Published:Updated:

கொரோனா அப்டேட்: தமிழகத்தில் ஒரே நாளில் 2,710 பேருக்கு தொற்று; 60 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு #NowAtVikatan

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

22.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

22 Jun 2020 7 PM

தமிழகத்தில் இதுவரை இல்லாத பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும், இதுவரை இல்லாத அளவாக 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,087-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,487பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,752ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் இன்று கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 794-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

22 Jun 2020 4 PM

மதுரையில் முழு முடக்கம்!

சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் தற்போது கடுமையான பொது முடக்கம் அமலில் இருக்கிறது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தற்போது கடுமையான ஊரடங்கு அமலில் இருக்கிறது.

மதுரை மாநகரக் காவல்துறை அலுவலகம்
மதுரை மாநகரக் காவல்துறை அலுவலகம்

இந்த நிலையில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், மதுரையில் நாளை நள்ளிரவு முதல் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் முழு முடக்கம் அமலில் இருக்கும். நாளை நள்ளிரவு முதல் மதுரையில் டீக்கடைகள் இயங்க அனுமதி இல்லை. உணவகங்கள் பார்சல் மட்டுமே அனுமதி. மக்கள் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும். மளிகைப் பொருள்களை அருகில் இருக்கும் கடைகளில் வாங்க வேண்டும். மளிகைக் கடைகள் மற்றும் காய்கறிக் கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். வாகனப் போக்குவரத்தை அவசியம் இல்லாமல் பயன்படுத்தத் தடை. அத்தியாவசிய வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் சரக்கு வாகனங்கள் வழக்கம்போல் இயங்கும். மருத்துவமனைகள், மருந்தகங்கள் வழக்கம்போல் செயல்படும்.

22 Jun 2020 3 PM

பாதுகாப்பான முதலீடு? இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம், வெள்ளி விலை!

ஜூன் மாதத்திலிருந்து தற்போது வரையில், பெரும்பலான நாள்கள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து காணப்பட்டன. ஒரு சில நாள்கள் மட்டுமே விலை குறைவாக இருந்தது. இந்தியாவில் தங்கத்தின் விலை, சர்வதேச மதிப்பு மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஏறி இறங்கும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், பெரிய அளவில் தொழில்துறை தேக்கம் ஏற்பட்டது. இந்தச் சூழலில், மக்கள் பலரும் பாதுகாப்பற்ற துறைகளில் முதலீடுகளைச் செய்வதை விரும்பவில்லை. இதன் காரணமாக, தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இதுவே தற்போதைய விலையேற்றத்துக்குக் காரணமாக சொல்லப்படுகிறது.

ஆபரணத் தங்கம்
ஆபரணத் தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து ரூ.4,629 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.168 அதிகரித்து ரூ.37,032-க்கு விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 38,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 70 பைசா உயர்ந்து 54.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

22 Jun 2020 1 PM

வீடு வீடாக ரூ.1,000 வழங்கும் பணி தொடக்கம்!

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள 4 மாவட்டங்களில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி இன்று தொடங்கியது. நியாயவிலைக் கடை ஊழியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள், வீடு வீடாகச் சென்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் கொரோனா குறித்த 4 பக்க விளக்கக் குறிப்பும் வழங்குகின்றனர்.

நியாய விலைக்கடை ஊழியர்கள்
நியாய விலைக்கடை ஊழியர்கள்
கே.ஜெரோம்

கொரோனா பரவலைத் தடுக்க, ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும், ஜூன் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில், எந்தவிதத் தளர்வுகளுமின்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

22 Jun 2020 11 AM

கௌசல்யாவின் தந்தை விடுதலை - 5 பேருக்கு தண்டனைக் குறைப்பு

உடுமலை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், 5 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அதேபோல், தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை உறுதி செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கீழமை நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து காவல்துறை தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.

22 Jun 2020 10 AM

24 மணிநேரத்தில் 14,821 பாசிட்டிவ்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,10,461லிருந்து 4,25,282 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 14,821 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 445 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,254லிருந்து 13,699ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,37,196 ஆகவும் உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 90,44,563ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பிலிருந்து 48,37,952 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,70,665ஆக உயர்ந்துள்ளது.

"கொரோனா, நோய்க் கட்டுப்பாட்டுக் குழுவில் சித்த மருத்துவர் எங்கே?"- தமிழக அரசு தரும் விளக்கம்
அடுத்த கட்டுரைக்கு