Published:Updated:

`நித்தியைப் பிடிக்க இன்டர்போல்; ப்ளூ கார்னர் நோட்டீஸ்!'- மத்திய அரசு கிடுக்குப்பிடி #NowAtVikatan

நித்யானந்தா
நித்யானந்தா

22.1.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

22 Jan 2020 3 PM

நித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்!

சர்ச்சை சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பிச்சென்று, ஈக்வடார் நாட்டில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் அங்கு தனி நாடு ஒன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் தகவல்கள் வெளியாயின. அதற்கேற்பவே, `தனித் தீவுக்கு `கைலாசா’ என்று பெயர் சூட்டி தனி நாட்டுக்குக் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களுக்காகத் தனி இணையதளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் அவர் ஈக்வடார் நாட்டில் இல்லை என்று தகவல் வெளியானது. தஞ்சம் கோரி ஈக்வடார் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார் நித்யானந்தா. ஆனால், ஈக்வடார் அரசு அவருக்கு அனுமதி மறுத்ததால் அவர் ஹெய்ட்டிக்குச் சென்று இருக்கலாம் என்றுக் கூறப்பட்டது. இதனால் அவர் இருக்கும் இடம் மர்மமாகவே இருந்து வருகிறது.

இதற்கிடையே, அவர் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள மத்திய அரசு சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் உதவியை நாடியுள்ளது. அதன்படி, நித்யானந்தாவின் இருப்பிடத் தகவலைப் பெற தற்போது ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது இன்டர்போல் அமைப்பு. சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளைக் கண்டால் தகவல் அளிப்பதே ப்ளூ கார்னர் நோட்டீஸ் ஆகும்.

22 Jan 2020 1 PM

மறைமுகத் தேர்தல்!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மறைமுகத் தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு வரும் 30-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

22 Jan 2020 11 AM

சி.ஏ.ஏ-வுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. 144 மனுக்களின் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் திட்டவட்டம். ’அனைத்து மனுக்களையும் விசாரிக்காமல் ஒருதலைப்பட்சமான உத்தரவை பிறப்பிக்கப்போவதில்லை’ என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

22 Jan 2020 10 AM

`காஷ்மீர் பிரச்னையில் உதவ தயார்!’

உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பாக பேசிய ட்ரம்ப், ``பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நல்ல நண்பர். அவருடன் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்னைகள் தொடர்பாகவும் விவாதிக்க உள்ளேன். எங்களால் இந்தப் பிரச்னையில் உதவ முடியும் என்றால் நிச்சயம் உதவ தயாராக இருக்கிறோம். இந்த விவகாரங்களை கூர்மையாக கவனித்து வருகிறோம்” என்றார்.

`பாகிஸ்தானை நம்புகிறேன்; காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்!’ - சொன்னதையே சொல்லும் ட்ரம்ப்

இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ``இந்தியாவின் நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு பிரச்னை தரக்கூடியதாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு சுமுகத் தீர்வை ஏற்படுத்தி தரும் என நம்புகிறோம்'' என்று தெரிவித்திருந்தார். முன்னதாகவே ட்ரம்ப் காஷ்மீர் விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய விருப்பம் தெரிவித்து வந்தார். ஆனால், காஷ்மீர் என்பது உள்நாட்டுப் பிரச்னை. இதில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என இந்தியா மறுப்பு தெரிவித்துவிட்டது

22 Jan 2020 8 AM

அமெரிக்காவிலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

corona virus
corona virus
pixabay

சீனாவை கொரோனா வைரஸ் தற்போது அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸானது நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் தன்மைகொண்டது. இந்த வைரஸ் கிருமிகள் காற்றில் பரவும் தன்மை கொண்டதால், ஒரே நேரத்தில் பலருக்கும் தொற்று ஏற்படும். பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும்போதும், சளியைக் காறித் துப்பும்போதும் இந்தக் கிருமிகள் காற்றில் கலந்து, அதைச் சுவாசிக்கும் மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். சீனாவின் பல நகரங்களில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 440 -ஐ தாண்டியுள்ளது. தாய்லாந்தில் இரண்டு பேர் மற்றும் ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் தலா ஒருவர் வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். நோயின் தாக்கம் அதிகமாவதை அடுத்து உலக சுகாதார மையம் (WHO) இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளது.

இந்த நிலையில், நேற்று சீனாவில் இருந்து அமெரிக்கா வந்த பயணி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 30 வயது மதிக்கத்தக்க அவர் தற்போது நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுள்ளது.

22 Jan 2020 7 AM

ட்விட்டரில் டிரெண்ட் ஆன தெலுங்கு ரீமேக் `அசுரன்'!

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் தமிழக ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் சாதிய பாகுபாடுகளையும் எடுத்துரைத்த `அசுரன்' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் வெங்கடேஷ், தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். கலைப்புலி தாணுவுடன் சேர்ந்து சுரேஷ் புரொடெக்ஷன்ஸ் என்ற நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. ஸ்ரீகாந்த் அட்டல்லா என்பவர் இயக்குகிறார். மணிசர்மா இசை அமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கும் நிலையில் நேற்று வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. #Naarappa என்னும் ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் டிரெண்ட் அடித்தது.

அடுத்த கட்டுரைக்கு