடி,

`மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு’

- என்னும் திருக்குறளை மேற்கோள்காட்டிப் பேசியது வைரலானது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
AP

29.07.2020 - புதிய கல்விக் கொள்கை அறிமுகம்

இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்தே, இந்தி திணிப்புப் போராட்டம் கொரோனா காலத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியது.

ஆகஸ்ட்

05.08.2020- அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை

பல வருடங்களாக நடைபெற்றுவந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி தலைமையில் கொரோனா வழிமுறைகள் பின்பற்றப்பட்டு நடைபெற்றது.

07.08.2020 - கோழிக்கோடு விமான நிலைய விபத்து

கேரளாவின் கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தின் `டேபிள் டாப்’ ஓடுதளத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் இரண்டாக வெடித்துச் சிதறியதில் இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் மரணமடைந்தனர்.

பாபர் மசூதி - அயோத்தி ராமர் கோயில்
பாபர் மசூதி - அயோத்தி ராமர் கோயில்

31.08.2020 - இந்தியாவின் ஜி.டி.பி வீழச்சி!

நாட்டின் முதல் காலாண்டின் ஜி.டி.பி மதிப்பு, கடந்த ஆண்டைவிட -23.9 சதவிகிதமாகச் சரிந்ததாக தேசிய புள்ளியியல்துறை அறிவித்தது. இதையடுத்து மத்திய அரசின் செயல்பாடுகளை முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாகச் சாடினர்.

செப்டம்பர்:

14.09.2020 - ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலின இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்தப் பெண் செப்டம்பர் மாதம் 25-ம் தேதி உயிரிழந்தார்.

ஹத்ராஸ்: கூட்டு பாலியல் வன்கொடுமை; கொலை! - 4 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ

30.09.2020 - பாபர் மசூதி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அத்வானி!

பாபர் மசூதி இடிப்பின்போது, கலவரம் ஏற்படும் வகையில் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த அத்வானி உள்ளிட்ட 32 பேரை நிரபராதிகள் என்று தீர்ப்பளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஹத்ராஸ் இளம்பெண் உடல் தகனம்
ஹத்ராஸ் இளம்பெண் உடல் தகனம்

அக்டோபர்:

28.10.2020 - பீகார் சட்டமன்றத் தேர்தல்

கொரோனா பேரிடருக்கு மத்தியிலும் சூட்டோடு சூடாக பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் மூன்றுகட்டங்களாக நடந்து முடிந்தது. அதில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றது.

நவம்பர்:

06.11.2020 - வேல் யாத்திரை; அரசியல் யாத்திரை?

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில் திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூர் வரை வேல் யாத்திரையை நடத்த திட்டமிட்டிருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தபோதிலும் கடும் எதிர்ப்பை மீறி நிகழ்த்தப்பட்ட இந்த யாத்திரை தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேல் யாத்திரை
வேல் யாத்திரை

21.11.2020 - அமித் ஷாவின் தமிழக விசிட்!

கொரோனா காரணமாக போடப்பட்ட தளர்வுகளுக்குப் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகை அதிக கவனத்தை ஏற்படுத்தியது. ``சிறிது காலம் இடைவெளிவிட்டு தமிழகம் வந்திருக்கிறேன். அதனால் கொஞ்சம் அரசியல் பேசுகிறேன்!” என்ற அமித் ஷாவின் பேச்சுதான் மொத்த நிகழ்வின் ஹைலைட்.

டிசம்பர்:

03.12.2020- ரஜினியின் அரசியல் பிரவேசம்

2020-ல் நிகழ்ந்த அதிசயம், அற்புத நிகழ்வுகளுள் ஒன்றாகவும், ரஜினி ரசிகர்களின் பல வருட காத்திருப்புக்கு பதிலாகவும், ``ஜனவரியில் கட்சித் தொடக்கம், டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு'' என்ற ரஜினியின் அறிவிப்பு ஒரு புறம் கொண்டாடப்பட்டாலும். மறுபுறம், ரஜினி அரசியல் களத்தில் பா.ஜ.க-வின் பி-டீமாகவே செயல்படுவார் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இந்தநிலையில்தான் `அண்ணாத்த’ படப்பிடிப்பின்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த், கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்தார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இவைபோக தமிழ்நாடு அரசியல் களத்தில் தேர்தல் 2021-க்கான பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க என இரு கட்சிகளும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா எனும் பெரும் தலைவர்கள் இன்றி சந்திக்கப்போகும் முதல் தேர்தல் எவ்வாறு அமையப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

`ரஜினி வாய்ஸ்’: `1996’ தேர்தலில் ஏற்படுத்திய தாக்கம் - ஆடிட்டர் குருமூர்த்தியின் கணக்கு பலிக்குமா?
இந்த ஆண்டில் நடைபெற்ற முக்கியச் சம்பவங்களுள் ஏதேனும் விடுபட்டிருந்தால் கமென்ட்டில் பகிருங்கள்!
அடுத்த கட்டுரைக்கு