Published:Updated:

Tamil News Today: ``ஒன்றிய அரசு என்று சொல்வது சமூகக் குற்றமல்ல!’’ - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

23-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...

23 Jun 2021 7 PM

``ஒன்றிய அரசு என்று சொல்வது சமூகக் குற்றமல்ல !’’ - முதல்வர் ஸ்டாலின்

Tamilnadu CM MK Stalin
Tamilnadu CM MK Stalin

இன்று சட்டமன்றத்தில், `ஒன்றிய அரசு’ எனத் தமிழக அரசு அழைப்பது குறித்த விமர்சனத்துக்கு பதிலளிக்கும்விதமாகப் பேசினார். அதில்,``ஒன்றிய அரசு என்று சொல்வதை சமூகக் குற்றம்போல பார்க்கிறார்கள் அது தவறு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதையே நாங்கள் பேசினோம்’’ என அரசியலைமப்புச் சட்டத்தை மேற்கோள்காட்டிப் பேசினார். ``மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பதுதான் ஒன்றியத்தின் பொருள்’’ என்றார். மேலும், ``தி.மு.க-வின் 1957-ம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையிலேயே இந்திய யூனியன் என்றுதான் குறிப்பிட்டுள்ளோம்’’ என்று கூறியவர், ``ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. ஒன்றியம் என்ற வார்த்தையிலேதான் கூட்டாட்சி உள்ளது. எனவே, நாங்கள் அதை பயன்படுத்துகிறோம், பயன்படுத்துவோம், பயன்படுத்திக்கொண்டே இருப்போம்’’ என்றார்.

23 Jun 2021 5 PM

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் வகை கொரோனா!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்புகள், உச்சகட்டத்தை அடைந்து, ஊரடங்குக்குப் பிறகு தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது. இதன் காரணமாக மாநிலத்தில் ஒரு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். இந்த வகை வைரஸ் ஏற்கெனவே மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு டெல்டா ப்ளஸ் வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா ப்ளஸ் வகை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

23 Jun 2021 3 PM

`நீட் தேர்வில் விலக்கு பெற அ.தி.மு.க-வும் துணை நிற்க வேண்டும்!’

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் கடந்த திங்கள்கிழமை அன்று தொடங்கி, தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. சட்டசபையில் இன்று நீட் தேர்வு ரத்து தொடர்பான விவாதம் நடைபெற்றது. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ``நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தபோது நான்கைந்து முறை நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அவரிடம் வலியுறுத்தினேன். நீட் தேர்வு விலக்கு பெற அ.தி.மு.க-வும் துணை நிற்க வேண்டும். நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்ததும், இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பின்னர் நீட் தேர்வு தொடர்பாகப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், `நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கு அ.தி.மு.க துணை நிற்கும்’ என்றார்.

23 Jun 2021 11 AM

`தமிழகத்தின் நிதி நிலைமை சீரடைந்ததும் விலை குறைக்கப்படும்!’

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து, சில பகுதிகளில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100-ஐ கடந்திருக்கிறது. தொடர்ந்து மாநில அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்தநிலையில், ``பெட்ரோல் டீசல் விலையில் வாட் வரியைத் தற்போது குறைக்க முடியாது. தமிழகத்தின் நிதி நிலைமை சீரடைந்ததும் விலை குறைக்கப்படும்” என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார்.

23 Jun 2021 11 AM

போலீஸார் தாக்கியத்தில் பலி?

சேலம், மாவட்டம் ஆத்தூர், இடையப்பட்டி சோதனைச் சாவடியில் போலீஸாரால் தாக்கப்பட்ட வெள்ளையன் (எ) முருகேசன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில்..!

23 Jun 2021 10 AM

ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக் கூடுதல் அவகாசம் தேவை!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத ஒன்பது மாவட்டங்களில், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டபோதும், புதிதாகப் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று இந்தப் புதிய உத்தரவைப் பிறப்பித்திருந்தது. தேர்தல் நடத்துவதோடு மட்டுமல்லாமல், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் முடிவுகளையும் அறிவிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்

இந்தநிலையில், குறிப்பிட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த, கூடுதல் கால அவகாசம் தேவை எனத் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. கூடுதல் அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

23 Jun 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 50,848 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 3,00,28,709 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,358. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,90,660-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சோதனை
கொரோனா சோதனை

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,89,94,855 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 6,43,194 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 68,817 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,24,374 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் 1,33,75,937 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு