Published:Updated:

`ஒரே நாளில் 786 பேருக்குத் தொற்று’ - தமிழகத்தில் 15,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு #NowAtVikatan

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

22.5.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

22 May 2020 8 PM

அவசர எண் மாற்றம்!

பி.எஸ்.என்.எல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காவல் அவசர எண் 100, 112-க்கு பதிலாக மாற்று எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வந்துள்ள ஒரு செய்தி குறிப்பில், “பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்டெல், வோடஃபோன், ஐடியா மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களின் கைப்பேசியிலிருந்து காவல் அவசர அழைப்பு எண் 100 மற்றும் 112 அழைப்புகளை காவல் கட்டுப்பாட்டறையில் பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தற்காலிகமாக 044 - 46100100 மற்றும் 044 - 71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்“ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

22 May 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு!

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் மேலும் 786 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 14,753 ஆக அதிகரித்திருக்கிறது என சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 569 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் இதுவரை 9,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 7,128 ஆக இருக்கிறது. குணமடைந்தோர் சதவிகிதம் என்பது 48% ஆக இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு 98 ஆக இருக்கிறது.

22 May 2020 4 PM

உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு தலைவரானார் ஹர்ஷ் வர்தன்

அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு தலைவர் பொறுப்பை ஏற்றார் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன். 34 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட உலக சுகாதார நிறுவன நிர்வாக வாரியத்தின் தலைவர் பதவியை இந்தியாவுக்கு ஒதுக்க 194 நாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன. இதையடுத்து, உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் இன்று அவர் பதவியேற்றுக்கொண்டார்.

22 May 2020 3 PM

பாகிஸ்தானில் விமான விபத்து!

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து கராச்சி நகருக்கு 90 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் உயிரிந்தவர்கள் குறித்து தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

22 May 2020 12 PM

சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோ, ரிக்‌ஷாக்கள் இயக்க அனுமதி!

சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி பயணிக்கும் வகையில் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்களை இயக்கலாம் என அரசு கூறியுள்ளது.

22 May 2020 10 AM

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு!

ரெப்போ ரேட் 4.04 % லிருந்து 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரம் 13% முதல் 32% வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும். ஜிடிபி சிறிதளவுகூட வளர்ச்சி ஏற்படும் சூழல், இந்த நிதியாண்டில் இல்லை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளைச் சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி அச்சப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி, நடப்பாண்டில் வீழ்ச்சியைச் சந்திக்கும். எனினும் குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும். வங்கிக்கடன் தவணைகளைச் செலுத்த 3 மாதம் கூடுதல் கால அவகாசம்" என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

22 May 2020 9 AM

செய்தியாளர்களைச் சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர்!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்னும் சற்றுநேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

22 May 2020 8 AM

3 டிஎஸ்பி-க்கள் இடமாற்றம்!

தமிழகத்தில் காவல்துறை டிஎஸ்பி-க்கள் 3 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். செய்யாறு சரக டிஎஸ்பி பி.சுந்தரம் வடசென்னை போக்குவரத்துப் புலனாய்வு உதவி ஆணையராகவும், வடசென்னை போக்குவரத்து உதவி ஆணையராக இருந்த பிரகாஷ் பாபு பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஎஸ்பி-யாகவும், வேலூர் நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு டிஎஸ்பி சுரேஷ் திருவண்ணாமலை செய்யாறு சரக டிஎஸ்பி-யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

22 May 2020 8 AM

வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக்க அவசர சட்டம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அவரது இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

22 May 2020 8 AM

பா.ஜ.க-வில் இன்று இணைகிறார் வி.பி.துரைசாமி!

தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி சமீபத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகனை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.பி.துரைசாமி நீக்கப்படுவதாக ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இதற்கிடையே, இன்று பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தி.மு.க-வில் இருந்து பதவி பறிக்கப்பட்ட வி.பி.துரைசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு