Published:Updated:

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி காலமானார்!

சுரேஷ் அங்கடி
சுரேஷ் அங்கடி

23-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

23 Sep 2020 10 PM

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி காலமானார்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி (வயது 65) டெல்லியில் காலமானார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுரேஷ் அங்கடியின் உயிர் பிரிந்தது. கர்நாடகாவின் பெலகாவி தொகுடியில் இருந்து 4 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த 4வது நாடாளுமன்ற உறுப்பினர்.

23 Sep 2020 4 PM

தட்டார்மடம் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது கொலை வழக்கு!

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் இளைஞர் செல்வன் கொலை தொடர்பாக காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது சி.பி.சி.ஐ.டி போலீஸார் கொலை வழக்கு பதிவுசெய்தனர்.

ஹரிகிருஷ்ணன், திருமணவேல்
ஹரிகிருஷ்ணன், திருமணவேல்

தூத்துக்குடி மாவட்டம், சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் நிலத்தகராறு பிரச்னையில் காரில் கடத்தப்பட்டு, அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அ.தி.மு.க பிரமுகர் திருமணவேல் உள்ளிட்டோர் மீது புகார் கூறப்பட்ட நிலையில், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

உயிரிழந்த செல்வன்
உயிரிழந்த செல்வன்

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில், அவர்கள் இன்று விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், தட்டார்மடம் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்ட ஆறு பேர் மீது கொலை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

செல்வன் கொலை வழக்கு: `உடைக்கப்பட்ட எம்.எல்.ஏ கார்; பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு’ - நடந்தது என்ன?
23 Sep 2020 1 PM

அமைச்சர் உதவியாளர் கடத்தல்!

உடுமலை ராதாகிருஷ்ணன்
உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர் மாவட்டத்தில், பட்டப்பகலில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் என்பவரை மர்மக் கும்பல் காரில் கடந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டமன்ற அலுவலகத்துக்குக் காரில் வந்த மர்மக் கும்பல், கத்திமுனையில் கர்ணனைக் கடத்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விசாரணை நடத்திவருகின்றனர்.

23 Sep 2020 12 PM

கலாசார ஆய்வுக்குழுவில் தமிழக நிபுணருக்கு இடம்!

மத்திய அரசின் கலாசார ஆய்வுக்குழுவில், தமிழகத்தைச் சேர்ந்த நிபுணரும் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அந்தக் கடிதத்தில், மத்திய அரசு அமைத்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இல்லாதது வியப்பளிப்பதாக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவின் தொன்மையை ஆய்வு செய்யும் குழுவில் தமிழகமும் இடம்பெற வேண்டும் எனவும், தமிழ்க் கலாசாரம் இல்லாமல் இந்திய கலாசாரம் முழுமை பெறாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

12,000 வருட இந்திய வரலாற்றை ஆராய குழு: தமிழர் ஒருவர் கூட இல்லை! - கொதிக்கும் அரசியல் கட்சிகள்
23 Sep 2020 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,347 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 56,46,011-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,085 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பலி எண்ணிக்கை 90,020 -ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 45,87,614 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் தற்போது வரை 6,62,79,462 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 9,53,683 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு