Published:Updated:

தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டி.ஜி.பி உத்தரவு! #NowAtVikatan

கொலை
கொலை ( Representational Image )

21-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

21 Sep 2020 1 PM

செல்வன் கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பு கிராமத்தில் வசித்துவந்தவர், செல்வன். செல்வனின் சித்தப்பாவான சிலுவைதாசன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தை அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான திருமணவேல் என்பவர் வாங்கியிருக்கிறார். அவர் அருகிலிருந்த செல்வன் சகோதரர்களுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தையும் வேலியமைத்து ஆக்கிரமித்திருக்கிறார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே 2019-ம் ஆண்டு முதல் தகராறு இருந்துவந்திருக்கிறது.

நில அபகரிப்பு தொடர்பாக செல்வன் மற்றும் அவரின் சகோதரர்கள் அளித்த புகார்மீது நடவடிக்கை எடுக்காமல், அரசியல் பிரமுகரான திருமணவேலுக்கு ஆதரவாக தட்டார்மடம் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டரான ஹரிகிருஷ்ணன் செயல்பட்டிருக்கிறார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், திருமணவேல் தரப்பினர் கடந்த 17-ம் தேதி பைக்கில் வந்த செல்வன் மீது காரைக் கொண்டு மோதியதுடன், அவரை காரில் தூக்கிச் சென்று அடித்து உதைத்து திசையன்விளை அருகே காட்டுக்குள் தூக்கிப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்ட செல்வன்
கொலை செய்யப்பட்ட செல்வன்

செல்வன் மரணம் தொடர்பாக தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க பிரமுகர் திருமணவேல் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் ( 107, 336, 302, 364) வழக்கு பதிவு செய்தனர் போலீஸார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

21 Sep 2020 9 AM

எட்டுஉறுப்பினர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட்!

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவந்த விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்ட மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் வேளாண் மசோதாக்களை மாநிலங்களவையில் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. அப்போது சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை விதிகள் புத்தகத்தைக் கிழித்து எறிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டன.

மாநிலங்களவை
மாநிலங்களவை

இந்நிலையில் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக தெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்று காலையும் மாநிலங்களவையில் சில உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், காலை 10 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

அடுத்த கட்டுரைக்கு