Published:Updated:

`பொங்கல் மதுவிற்பனை ரூ.605 கோடி... வயிறு வேதனையில் எரிகிறது!' - ராமதாஸ் #NowAtVikatan

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ( தே.சிலம்பரசன் )

20.01.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

20 Jan 2020 9 PM

`வயிறு வேதனையில் எரிகிறது!' - ராமதாஸ்

பொங்கல் மதுவிற்பனை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``இதுவரை இல்லாத அளவுக்கு பொங்கல் திருநாளில் ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரியும். அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி பசியால் எரியும். இந்த அவலம் என்று தீரும்?

பொங்கல் திருநாளில் புதுப்பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்கல் தான் பொங்கும்.ஆனால், இந்த பொங்கலுக்கு குடிமகன்களின் வயிற்றில் சாராயம் தான் பொங்கியிருக்கிறது. முதல் பொங்கல்வயிற்றை நிறைக்கும்.இரண்டாவது பொங்கல் வயிற்றை அரிக்கும். தமிழா நீ மதுவை கைவிட்டு தலைநிமிர்வது எந்நாளோ?'' என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

20 Jan 2020 4 PM

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

2020-21-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் தொடங்கியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

20 Jan 2020 2 PM

பா.ஜ.க தேசிய தலைவரானார் ஜே.பி.நட்டா!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். பா.ஜ.க-வின் தேசிய தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை முதல் நடைபெற்று வந்தது. ஜே.பி.நட்டாவைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால் இவர் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் பா.ஜ.க-வின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பா.ஜ.க முன்னாள் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

20 Jan 2020 7 AM

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை கூடுகிறது. 2020-21-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நிதி நிலை அறிக்கை தயாரிப்பு, ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 2020-ம் ஆண்டு முதலாவது அமைச்சரவைக் கூட்டம் என்பதாலும் இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாலும், இந்தக் கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின் செல்ல