Published:Updated:

நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் சிவா காம்போவில் `அண்ணாத்த' #Thalaivar168 #NowAtVikatan

அண்ணாத்த
அண்ணாத்த

24.2.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...

24 Feb 2020 6 PM

ரஜினி - சிவா காம்போவில் `அண்ணாத்த'

நடிகர் ரஜினி, தற்போது இயக்குநர் சிவா படத்தில் நடித்து வருகிறார். `தலைவர் 168' என குறிப்பிடப்பட்டு வந்த இந்தப் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு `அண்ணாத்த' என என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார்.

24 Feb 2020 4 PM

துப்பாக்கிச்சூடு: தலைமைக் காவலர் பலி!

டெல்லி மஜ்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பெரும் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் கற்களை வீசி மோசமாகத் தாக்கிக் கொண்டார்கள். போராட்டகாரர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். பின்னர் போலீஸார் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் இந்தக் கலவரத்தில் தலைமைக் காவலர் ரத்தன்லால் என்பவர் உயிரிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை வடகிழக்குப் பகுதியில் 10 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

24 Feb 2020 3 PM

டெல்லி போராட்டத்தில் கலவரம் - துப்பாக்கிச்சூடு!

டெல்லியில் யமுனா விஹார் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அகமதாபாத்திலிருந்து டெல்லிக்கு வரவுள்ள நிலையில் போராட்டக்களத்தில் நடந்த வன்முறை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சரிடம் டெல்லியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக துப்பாக்கிச்சூடு தொடர்பான தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு அனுப்பட்டதாகவும் அகமதாபாத்தில் இருந்து பிரதமர் டெல்லி விரைவதாகவும் கூறப்படுகிறது. அங்கு அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

24 Feb 2020 1 PM

மலேசிய பிரதமர் திடீர் ராஜினாமா!

உலகின் மிகவும் மூத்த தலைவரான மலேசிய பிரதமர் மகாதீர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அந்நாட்டு மன்னருக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மகாதீர் கட்சியைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவர், மகாதீர் என்னை ஏமாற்றிவிட்டார். ஆட்சிக்கு வந்து சில வருடங்களில் பொறுப்பை எனக்கு வழங்குவதாகக் கூறினார். ஆனால், எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை அவர் மீறிவிட்டார்’ என்று பேசியிருந்தார். இந்நிலையில்தான் தன் பதவியை மகாதீர் ராஜினாமா செய்துள்ளதாக கூறபடுகிறது. இது மலேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இவர் இந்தியாவின் காஷ்மீர் பிரச்னை குறித்தும் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாகவும் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

24 Feb 2020 1 PM

72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா இன்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது, ஜெயலலிதாவின் பிறந்த நாளை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இன்று காலை சென்னை அ.தி.மு.க அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் தமிழகம் முழுவதும் 72,00,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் `மகிழம்' கன்று வைத்து முதல்வர் தொடங்கி வைத்தார்.

24 Feb 2020 9 AM

சென்னையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

காயல்பட்டினம், கடலூர், சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கோயம்பேடு அருகே நெற்குன்றத்தில் அன்பரசன் என்பவர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது, தீவிரவாதிகளுக்கு சிம்கார்டு வாங்கி தந்தது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

24 Feb 2020 7 AM

என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் உள்ள சிறப்புச் சோதனைச் சாவடியில், கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவு, பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை மர்மக் கும்பல் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்தது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக நாகர்கோவில் இளங்கடைப் பகுதியைச் சேர்ந்த தௌஃபீக், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார், கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில்வே ஸ்டேஷனில் வைத்து கடந்த 14-ம் தேதி கைதுசெய்தனர்.

`மேட் இன் இத்தாலி; 5 தோட்டாக்கள்!’- சிக்கியது வில்சன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி
தௌஃபீக்
தௌஃபீக்

தௌஃபீக் உள்ளிட்ட 7 பேருக்கு இந்து முன்னணி சுரேஷ்குமார் கொலை வழக்கிலும் தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், சீதக்காதி நகரில் வசிக்கும் நாவாஸின் இரண்டாவது மனைவி மெய்தீன் பாத்திமா வீட்டுக்கு கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட தௌபீக்கை தனி வேனில் காயல்பட்டினத்துக்கு கடந்த ஜனவரி 26-ம் தேதி அழைத்துவந்து தனிப்படை போலீஸார் விசாரித்தனர். இந்த நிலையில், மொய்தீன் பாத்திமா வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், கடலூர் பத்தாம்பாக்கத்தில் உள்ள ஜாபர் அலி என்பவரது வீட்டிலும் பரங்கிப்பேட்டையில் அப்துல் சமீது மற்றும் புத்தூரில் காஜா மொய்தீன் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு