Published:Updated:

`ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி நிதி'- தமிழக அரசு அரசாணை வெளியீடு #NowAtVikatan

20.12.2019 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

ஹூஸ்டன்
ஹூஸ்டன்
20 Dec 2019 10 PM

ரூ.1 கோடி நிதி!

உலகத்தமிழர்கள் அனைவரின் பங்களிப்பால் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கல்வியில் பிரசித்திபெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையானது வெற்றிகரமாக நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹூஸ்டனில் தமிழர்களின் முன்னெடுப்பால், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ அனைத்து தமிழர்களின் உதவியை அங்கு அமைந்துள்ள தமிழ்ச் சங்கமானது நாடியிருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இருக்கை அமைப்பது தொடர்பான, பணி முன்னேற்ற அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும், திட்டம் எந்தவித தாமதமுமின்றி உரிய காலகட்டத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

20 Dec 2019 8 PM

5 பேர் உயிரிழப்பு!

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் இன்று போராட்டம் நடந்தது. ஒருகட்டத்தில் போராட்டம் வன்முறையாக மாறாக அதில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று அம்மாநில தலைமைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

20 Dec 2019 6 PM

தீவிரமடையும் போராட்டம்!

போராட்டம்
போராட்டம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜூம்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. முதலில் இந்த பேரணிக்கு அனுமதி மறுத்த போலீஸ், பின்னர் அனுமதி வழங்கியது. பேரணியை போலீஸ் ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்தனர். பேரணிக்கு நடுவில் போராட்டமும் நடந்தது.

இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டம் தீவிரமானதை அடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீஸார் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். சில இடங்களில் கார்களில் தீ வைக்கப்பட்டது. இதனால் டெல்லியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

20 Dec 2019 4 PM

யோசனை தெரிவிக்கலாம்!

குடியுரிமைச் சட்டம் பற்றி யோசனை இருந்தால் தெரிவிக்கலாம் எனவும், சட்ட விதிகளை கட்டமைக்கும் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட, நீதிமன்றம் செல்ல மக்களுக்கு உரிமை உண்டு. ஆலோசனை, விவாதத்துக்குப் பிறகே குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது என உள்துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.

20 Dec 2019 2 PM

சுற்றுச்சுவர் உரிமையாளர் சிவசுப்பிரமணியனுக்கு நிபந்தனை ஜாமீன்!

மேட்டுப்பாளையத்தை அடுத்த நடூரில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவத்தில் சுற்றுச்சுவரைக் கட்டிய வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்

ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், மறுஉத்தரவு வரும்வரையில், மதுரையில் தங்கியிருந்து மாவட்ட நீதிமன்றத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிவசுப்பிரமணியனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

20 Dec 2019 3 PM

பா.ஜ.க சார்பில் குடியுரிமை சட்ட மசோதாவின் விளக்கக்கூட்டம்

20 Dec 2019 2 PM

உன்னாவ் பாலியல் வன்கொடுமை! -தண்டனை விவரம்!

இந்தியாவையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங், குற்றவாளி என கடந்த இரு நாள்களுக்கு முன்பு டெல்லி நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த நிலையில், அவருக்கான தண்டனை விவரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் குற்றவாளியான குல்தீப் சிங் தனது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், 25,00,000 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

20 Dec 2019 1 PM

தேசிய கீதம் பாடிய காவல் துணை ஆணையர்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. அப்போது காவல் துணை ஆணையர் சேத்தன்சிங் ரத்தோர், போராட்டக்காரர்களை சாந்தப்படுத்த, அவர்களோடு சேர்ந்து தேசிய கீதம் பாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

20 Dec 2019 11 AM

தீய சக்திகளின் பிடியில் மாணவர்கள்!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``தீய சக்திகளின் பிடியில் மாணவர்கள் சிக்கியுள்ளனர். இதனால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். குடியுரிமைச் சட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகின்றன'' என்றார்.

20 Dec 2019 11 AM

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து!

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சை தமிழ்ப்பலைக்கழகத் துணைவேந்தராக பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டதை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்திருக்கிறது. பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. உரிய தகுதிகள் இல்லாதநிலையில், விதிகளை மீறி பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டதாகப் பேராசிரியர் ரவீந்திரன், தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

20 Dec 2019 10 AM

காஷ்மீர் சிக்கித் தவிக்கும் தமிழக  லாரி ஓட்டுநர்கள்!

ஜம்மு - கஷ்மீர், லடாக் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், தமிழகத்திலிருந்து சரக்கு லாரிகளை ஓட்டிச் சென்ற 800-க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் உணவு, தண்ணீரின்றி சிக்கித் தவிப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஸ்ரீநகர், லடாக் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவில் கடந்த 12 நாள்களுக்கு மேலாக 450 லாரிகள் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. 10 நாள்களுக்கு மேலாக லாரியிலேயே ஓட்டுநர்கள் தங்கியிருப்பதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

20 Dec 2019 9 AM
குளத்துப்புழை, ஆர்யங்காவு, புத்தன்வீடு... சபரிமலை யாத்திரையில் தரிசிக்க உகந்த 10 சாஸ்தா ஆலயங்கள்!

ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்ட கம்பம் - சபரிமலை சாலை!

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து குமுளி வழியாக சபரிமலை செல்லும் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கம்பத்திலிருந்து சபரிமலை செல்லும் வாகனங்கள் கம்பம்மெட்டு, கட்டப்பனை வழியாகச் செல்ல வேண்டும். அதேநேரம், சபரிமலையிலிருந்து வண்டிப் பெரியார், குமுளி வழியாக வாகனங்கள் கம்பம் வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

20 Dec 2019 9 AM

வலுக்கும் போராட்டங்கள்!

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராடங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வலுத்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தின் லக்னோ உள்ளிட்ட பல பகுதிகளிலும் கர்நாடக மாநிலம் மங்களூருவிலும் போராடங்கள் தீவிரமடைந்துள்ளன. மங்களூரு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுசொத்துகளை சேதப்படுத்தினர். மேலும், அவர்கள் மங்களூரு வடக்கு காவல்நிலையத்தைத் தாக்கி போலீஸாரையும் தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மங்களூர் போராட்டம்
மங்களூர் போராட்டம்
Twitter

அதேபோல், லக்னோவில் போராட்டத்தில் ஈடுபட்ட முகமது வாகில் என்பவர் குண்டடிபட்டு உயிரிழந்தார். போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இதை லக்னோ போலீஸார் மறுத்துள்ளனர். இதுகுறித்து பேசிய லக்னோ காவல்துறை அதிகாரி கலா நைதானி, ``போலீஸார் எந்த இடத்திலும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. இருப்பினும் அவர் எப்படி குண்டடிபட்டு இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.