Published:Updated:

`தெரிந்த செய்தி... உறுதி செய்திருக்கிறார்கள்!’ - அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்து கமல்ஹாசன் #NowAtVikatan

கமல்ஹாசன்
கமல்ஹாசன் ( வி.ஸ்ரீனிவாசுலு )

22-11-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

22 Nov 2020 4 PM

`தெரிந்த செய்தி... உறுதி செய்திருக்கிறார்கள்!’ - கமல்

எல்டாம்ஸ் ரோடு மாநகராட்சி பள்ளியில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமை கமல்ஹாசன் பார்வையிடுகிறார்! வீடியோ: வி.ஸ்ரீனிவாசுலு

Posted by Junior Vikatan on Sunday, November 22, 2020

சென்னை எல்டாம்ஸ் ரோடு, மாநகராட்சிப் பள்ளியில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``சட்டப்பேரவைத் தேர்தலின்போது பல கூட்டணிகள் உருவாகலாம். பல கூட்டணிகள் உடையலாம். பா,ஜ,க - அ.தி.மு.க கூட்டணி அறிவிப்பு என்பது தெரிந்த செய்தி. அதை உறுதி செய்திருக்கிறார்கள்.

மனுதர்மப் புத்தகம் குறித்து நான் பேசியது விவாதமானது. மனுதர்மப் புத்தகம் புழக்கத்தில் இல்லை என்பது உண்மை. அதனால் அது தேவையில்லை என்பது மிகப்பெரிய உண்மை” என்றார் கமல்!

22 Nov 2020 1 PM

அரசியல், மதக் கூட்டங்களுக்கான தடை தொடரும்

கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் அனைத்துவிதமான நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் தற்போது வரும் 25-ம் தேதி முதல் தமிழகத்தில் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 50% பார்வையாளர்களுடன் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

வேல் யாத்திரை
வேல் யாத்திரை

என்றாலும் தமிழகத்தில், கொரோனா பரவலைத் தடுக்க அனைத்துவிதமான அரசியல், மத நிகழ்ச்சிகளுக்கும் தடை தொடர்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் வேல் யாத்திரையும், தி.மு.க தனது பிரசார திட்டத்தையும் தொடங்கியிருக்கும் நிலையில் தமிழக அரசு இந்தத் தடை உத்தரவை நீட்டித்திருக்கிறது!

22 Nov 2020 12 PM

கரையைக் கடக்கும் புயல்!

இந்தியப் பெருங்கடல், தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால், வரும் 23-ம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு தமிழகம் புதுச்சேரியில் இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மழை
மழை
ராகேஷ் பெ

இந்தநிலையில், தற்போது வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி, வரும் 25 -ம் தேதி அதுவே புயலாக மாறி மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கடலோரப் பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

22 Nov 2020 11 AM

விஜய் மக்கள் இயக்கத்தைக் கட்சியாகப் பதிய வேண்டாம்!

இயக்குநர் எஸ்.ஏ.சி., நடிகர் விஜய் பெயரில் கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சிக்கும், தனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றும், தனது ரசிகர்கள், தங்களை அந்தக்கட்சியில் இணைத்துக்கொண்டு பணியாற்ற வேண்டாம் என்றும் நடிகர் விஜய் தெரிவித்தார், மேலும், அந்தக் கட்சியின் பொருளாளராக அறிவிக்கப்பட்ட ஷோபா, கட்சியிலிருந்து விலகினார். தொடர்ந்து தலைவர் பத்மநாபனும் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.

விஜய் | #Vijay65
விஜய் | #Vijay65

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே `அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தைக் கட்சியாகப் பதிய வேண்டாம்’ எனத் தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம் எழுதியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு