Published:Updated:

மகளிர் உலகக்கோப்பை டி20 தொடரில் முதல்முறை! - சாதனை வெற்றியை வசமாக்கிய தென்னாப்பிரிக்கா #ENGvSA #NowAtVikatan

தென்னாப்பிரிக்க அணி
தென்னாப்பிரிக்க அணி ( Twitter )

23-02-2020 |இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

23 Feb 2020 9 PM

சாதனை வெற்றியை வசமாக்கிய தென்னாப்பிரிக்கா #ENGvSA

மகளிர் உலகக் கோப்பை டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்கீவர் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் அயபோன்கா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தென்னாப்பிரிக்க அணி
தென்னாப்பிரிக்க அணி
Twitter

இதையடுத்து 124 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது. கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிங்கிள்கள் எடுக்கப்பட்டன. அதையடுத்து, மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய டுப்ரீஸ், அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். இங்கிலாந்து அணிக்கெதிரான கடந்த 11 டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும். அதேபோல், மகளிர் உலகக் கோப்பை டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிராக தென்னாப்பிரிக்க அணியின் முதல் வெற்றி இதுவாகும்.

23 Feb 2020 8 PM

இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார். இந்தியாவுக்கு முதன்முறையாக வரும் ட்ரம்ப் நாளை, நாளை மறுநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்காவில் இருந்து தனிவிமானம் மூலம் இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன்பு வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப் “இந்திய மக்களுடன் இருக்கப் போவதை எதிர்நோக்கியுள்ளேன். மோடி என்னுடைய இனிய நண்பர். இந்திய மக்கள் கண்டிராத மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும் என மோடி கூறியுள்ளார்” என்றார். நாளை பகல் 12.30 மணிக்கு அகமதாபாத் வரும் ட்ரம்பை பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்க உள்ளனர்.

23 Feb 2020 12 PM

நிதானம் காட்டும் இந்தியா!

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது, இந்திய அணி நியூஸிலாந்து அணியை விடவும் 39 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. ரஹானே 25 ரன்களுடனும், ஹனும விஹாரி 15 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி இன்று நிதான ஆட்டத்தையே கடைப்பிடித்தது. புஜாரா 81 பந்துகள் 11 ரன்கள் எடுத்தார், கோலி 43 பந்துகளில் 19 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது களத்தில் இருக்கும் விஹாரி, 70 பந்துகளில் 15 ரன்கள் எடுத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் சொதப்பிய கேப்டன் கோலி, இந்த முறையும் சொதப்பினார். அவர், போல்ட் பந்துவிச்சில் ஆட்டமிழந்தார். முன்னதாக காயத்தில் இருந்த போல்ட், இந்தியத் தொடருக்கான நியூஸிலாந்து அணிக்குத் திரும்பினார். அப்போது அவர், ``கோலி போன்ற உலகத் தரமிக்க வீரரை ஆட்டமிழக்கச் செய்வதன் மூலமாக நம்பிக்கை கிடைக்கும்" என்றார். தற்போது, கோலி விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் போல்ட். நாளை நான்காம் நாள் ஆட்டத்தில், இந்திய அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய காட்டாயத்தில் உள்ளது.

23 Feb 2020 8 AM

நியூஸிலாந்து ஆல் அவுட்!

நியூஸிலாந்தின் வெலிங்டன் மைதானத்தில் இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 165 ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, நிதானமாகவும் இந்திய அணியின் பந்துவீச்சை கணித்தும் விளையாடியது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 89 ரன்கள் எடுத்தார். ஒருகட்டத்தில், நியூஸிலாந்து அணி வில்லியம்சனின் விக்கெட்டை இழந்த பின்னர் தடுமாறியது. 7 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களுடன் விளையாடியது. ஆனால், டெயிலெண்டர்ஸ் ஜேமிசன் மற்றும் ட்ரென்ட் போல்ட்டின் இறுதிக்கட்ட அதிரடியான ஆட்டத்தால், அந்த அணி 348 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகள் எடுத்தார். அஷ்வின் 3 விக்கெட்டுகளும் பும்ரா, ஷமி தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 183 ரன்கள் பிந்தங்கிய நிலையில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் தற்போது விளையாடிவருகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷா 14 ரன்னில் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் மற்றும் புஜாரா ஆகியோர் தற்போது விளையாடிவருகின்றனர். இந்திய அணி தற்போது, ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்களுடன் விளையாடிவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு