கொரோனா: புதிதாக 2,532 பேருக்கு பாதிப்பு! தமிழகத்தில் 60,000-த்தை நெருங்கும் மொத்த எண்ணிக்கை #NowAtVikatan

21.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
புதிதாக 2,532 பேருக்கு பாதிப்பு - தமிழகத்தில் 60,000-த்தை நெருங்கும் மொத்த எண்ணிக்கை!
தமிழகத்தில் இன்று மட்டும் 2,532பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,377 -ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,493 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 757-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1438 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெறிச்சோடிய சாலைகள்!
கொரோனா பரவல் அதிகமுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்றவை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டுசெல்லத் தடை இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சென்னை சாலைகள் - படங்கள்: தே.அசோக்குமார்
மேலும், இந்த முழு ஊரடங்கு காலத்தில் ஜூன் 21 மற்றும் ஜூன் 28 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதத் தளர்வும் இல்லாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் அத்திவாசியத் தேவைகளுக்கு மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் எனவும், இந்த முழு ஊரடங்கைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இதனால், சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடின.
`நெருப்பு வளையம்!’ 2020-ம் ஆண்டின் முதல் சூரியகிரகணம்
நெல்லையில் சூரிய கிரகணம் - படங்கள்: எல்.ராஜேந்திரன்
'நெருப்பு வளையம்' (Annular) என்று அழைக்கப்படும் சூரிய கிரகணம் இன்று காலை 9:15 மணிக்கு (IST) தொடங்கி மாலை 3:04 மணி வரை தொடரும். இந்த நூற்றாண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணமான இதை இந்தியாவில் தமிழகம் மட்டுமன்றி சமோலி, டேராடூன், ஜோஷிமத், குருக்ஷேத்ரா, சிர்ஸா மற்றும் சூரத்கர் ஆகிய இடங்களில் பார்க்க இயலும். தமிழகத்தில் 34 சதவிகிதம் மட்டுமே பார்க்க முடியும் என்கிறார்கள்.
மதுரையில் சூரிய கிரகணம் - படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்
கடந்த ஆண்டு, நெருப்பு வளைய சூரிய கிரகணம், டிசம்பர் 26-ம் தேதி 3 மணிநேரம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு, 2020-ல் நடக்கக்கூடிய முதல் சூரிய கிரகணம் இதுவே.
இந்தியாவில் 4 லட்சத்தைக் கடந்த பாதிப்பு எண்ணிக்கை!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,95,048-லிருந்து 4,10,461 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 15,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 306 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,948-லிருந்து 13,254 ஆக அதிகரித்திருக்கிறது.
அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,27,756 ஆகவும் உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 89,14,787 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பிலிருந்து 47,38,542 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,66,718 ஆக உயர்ந்துள்ளது.