Published:Updated:

‘திட்டமிட்டபடி நாளை பேரணி’ - மு.க.ஸ்டாலின் #NowAtVikatan

22.12.2019 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

ஸ்டாலின்
ஸ்டாலின்
22 Dec 2019 10 PM

திட்டமிட்டபடி நாளை பேரணி!

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “நாளைய தினம் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணியை நடத்த இருக்கிறோம். அந்த பேரணிக்கு ஆளுங்கட்சியான அ.தி.மு.க மிகப்பெரிய விளம்பரம் செய்துள்ளது அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த பேரணியை தடுப்பதற்காக சிலரின் உதவியுடன் அ.தி.மு.கவினர் முயற்சி செய்தனர். எங்களுக்கு நீதிபதி தரப்பில் இருந்து எந்த அழைப்பு வரவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி போராட்டத்துக்கு தடைவிதிக்கமுடியாது என கூறியதாக தகவல் வந்துள்ளது. நாளை மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தப்படும். நீதிமன்றம் அளித்த உத்தரவு எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி" என்றார்.

22 Dec 2019 9 PM

தொடரை வென்றது இந்தியா!

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பூரன் 89 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா- கே.எல்.ராகுல் இருவரும் சிறப்பான தொடக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 122 ரன்களை சேர்த்தது. இருவரும் அரைசதம் கடந்தனர். ரோஹித் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

விராட் கோலி
விராட் கோலி

இந்நிலையில் கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பன்ட், ஜாதவ் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்ததால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. கோலி - ஜடேஜா இணை இந்தியா மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. பரபரப்பான இறுதிக்கட்டத்தில் கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதனையடுத்து ஷர்துல் தாக்கூர் களமிறங்கினர். ஜடேஜா - தாக்கூர் இந்திய அணியை வெற்றிப் பெற வைத்தனர். பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்கூர் பவுண்டரி, சிக்ஸர் என இறுதிக்கட்டத்தில் அட்டாகசப்படுத்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

22 Dec 2019 9 PM

தி.மு.க பேரணிக்கு அனுமதி மறுப்பு எனத் தகவல்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தி.மு.க மற்றும் அதன்கூட்டணி கட்சிகள் நடக்கவுள்ள பேரணிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் இருந்து தி.மு.க-விற்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் விசாரணை தொடங்கவுள்ளது. அதில், போலீஸ் தரப்பில் இந்த விவரம் தெரிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

22 Dec 2019 8 PM

தி.மு.க பேரணிக்கு எதிராக வழக்கு!

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக நாளை தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை பேரணி நடைபெறவுள்ளது. இந்த பேரணிக்கு தடை கேட்டு தொடர்ந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பு அவசர வழக்காக தொடரப்பட்டுள்ள இந்த மனு மீதான விசாரணை இன்னும் சற்று நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா முன்னிலையில் நடைபெறவுள்ளது.

22 Dec 2019 5 PM

இந்தியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக பூரன் 89 ரன்கள் எடுத்தார்.

இவரும் கேப்டன் பொல்லார்டும் சேர்ந்து வெஸ்ட் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பூரன் அவுட் ஆன பிறகு கடைசி ஓவரில் பொல்லார்டு இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். கடைசி 10 ஓவர்களில் 118 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்தது குறிப்பிட்டத்தக்கது.

22 Dec 2019 2 PM

டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது முறை!

கராச்சியில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி, இலங்கைக்கு 476 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 191 ரன்களும் இலங்கை 271 ரன்களும் எடுத்தன. 80 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, நான்காவது நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 476 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நான்கு பேருமே சதமடித்து அசத்தினர். ஷான் மசூத் 135 ரன்களும், அபித் அலி 174 ரன்களும் எடுத்தனர். அதன்பின்னர் களம்கண்ட கேப்டன் அசார் அலி 118 ரன்களும் பாபர் ஆசம் 100 ரன்களும் எடுத்தனர். டெஸ் வரலாற்றில் ஒரு அணியின் டாப் ஆர்டரின் 4 வீரர்கள் சதமடிப்பது இது இரண்டாவது நிகழ்வாகும்.

இதற்கு முன்பாக கடந்த 2007ம் ஆண்டு வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்தியாவின் தினேஷ் கார்த்திக், வாசிம் ஜாபர், ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் என டாப் ஆர்டரைச் சேர்ந்த 4 வீரர்கள் சதமடித்திருந்தனர்.

22 Dec 2019 1 PM

இந்திய அணி ஃபீல்டிங்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

விராட் கோலி - பொல்லார்ட்
விராட் கோலி - பொல்லார்ட்
BCCI

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கெனவே நடந்துமுடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளதால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி தொடரையும் வெல்லும். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று இந்தியா ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய தீபக் சஹாருக்குப் பதிலாக நவ்தீப் சைனி இன்றைய போட்டியில் அறிமுக வீரராக இந்திய அணியில் களம் காண்கிறார்.

22 Dec 2019 9 AM

ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க சட்டத் திருத்தம்!

எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா
எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா

இலங்கையில் இருந்து தமிழகம் வந்த ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், அதுதொடர்பாக உரிய நேரத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

22 Dec 2019 8 AM

விடுப்பு ரத்து!

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நாளை தவறாமல் பணிக்கு வரவேண்டும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்திருக்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நாளை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்தப் பேரணியில் பங்கேற்க மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தி.மு.க அழைப்பு விடுத்திருந்தது. இந்தநிலையில் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு நாளை வழங்கப்பட்டிருந்த விடுப்பு ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்திருக்கிறது. அதேபோல், ஊழியர்கள் அனைவரும் தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான சுற்றறிக்கையை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அனுப்பியிருக்கிறார்.