Published:Updated:

புதுச்சேரி: `நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி’ - நாராயணசாமி அரசு கவிழ்ந்தது! #NowAtVikatan

நாராயணசாமி
நாராயணசாமி ( ANI )

22-02-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

22 Feb 2021 11 AM

நாராயணசாமி அரசு கவிழ்ந்தது!

நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்தது. புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமியின் தலைமையிலான காங்கிரஸ் அரசு, பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து, நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவையைவிட்டு வெளியேறினர்.

22 Feb 2021 11 AM

மத்தியில் ஆட்சியில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா?

நாராயணசாமி மேலும் பேசுகையில், ``நியமன எம்.எல்-ஏக்கள் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். முதலமைச்சரிடம் மூன்று பேர்கொண்ட பரிந்துரையைக் கேட்டுப் பெற்ற பிறகு ஆலோசித்து நியமிக்க வேண்டும். கிரண் பேடி, நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் எங்களிடம் பரிந்துரையைப் பெறவில்லை. தலைமைச் செயலாளர் நியமனத்திலும் , முதலமைச்சரிடம் கருத்து கேட்கவில்லை. இது சர்வாதிகாரம் இல்லையா... மத்தியில் ஆட்சியில் இருந்தால் என்ன வேண்டுமானால் செய்வீர்களா? யாராக இருந்தாலும் பதவி என்பது நிரந்தரமில்லை. கொள்கைப் பிடிப்புடன் இருக்க வேண்டுமே தவிர பச்சோந்தியாக இருக்கக் கூடாது. இருக்கும் இயக்கத்துக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் ” என்று பேசினார்.

22 Feb 2021 11 AM

மத்திய அரசு திட்டமிட்டு புதுச்சேரியைப் புறக்கணித்தது! 

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் நாராயணசாமி, ``பல மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி தொகையாக 41% வழங்கப்பட்டது. ஆனால், தமிழகத்துக்கு 21% மட்டுமே வழங்கப்பட்டது. இந்தியைத் திணிக்க நினைத்தார்கள். நாங்கள் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுகிறோம். மாநிலத்தின் வருமானத்தைக் குறைக்க வேண்டும் என்று சதித் திட்டம் தீட்டினார்கள். இலவச அரிசி வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது. இப்படி மாநில வளர்ச்சிக்கு எதிராகச் செயல்பட்டனர். இது துரோகம் இல்லையா” என்று கேள்வி எழுப்பினார்.

22 Feb 2021 10 AM

அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது! -  நாராயணசாமி

பரபரப்பான சூழலில் புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று கூடியது. எம்.எல்.ஏ-க்கள் தொடர் ராஜினாமாவால், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, இன்று கூடிய பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அமைச்சரவையோடு நாராயணசாமி ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.

நாராயணசாமி
நாராயணசாமி
ANI

அப்போது பேசிய நாராயணசாமி, ``புதுச்சேரி மக்கள் எங்கள்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. கிரண் பேடி அளித்த நெருக்கடியைக் கடந்தும் ஆட்சியை நிறைவு செய்திருக்கிறோம். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்குப் பெரும்பான்மை இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு