Published:Updated:

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று’- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் #NowAtVikatan

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

22.3.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

22 Mar 2020 10 PM

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், “ கலிஃபோர்னியாவில் இருந்து சென்னை திரும்பிய 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் துபாயில் இருந்து திரும்பிய 43 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் அவர் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இருவரும் நலமுடன் உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

22 Mar 2020 7 PM

ராஜேந்திர பாலாஜி மீது அ.தி.மு.க நடவடிக்கை!

ராஜேந்திர பாலாஜி - ராஜவர்மன்
ராஜேந்திர பாலாஜி - ராஜவர்மன்

அ.தி.மு.க விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மனோடு மோதல் போக்கைக் கடைபிடித்தது, செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம், ஆவின் மேலாளர் தற்கொலை என பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கியிருந்த நிலையில், அ.தி.மு.க இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

22 Mar 2020 7 PM

`மெட்ரோ ரயில்கள், வெளிமாநிலங்களுக்கு பேருந்து இயக்கம் 31-ம் தேதி வரை நிறுத்தம்!’

சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்து சேவைகள் ஆகியவை வரும் 31-ம் தேதி நள்ளிரவு வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட 75 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

22 Mar 2020 6 PM

நடிகர் விசு காலமானார்

நடிகர், இயக்குநர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர் விசு. சிறுநீரகக் கோளாறு காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதற்கான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டுவந்தார். இந்நிலையில், அவர் இன்று (22-ம் தேதி) மாலை 5.35மணி அளவில் சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவர், 'சம்சாரம் அது மின்சாரம்', 'திருமதி ஒரு வெகுமதி', 'மணல் கயிறு' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

22 Mar 2020 12 PM

தமிழகத்தில் 7-வது நபருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தைப் பொறுத்தவரை 6 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயினில் இருந்து தமிழகம் வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 6 ஆக உயர்ந்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில், கொரோனா பாதிப்பால் 38 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

22 Mar 2020 12 PM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 324 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. தற்போது பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 315 -லிருந்து 324 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவாமல் தடுக்க இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 63 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

22 Mar 2020 11 AM

மும்பையில் 63 வயது முதியவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 63 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கெனவே, கர்நாடகம் உள்ளிட்ட இடங்களில் சிலர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

22 Mar 2020 7 AM

இந்தியாவில் பாதிப்பு நிலவரம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 12 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, தற்போது மட்டும் 52 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இத்தாலியில் கொரோனா பாதிப்பின் காரணாமாக ஒரே நாளில் 800 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இறப்பு எண்ணிக்கை 4000-க்கும் அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு