Published:Updated:

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல்?! - ஏப்ரல் 3-வது வாரத்தில் நடத்த அ.தி.மு.க கோரிக்கை! #NowAtVikatan

தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

21-12-2020 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

21 Dec 2020 2 PM

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல்?

2021-ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே, அதற்கேற்ப தேர்தல் அட்டவணையை வெளியிட தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசித்துவருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் இரண்டு நாள்களுக்குத் தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

முதலில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் இருவர் கலந்துகொண்டு, தங்கள் கருத்துகளை முன்வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. . அதன்படி அ.தி.மு.க சார்பில் தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்.பி மனோஜ்பாண்டியன் ஆகிய இருவரும் சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தங்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், ``மே மாதத்தில் தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், ஏப்ரல் மாதத்தில் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறோம். 500 வாக்களர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் எனவும் எங்கள் கோரிக்கையில் தெரிவித்திருக்கிறோம்” என்றார். வழக்கமாக மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், அ.தி.மு.க முன்னதாகத் தேர்தலை நடத்தக் கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக்கழக சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ எம்.பி ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். ஆர்.எஸ்.பாரதி, ``தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலை ஒரேகட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க-வின் விருப்பம். இதை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் தெளிவாகத் தெரிவித்திருக்கிறோம்” என்றார்.

21 Dec 2020 1 PM

தனியார் மூலம் பணியாளர்களை நியமிக்கும் உத்தரவு ரத்து!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக இருக்கும் 30,000 பணியிடங்களுக்குத் தனியார் மூலம் பணியமர்த்த உத்தரவிட்ட மின்சாரத்துறை, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்திருக்கிறது. இதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவில் மண் அள்ளிப் போடுவது கண்டிக்கத்தக்கது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனத்தைப் பதிவு செய்தார். மேலும், தமிழகம் முழுவதும் ஊழியர்கள் அரசின் இந்த உத்தரவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம்

இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ``தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக இருக்கும் 30,000 பணியிடங்களுக்கு தனியார் மூலம் பணியமர்த்த அறிவிக்கப்பட்ட ஆணை ரத்து” என அறிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், ``ஊழியர்கள் போராட்டம் நடத்தாமல் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

21 Dec 2020 1 PM

ரஜினிக்கு சம்மன்!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில், நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி 19-ம் தேதி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.

21 Dec 2020 9 AM

புதிய வகை கொரோனா வைரஸ்:

இங்கிலாந்து நாட்டில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருவது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இங்கிலாந்து அரசு, கிறிஸ்துமஸை ஒட்டி அறிவித்திருக்கும் கொரோனா தளர்வுகளை நிறுத்திவைத்து, மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. உலகின் பல நாடுகள், இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்திருக்கின்றன.

இங்கிலாந்து
இங்கிலாந்து

இந்தநிலையில் புதிய கொரோனா வைரஸ் குறித்து விவாதிப்பதற்காக அவசர கூட்டத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்பாடு செய்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவலுக்குப் பிறகு மக்கள் தற்போது இயல்புநிலைக்குத் திரும்பியிருக்கும் சூழலில், இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கொரோனா வைரஸ் குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு