Published:Updated:

‘அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்!’ – அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் #NowAtVikatan

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
Live Update
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

21.4.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

21 Apr 2020 9 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,336 பேருக்குப் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,601 ஆக அதிகரித்துள்ளது. இதில் 14,759 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 590 பேர் இந்த வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். அதேநேரம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,842-லிருந்து 3,252 ஆக உயர்ந்துள்ளது நம்பிக்கை அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,81,165 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,70,370 ஆகவும் உள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,46,248 ஆக உயர்ந்துள்ளது.

21 Apr 2020 9 AM

அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறத் தடை...!

அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான ஆணை கையொப்பமாக உள்ளது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ``கண்ணுக்குத் தெரியாத எதிரியின் தாக்குதலாலும் அமெரிக்க குடிமக்களின் வேலையைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தாலும் அமெரிக்காவில் மக்கள் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டிய திட்டத்தில் கையொப்பமிட உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
21 Apr 2020 11 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மே 4 முதல் சென்னையில் பேருந்து சேவை?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு முடிந்து மே 4-ம் தேதி முதல் அரசுப் பேருந்தில் ஏறும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வலியுறுத்தியுள்ளது. முகக்கவசம் அணியாவிட்டால் பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறியுள்ளது. தமிழகத்தில் சென்னைதான் கொரோனா வைரஸால் அதிகமாக பாதிப்படைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

21 Apr 2020 1 PM

உடல் அடக்கத்தை எதிர்த்தால் குண்டர் சட்டம்..!

ஏ.கே விஷ்வநாத்
ஏ.கே விஷ்வநாத்
விகடன்

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு பலியான மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

21 Apr 2020 1 PM

மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்!

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு பலியான மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் பழனிசாமி, ``மருத்துவர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், `கொரோனாவிலிருந்து நம்மை காக்கப் போராடிய மருத்துவர்களை இழந்திருக்கும் இந்த வேதனையான நேரத்தில் அவர்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த மனவருத்தமளிக்கிறது. நாம் அனைவரும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென கேட்டு கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

21 Apr 2020 3 PM

கைதட்டுவதோடு நின்றுவிடக் கூடாது!

``தன் உயிரைக்கூட துச்சமென மதித்து சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் சைமன், சிகிச்சையின் போது ஏற்பட்ட கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கிறார். எந்த மக்களுக்காகத் தன் வாழ்நாளெல்லாம் சேவை செய்துவந்தாரோ, அதே மக்களின் ஒரு பிரிவினர் அவருக்கான இறுதி மரியாதையை தடுத்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தருகிறது.

நமக்காக பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரையும் மதிப்பது என்பது கைதட்டுவதோடு நின்றுவிடக் கூடாது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல் எரியூட்டப்பட்ட பின்னரோ அல்லது முறைப்படி புதைக்கப்பட்டுவிட்டாலோ நோய்த்தொற்று மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம்மைக் காக்கும் பணியில் ஈடுபட்டு காலமானவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பது நம் கடமை" என்று மருத்துவர்கள் நிலை குறித்து கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

21 Apr 2020 7 PM

அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்!

‘தொடர் ஊரடங்கு காரணமாகத் தமிழகம் முழுவதும் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் இழந்து நிற்கும் ஏழை ,எளிய மக்களும், அமைப்புசாரா தொழிலாளர்களும் தங்களின் ஒருவேளை உணவிற்குக்கூட நாள்தோறும் போராடி கொண்டிருக்கிறார்கள். திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை ஆங்காங்கே அளித்து வந்தாலும் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு மேலும் தேவையான நிவாரணத்தை வழங்கிட வேண்டிய மிக முக்கியமான கடமையும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகங்களை ஆளுங்கட்சியினருக்கு மட்டும் “குத்தகைக்கு” விட்டதைப் போல் தாரைவார்ப்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல. அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் - தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களுக்கு வருவோர் அனைவருக்கும் அரசே இலவச உணவு வழங்க வேண்டும் பேரிடர் காலத்தில் மக்களின் துயரத்தைத் துடைப்பதும், அதில் பங்கெடுத்துக் கொள்வதும், மக்கள் நலன் காக்கும் பணிகளைச் செய்வோரைப் பாதுகாப்பதும்தான் ஓர் அரசின் தலையாய கடமை என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து செயல்பட வேண்டும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.