Published:Updated:

'ஹிட்மேனுக்கு ஓய்வு... பும்ரா; தவான் கம்பேக்' - இந்திய அணி அறிவிப்பு #NowAtVikatan

பும்ரா
பும்ரா

23.12.2019 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

23 Dec 2019 8 PM

இந்திய அணி அறிவிப்பு!

இலங்கை அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடக்கவீரரான ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தவான் மற்றும் பும்ரா இந்திய அணிக்கு திரும்புகின்றனர்.

23 Dec 2019 5 PM

தமிழகத்தில் ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 3ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடப்பதால் ஜனவரி 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

23 Dec 2019 3 PM

5 பேருக்கு மரண தண்டனை

ஜமால் கஷோகி
ஜமால் கஷோகி

சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்கு, கடந்த வருடம் அக்டோபர் மாதம் 2-ம் தேதி சென்றார். பிறகு, அவர் திரும்பி வரவேயில்லை. இதையடுத்து, ஜமால் கொலை செய்யப்பட்டுவிட்டதாக துருக்கி அறிவித்தது. ஜமால் கஷோகி சவுதி தூதரகத்தில்தான் கொல்லப்பட்டார் என்பதை சவுதி அரசு ஒப்புக்கொண்டது. பத்திரிகையாளர் கஷோகி கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனையும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.

23 Dec 2019 11 AM

ஜார்க்கண்ட்டில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்!

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கூட்டணி 42 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

23 Dec 2019 11 AM

பேரணி அப்டேட்ஸ்!

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தி.மு.க சார்பில் அதன் கூட்டணிக் கட்சிகளின் பேரணி நடைபெற்று வருகிறது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், வி.சி.க. தலைவர் திருமாவளவன், தி.க. தலைவர் கி.வீரமணி, ஜவாஹிருல்லா ஆகியோர் 9:30 மணிக்கே பேரணிக்கு வந்துவிட்டனர். சரியாக 10:14 மணிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வந்தவுடன் பேரணி தொடங்கியது.

பேரணி
பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பேரணியில் கலந்து கொண்ட பலரும் கறுப்புச் சட்டை அணிந்திருந்தனர். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இன்றைய தி.மு.க பேரணியை 110 கேமராக்கள் கண்காணிப்புடன் சென்னை மாநகரக் காவல்துறை கண்காணிக்கிறது. சுமார் 5,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். பேரணி செல்லும் சாலை சந்திப்பின் ஒவ்வொரு மூலையிலும் கலவரத் தடுப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

23 Dec 2019 10 AM

தொடங்கியது தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் பேரணி!

தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பேரணி தொடங்கியுள்ளது. சென்னை எழும்பூரில் தொடங்கிய இந்தப் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைகிறது. இதில் தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் வைகோ, கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தப் போராட்டம் முழுவதும் போலீஸாரால் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. இதற்காக 110 கேமராக்களும் 4 ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

23 Dec 2019 9 AM

இந்திய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் புதுச்சேரியில் பந்த்!

மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் வருகின்ற 26-ம் தேதி மாலை அனைத்துக் கட்சியினரும் தேசிய கொடி ஏந்தி பேரணி நடத்தவும் மறுநாள் 27-ம் தேதி முழு அடைப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 27-ம் தேதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் பந்த் போராட்டத்துக்கு அனைத்து பிரிவினரும் ஆதரவு தர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயமும் முதல்வர் நாராயணசாமியும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

23 Dec 2019 9 AM

ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முன்னணி நிலவரம்!

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது பா.ஜ.க கூட்டணி கடும் சவால் அளித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க கூட்டணி 34 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 32 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

23 Dec 2019 8 AM

முந்தும் காங்கிரஸ்!

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னணி நிலவரங்கள் வெளியான 60 தொகுதிகளில் 24 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும் 18 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளும் முன்னிலையில் உள்ளன. மற்றவை 18 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

23 Dec 2019 7 AM

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை!

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்படவுள்ளது. காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றும், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தோல்வியைச் சந்திக்கும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முன்னணி கூட்டணி மொத்தமுள்ள 81 இடங்களில் 50 இடங்கள் வரை கைப்பற்றும் என்று 'இந்தியா டுடே' மற்றும் 'மேக்ஸிஸ்' கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. பா.ஜ.க கூட்டணிக்கு 32 சீட்டுகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாம்.

அதே நேரத்தில் ஜார்க்கண்டில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளது என்று சி-வோட்டர்ஸ் கணித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 32 சீட்டுகளும் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு 35 சீட்டுகளும் கிடைக்கும் என சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு சொல்கிறது. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படவுள்ளது. காலை 10 மணியளவில் முன்னணி நிலவரங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

23 Dec 2019 7 AM

சென்னையில் இன்று பேரணி!

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடக்கவுள்ள பேரணிக்குத் தடை கோரிய மனு மீதான விசாரணையில், போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம். ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தக் கூடாது என அறிவிக்க முடியாது. காவல்துறையின் கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும்பட்சத்தில் தி.மு.க பேரணியை நடத்தலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்தப் பேரணியை முழுவதுமாக வீடியோ பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால் அதற்கு ஆதாரமாக இது அமையும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றையை பேரணியை ட்ரோன்கள் மூலம் காவல்துறை கண்காணிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணியை நடத்த இருக்கிறோம். அந்தப் பேரணிக்கு ஆளும்கட்சியான அ.தி.மு.க மிகப்பெரிய விளம்பரம் செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி போராட்டத்துக்குத் தடைவிதிக்க முடியாது எனக் கூறியதாகத் தகவல் வந்துள்ளது. மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தப்படும். நீதிமன்றம் அளித்த உத்தரவு எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி" என்றார். இதைத்தொடர்ந்து இன்று தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பேரணி நடைபெறவுள்ளது. சென்னை எழும்பூரில் தொடங்கும் இந்தப் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைகிறது. இதில் தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் வைகோ, கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு