Published:Updated:

ஒரே நாடு ஒரே ரேஷன்... முதல்கட்டமாக நெல்லை, தூத்துக்குடியில் அமல்!- அரசாணை வெளியீடு #NowAtVikatan

ஒரே நாடு ஒரே ரேஷன்
ஒரே நாடு ஒரே ரேஷன்

23.1.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

23 Jan 2020 10 PM

ஒரே நாடு ஒரே ரேஷன்- அரசாணை வெளியீடு

குடும்ப அட்டைதாரர்கள் தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மட்டும் இந்த முறை முதல்கட்டமாக தற்போது அமல்படுத்தப்படுத்தப்படுகிறது.

மேலும் இந்த முறை தொடர்பாக ஒவ்வொரு வாரமும் மண்டல இயக்குனருக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்பின் இத்திட்டம் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

23 Jan 2020 11 AM

ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா நியமனம் ரத்து

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.ராஜா நியமிக்கப்பட்டதை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. ஆவின் தொடர்ந்த வழக்கு ஒன்றின் விசாரணையில் ஓ.ராஜா உள்ளிட்ட 17 பேரின் நியமனமே ரத்து செய்யப்பட்டுள்ளது.

இடைக்கால நிர்வாக குழுவை சரியான முறையில் சட்டப்படி நியமிக்கவும், இடைக்கால நிர்வாக குழு நியமிப்பது குறித்து ஆவின் நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆரம்பத்தில் மதுரை-தேனி இரண்டு மாவட்டங்களும் சேர்ந்த ஆவின் கூட்டுறவு சங்கத்துக்கு ஓ.ராஜா தலைவராக நியமிக்கப்பட்டு, கட்சிக்குள் அது சலசலப்பு உண்டானதால் பின்பு தேனி மாவட்டம் தனி ஆவினாக பிரிக்கப்பட்டு தலைவராக நியமிக்கப்பட்டு அவர் அதிகாரம் குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

23 Jan 2020 7 AM

அமெரிக்காவுக்கு மீண்டும் `நோ’ சொன்ன இந்தியா!

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இம்ரான் கான் முதன் முதலாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சென்றார். அங்கு அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது ட்ரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாகவும், தான் ஒரு சிறந்த மத்தியஸ்தர் எனவும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அதன் பிறகு அவர் இதைப் பல முறை தெரிவித்துவிட்டார்,

அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதை பாகிஸ்தானும் விரும்புகிறது. எனினும் இந்தியா இந்தக் கோரிக்கையை ஆரம்பம் முதலே மறுத்து வந்தது. காஷ்மீர் உள்நாட்டு விஷயம். அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவுவதை நிறுத்திக்கொண்டால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது எனவும் இந்த விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு தேவை இல்லை எனவும் தெரிவித்தது.

ட்ரம்ப் - மோடி
ட்ரம்ப் - மோடி

இந்த நிலையில், உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில் இம்ரான் கானும் ட்ரம்பும் சந்தித்துப் பேசினர். இதற்கு முன்னதாக 7-வது முறையாக காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார் ட்ரம்ப். விரைவில் ட்ரம்ப் இந்தியா வரவுள்ள நிலையில் அவரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியா மீண்டும் ஒருமுறை தனது நிலைப்பாட்டை சொல்லியுள்ளது.

``காஷ்மீர் விவகாரத்தில் எங்களின் நிலைப்பாடு தெளிவாகவும் உறுதியானதாகவும் இருக்கிறது. இதில் மூன்றாவது நபரின் தலையீடு அவசியமில்லாதது” என இந்தியா மீண்டும் ட்ரம்புக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

பின் செல்ல