கொரோனாவுக்குப் பிந்தைய உடல்நலக் குறைபாடு! அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் மரணம் #NowAtVikatan

23-11-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் மரணம்!
கொரோனாவிலிருந்து குணமடைந்து, அதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டால் சிகிச்சைபெற்று வந்த அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86.

கௌகாத்தியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவரது உடல்பாகங்கள் செயலிழந்ததால், உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தெரிவித்தார். தருண்கோகாய் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ``பிரபலமான தலைவரும் நிர்வாகியுமான தருண் கோகாய் அஸ்ஸாம் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் நீண்ட அனுபவம் கொண்டவர். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
`தடையைக் கடந்து பரப்புரை தொடரும்!’ - தி.மு.க
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில், அந்தக் கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட கட்சியின் 27 மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தி.மு.க-வின் பரப்புரைப் பயணம் தடை கடந்து தொடரும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் கடந்த மூன்று நாள்களாகக் கைதுசெய்யப்பட்டு, இரவு நீண்டநேரம் வரை காவல்துறைக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. `விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பரப்புரை நிகழ்ச்சிக்கு, மக்கள் மத்தியில் கிடைத்திருக்கும் மனமுவந்த பேராதரவு - மகத்தான வரவேற்பு, அ.தி.மு.க ஆட்சியைப் பெரிதும் மிரளவைத்திருக்கிறது என்று கூறியிருக்கும் தி.மு.க., மக்களாட்சியில் ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் தேர்தல் பிரசாரம் செய்யும் உரிமை உண்டு என்றும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
பேரறிவாளனின் பரோல் ஒரு வாரம் நீட்டிப்பு!

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒருவாரம் நீட்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். உடல்நிலை பாதிப்படைந்திருக்கும் நிலையில், சிகிச்சைக்குச் செல்லும் பேரறிவாளனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இந்த மனு மீதான விசாரணையை ஜனவரி மாதத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.