Election bannerElection banner
Published:Updated:

பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்: வழக்கை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார் இளையராஜா! #NowAtVikatan

இளையராஜா
இளையராஜா

23-12-2020 |இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

23 Dec 2020 10 AM

வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்த இளையராஜா!

இசைஞானி இளையராஜா, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பிரசாத் ஸ்டூடியோவில்தான் இசையமைத்துவந்தார். இந்தநிலையில், `பிரசாத் ஸ்டூடியோவின் கட்டமைப்பை மாற்றியமைக்கவிருக்கிறோம். ஆகையால், நீங்கள் பயன்படுத்திவரும் அறையைக் காலி செய்யுங்கள்’ என இளையராஜா தரப்பை பிரசாத் ஸ்டூடியோ தரப்பு கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இளையராஜா தரப்பு காலி செய்ய மறுத்தது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்தநிலையில், இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில், ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், `பிரசாத் ஸ்டூடியோவில், இத்தனை ஆண்டுகள் இசையமைத்த அரங்கில் ஒரு நாள் சென்று தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும். கைப்பட எழுதிய இசைக் கோர்ப்புகள், இசைக் கருவிகள், எனக்குக் கிடைத்த விருதுகள் ஆகியவை அங்கு உள்ளன. அவற்றை எடுத்துக்கொள்ள அனுமதிக்க ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரசாத் ஸ்டியோ தரப்பு, `பொருள்களை எடுத்துக்கொள்ள இளையராஜாவை அனுமதித்தால், ரசிகர்கள் அதிக அளவில் கூடிவிடுவார்கள் என்பதால், அவருக்கு பதிலாக அவரது பிரதிநிதிகள் வந்து பொருள்களை எடுத்துச் செல்லலாம்’ எனத் தெரிவித்தது.

பிரசாத் ஸ்டூடியோ
பிரசாத் ஸ்டூடியோ

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இசையமைப்பாளர் இளையராஜாவை நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்கத் தயார் என பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஸ்டூடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோரக் கூடாது, ஓர் உதவியாளர், ஓர் இசைக்கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும் என்வை உள்ளிட்ட சில நிபந்தனைகள் பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஸ்டியோ மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தான் பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுவதாக இளையராஜா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். ஸ்டூடியோ இடத்தில் உரிமை கோர மாட்டேன் எனத் தெரிவித்த இளையராஜா, பிரசாத் ஸ்டியோவிலுள்ள தனது பொருள்களை மட்டும் எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார்.

23 Dec 2020 10 AM

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி!

செய்தி
செய்தி

தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுமா என்பதில் சந்தேகம் நிலவிய நிலையில், தற்போது தமிழக அரசு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி வழங்கியிருக்கிறது. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு உள்ளிட்ட போட்டிகளில் 300 போட்டியாளர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம். கலந்துகொள்ளும் அனைத்துப் போட்டியாளர்களும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையத்திலிருந்து தொற்று பாதிப்பு இல்லை எனச் சான்று பெற்றிருக்க வேண்டும். இந்தப் போட்டிகளைக் காண, பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. எனினும், 50% இடங்கள் மட்டுமே நிரப்ப வேண்டும், பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

23 Dec 2020 9 AM

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தமிழகத்துக்குள் பரவாமல் தடுப்பது குறித்து வரும் 28-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவிருக்கிறார். கொரோனா பொதுமுடக்கம் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவதால், கட்டுப்பாட்டை அதிகரிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

23 Dec 2020 9 AM

இன்று வழக்கு விசாரணை!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் தபாலில் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு தொடர்ந்திருக்கிறது. 80 வயதுக்கு மேலானவர்களுக்கு தனியாக வாக்குச்சாவடி அமைக்கலாம் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு