`தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று’ - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் #NowAtVikatan

23.3.2020 |இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!
முடிவுக்கு வந்த ஜனதா ஊரடங்கு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, பிரதமர் மோடி நேற்று ஒருநாள் ஜனதா ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று, நேற்று மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். தமிழகத்தில் இந்த ஊரடங்கு உத்தரவு, இன்று அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி வரையில் சென்னை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.

இந்த நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசுப் பேருந்துகள் குறைந்த அளவில் ஓடத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் மட்டுமே தற்போது பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மக்கள், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக, காலை முதலே குறைந்த அளவில் வெளியே வரத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட மத்திய அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. லாக்-டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட இந்த மூன்று மாவட்டத்தில் உள்ள மக்கள், அத்தியாவசிய தேவைகள் அன்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா...தி.மு.க புறக்கணிப்பு!
கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், இன்று கொரோனா வைரஸ் காரணமான நடப்பு கூட்டத்தொடரைப் புறக்கணிப்பதாக தி.மு.க, காங்கிரஸ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன. முன்னதாகவே தி.மு.க சென்னை அல்லாத பிற மாவட்ட உறுப்பினர்களை வர வேண்டாம் எனச் சொல்லியிருந்தது.
தீவிரமாகப் பின்பற்றவில்லை - மோடி..!
கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி, ``பெரும்பாலான மக்கள் இன்னும் இந்த லாக்-டவுன் நடவடிக்கையைத் தீவிரமாகப் பின்பற்றவில்லை. நீங்கள் உங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்... உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும். தயவுசெய்து வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். நாட்டில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
`கொரோனா தடுப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.500 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சட்டசபையில் முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்று அறிகுறிகளை அரசுக்குத் தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கடும் எச்சரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகளுக்கு முதற்கட்டமாகச் சோதனை செய்யப்படும். காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் மருத்துவமனையில் அவர்கள் தனிமைபடுத்தப்படுவார்கள். காய்ச்சல் அறிகுறிகள் இல்லாதவர்கள் வீட்டில் தங்களைத் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும்.

ஆனால், அப்படி வீட்டுக்குச் சென்ற பலர் வெளியில் நடமாடுவது தெரிய வந்துள்ளது. இதனால் தமிழக அரசு அவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வீட்டில் தனிமையில் இருக்க வேண்டியவர்கள் வெளியில் நடமாடினால் அவர்களது பாஸ்போர்ட் தடை செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் 3,000 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. அவ்வாறான வீடுகளில் ஸ்டிக்கர்களை ஒட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 144 தடை உத்தரவு!
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அனைத்து மாநில எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இன்று சட்டப்பேரவையில் நடந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில், நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிகரித்த கொரோனா பலி எண்ணிக்கை!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை நாடு முழுவதும் 415 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது நபர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக யூனியன் பிரதேசங்கள் உள்பட 19 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு முதல் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள விமான நிலையங்கள் மூடப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ப்ளஸ் ஒன் தேர்வு ஒத்திவைப்பு; ப்ளஸ் டூ தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்!
தமிழகத்தில் வரும் 26-ம் தேதி நடைபெறவிருந்த ப்ளஸ் ஒன் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், நாளை (24.3.2020) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ப்ளஸ் டூ தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

அதேபோல், தமிழகத்தில் நாளை மாலை 6 மணிக்கு அமலாகும் தடை உத்தரவு வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், “புரசைவாக்கத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கும் திருப்பூரைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இவர்கள் இருவரும் சமீபத்தில் லண்டனில் இருந்து திரும்பியது தெரியவந்துள்ளது. அதேபோல் மதுரையை சேர்ந்த 54 வயது நபருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவக்கண்காணிப்பில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.