Published:Updated:

தமிழகத்தில் கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 2,516 பேருக்கு பாதிப்பு; 800 -ஐ கடந்த பலி எண்ணிக்கை #NowAtVikatan

கொரோனா
கொரோனா

23.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

23 Jun 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா நிலவரம்!

தமிழகத்தில், இன்று மட்டும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,603 -ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,380 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,205ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா கார்ட்டூன்
கொரோனா கார்ட்டூன்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

தமிழகத்தில், கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 39 அதிகரித்த நிலையில், இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 833 -ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,227பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

23 Jun 2020 9 PM

ஜோக்கோவிச்-க்கு கொரோனா!

Djokovic
Djokovic
AP

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான செர்பிய நாட்டைச் சேர்ந்த நோவாக் ஜோக்கோவிச்-க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் விளையாட்டு உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

23 Jun 2020 4 PM

`நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு’

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர், காமராஜர் சிலை அருகில் செல்போன் விற்பனைக்கடை நடத்திவந்தார். கடந்த 19-ம் தேதி, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் கடையைத் திறந்துவைத்திருந்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். போலீஸார் ஜெயராஜை தாக்கியபோது, பென்னிக்ஸ் போலீஸாரைத் தட்டிக் கேட்டாராம்.

அப்போது, போலீஸாருக்கும் பென்னிக்ஸுக்கும் மீண்டும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். பணி செய்யவிடாமல் தடுத்ததாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், நேற்று இரவு நெஞ்சுவலிப்பதாகக் கூறிய பென்னிக்ஸை, போலீஸார் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். வரும் வழியிலேயே பென்னிக்ஸ் உயிரிழந்தார். இந்த நிலையில், இன்று காலை பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜும் உயிரிழந்தார். அடுத்தடுத்த சில மணி நேரங்களில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகன், தந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சாத்தான்குளத்தில் போலீஸாரைக் கண்டித்து வணிகர்கள் கடைகளை அடைத்து, பேருந்து நிலையம் அருகில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பென்னிக்ஸ் - ஜெயராஜ்
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

இந்த சம்பவத்தைக் கண்டித்து, நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் தா.வெள்ளையன் அறிவித்துள்ளார். இருவர் உயிரிழப்புக்குக் காரணமான போலீஸார் மீது கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

23 Jun 2020 11 AM

இந்தியாவில் 4.5 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,25,282-லிருந்து 4,40,215 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 14,933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை எப்போது ஏற்படும்?

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 312 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,699-லிருந்து 14,011 அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,48,190 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா
கொரோனா

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 91,85,974 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 49,21,380 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,74,257ஆக உயர்ந்துள்ளது.

உ.பி அரசு காப்பக சர்ச்சை: 57 சிறுமிகளுக்கு கொரோனா; 7 சிறுமிகள் கர்ப்பம்!
அடுத்த கட்டுரைக்கு