Published:Updated:

கொரோனா நெகடிவ் வந்தவர்களுக்கு பாசிடிவ் என அறிவிப்பு - தனியார் ஆய்வு மையத்தின் அனுமதி ரத்து #NowAtVikatan

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

21-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

21 May 2021 8 PM

தனியார்   கொரோனா   பரிசோதனை   மையத்தின்   அனுமதி   ரத்து

தனியார் கொரோனா பரிசோதனை ஆய்வு மையம் ஒன்று, ICMR இணையதளத்தில் முடிவுகளை தவறாக பதிவேற்றியது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம் வெளியிட்டுள்ள உத்தரவு அறிக்கையில், ``MedAll என்ற அந்த ஆய்வு மையம், கொரோனா நெகடிவ் உள்ளவர்களுக்கு பாசிடிவ் என மாற்றி முடிவுகளை தெரிவித்திருக்கிறது. இப்படி கிட்டத்தட்ட 4000 பேரின் முடிவுகளை மாற்றி வெளியிட்டிருக்கிறது அந்த நிறுவனம்.

கொல்கத்தாவில் பரிசோதனை செய்த நோயாளியின் தகவலை கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் என ICMR இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. மேலும், மருத்துவமனைகளுடன் கூட்டு சேர்ந்து இந்த ஆய்வு மையம் தவறான தகவலை வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் பாசிடிவ் என தவறான தகவலை கொடுத்தால், மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற சேரும் வாய்ப்பிருக்கிறது. இதனால் மருத்துவமனைகள் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பிருக்கிறது.

தவறான தகவல் அளிக்கபட்டதால், உண்மையாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் கொரோனா சிகிச்சைக்கு செய்த ஏற்பாடுகள் வீணாக்கப்பட்டுள்ளன. மேலும், நெகடிவ் வந்தவர்களுக்கு பாசிடிவ் என தெரிவித்ததால், வீண் பதற்றத்தை மக்கள் மத்தியில் உண்டாக்கியிருக்கிறது அந்த நிறுவனம்.

எனவே அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் மெடால் நிறுவனத்துக்கான கொரோனா பரிசோதனை அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து அந்த நிறுவனம் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்படுகிறது." என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

21 May 2021 6 PM

அ.தி.மு.க-வில் இருந்து நிலோஃபர் கபில் நீக்கம்

அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கோட்பாடுக்கு எதிராக செயல்பட்டதால் நீக்கப்பட்டத்தாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை.

கொரோனா நெகடிவ் வந்தவர்களுக்கு பாசிடிவ் என அறிவிப்பு - தனியார் ஆய்வு மையத்தின் அனுமதி ரத்து #NowAtVikatan
21 May 2021 6 PM

2   வாரங்களில்   16,938   ஆக்ஸிஜன்  படுக்கைகள்

திருச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ``கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே மகிழ்ச்சியான நாள். ஆட்சி அமைத்த 2 வாரங்களில் 16,938 ஆக்ஸிஜன் படுக்கைகள் உருவாக்கபட்டுள்ளன. நாளை முதல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஜீரோ டிளே வார்டு திறக்கப்படுகிறது. அதன் மூலம் ஆக்ஸிஜன் தேவையிருக்கும் நோயாளிகள் ஆம்புலன்ஸில் இனி காக்கவைக்கப்பட மாட்டார்கள். எந்தவித தாமதமும் இல்லாமல் சிகிச்சைக்கு அனுமதிக்கபடுவர்.

ஜூன் 3-ம் தேதிக்குள் இரண்டாம் தவணை ரூ2,000 வழங்க ஏற்பாடு செய்யப்படும். தமிழகம் கேட்ட அளவுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். தமிழக மக்களைக் காக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம் " என்று தெரிவித்தார்.

21 May 2021 5 PM

ஸ்டெர்லைட் போராட்டம்: வழக்குகள் வாபஸ்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்

போராட்டத்தின்போது கைதுசெய்யப்பட்டு காயங்கள், மன உளைச்சலுக்கு ஆளான 93 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்குகள், சி.பி.ஐ- ஆல் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் உட்பட சில வழக்குகள் தவிர பிற வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன. போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட நபர்களின் கல்வி, வேலை வாய்ப்புக்காக தடையில்லாச் சான்று வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

21 May 2021 3 PM

சென்னையில் மழை!

கோடை வெயில் வாட்டி வதைத்துவந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில், இரண்டாவது நாளாக இன்றும் மதியத்துக்கு மேல் நல்ல மழை பெய்துவருகிறது. நேற்றும் மாலையில் நல்ல மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

மழை
மழை

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம், ``வெப்பச் சலனம் மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உட்பட 12 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்திருந்தது.

21 May 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 2,59,591 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,60,31,991 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,209. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,91,331-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை
கொரோனா இரண்டாம் அலை

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,27,12,735-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 30,27,925 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,57,295 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 19,18,79,503பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

21 May 2021 8 AM

முதல்வர் நாளை முக்கிய ஆலோசனை!

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். வரும் 24-ம் தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடையும் நிலையில், இந்த முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க, எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்து கருத்து கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின். மேலும், இந்தக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை நடைபெறும் எனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு