`ஒரே நாளில் 5,975 பேருக்குத் தொற்று; 3,79,385 ஆக அதிகரித்த மொத்த பாதிப்பு!’ - தமிழகத்தில் கொரோனா நிலவரம் #NowAtVikatan

23-08-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு....!
தமிழகத்தில் புதிதாக 5,975 பேருக்குத் தொற்று!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,79,385ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 97 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 6,517 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மேலும் 1,298 பேருக்குத் தொற்று!
சென்னையில் மட்டும் இன்று 1,298 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,677பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,25,389 ஆக அதிகரித்துள்ளது.
மோடி பகிர்ந்த `விலைமதிப்பற்ற தருணங்கள்’
பிரதமர் தேசிய பறவையான மயிலுக்கு உணவளிக்கும் வீடியோ ஒன்றை தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். டெல்லியில் இருக்கும் லோக் கல்யாண் மார்க் வீட்டில் இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை `விலைமதிப்பற்ற தருணங்கள்’ என மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தி விபத்து!
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 பேருந்துகள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து காரணமாக பேருந்து நிலைய பகுதிகளில் கரும்புகை கிளம்பியது. அங்கிருந்தவர்கள் தியணைப்பு துறையினருடன் வேகமாக செயல்பட்டு தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
சினிமா படப்பிடிப்பு தொடர்பான வழிகாட்டுதல்!
கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் மொத்தமாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு சினிமா படப்பிடிப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, படப்பிடிப்பின் போது நடிகர், நடிகை தவிர அனைவரும் மாஸ்ல்அணிய வேண்டும், உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்ள கூடாது. அதே போன்று தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கையுறை கட்டாயம். படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசின் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் வெளிப்புற படப்பிடிப்பின் போது கூட்டம் கூடாமல் இருப்பதையும் படக்குழுவினர் உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை - ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம்!
இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை வரைவு வெளியிடப்பட்டு மக்களின் கருத்துகள் மத்திய அரசால் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாளை முதல் 31ஆம் தேதி வரை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் புதிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பான தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 30 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,44,941 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 69,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 912 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56,706 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22,80,567 ஆகவும் உயர்ந்துள்ளது.
கொரோனா உலக அப்டேட்ஸ்!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 2,33,80,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து 1,59,06,479 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8.07 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உச்சகட்ட பாதிப்பு பதிவாகி வருகிறது.
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். இதனால், மருந்து, பால் கடைகள் மற்றும் மருத்துவமனைகளை தவிர மற்ற நிறுவனங்கள், கடைகள் செயல்பட முடியாது. அவசர தேவைகள் இன்றி மக்கள் சாலையில் செல்லவும் அனுமதி கிடையாது. இதனால் சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.