Published:Updated:

தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று! -பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்வு #NowAtVikatan

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

24.3.2020 |இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

24 Mar 2020 8 AM

கொரோனா அப்டேட்ஸ்!

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் தற்போது வரை 471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பின் காரணமாக கர்நாடகா, டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 7 பேர் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில் நேற்று மேலும் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இமாசலப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 74 பேரும், கேரளாவில் 60 க்கு அதிகமானோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கொரோனா அச்சம் காரணமாக டெல்லி ஷாஹின் பாக் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களை டெல்லி போலீஸார் வெளியேற்றியுள்ளனர்.

24 Mar 2020 10 AM

ஏழை, எளிய மக்களுக்கு அரசு உதவி அறிவிப்பு!

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்படும். நடைபாதை வியாபாரிகளுக்ககாக ரூ.3250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்களுக்கு கூடுதலாக ரூ.1000 வழங்கப்படும். ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும். மார்ச் மாத ரேஷன் பொருட்களை வாங்காவிட்டால் அடுத்தமாதம் சேர்த்து வாங்கிக்கொள்ளலாம். மேலும் பிற மாநிலத்தைச் சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி பருப்பு வழங்கப்படும்

24 Mar 2020 11 AM

இன்று நாட்டு மக்களுடன் உரையாடுகிறார் பிரதமர்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி மீண்டும் நாட்டு மக்களுடன் உரையாடவுள்ளார். ஏற்கனவே கடந்த 19-ம் தேதி பேசியபோது நாடு முழுவதும் ஜனதா ஊரடங்கை அறிவித்தார். இந்நிலையில் அனைத்து மாநிலங்களும் வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் இன்று பேசவுள்ளார் பிரதமர். இன்றும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

மோடி
மோடி
24 Mar 2020 12 PM

தமிழகத்தில் சமூகத் தொற்று வேகமாக பரவுகிறது! - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் சமூகத் தொற்று வேகமாக பரவுகிறது. மின்னல் வேகத்தில் கொரோனா பரவுகிறது. சமூக தொற்றை தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் மூன்றாவது நபராக வெளிமாநிலத்தில் இருந்துவந்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. அப்போதுகூட சமூக தொற்று என்ற வார்த்தையை அரசு பயன்படுத்தவில்லை. இந்நிலையில் நேற்று மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அந்த நபர் எந்த வெளிநாட்டுக்கும், வெளிமாநிலத்துக்கும் செல்லாதவர் என்பதால் தற்போது சமூகத் தொற்று வேகமாக பரவுகிறது என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

24 Mar 2020 12 PM

கொரோனா வைரஸுக்கு இந்தியாவில் 10வது பலி!

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 10வது நபர் உயிரிழந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய 65 வயது முதியவர் மும்பை கஸ்தூரிபா மருத்துவமனையில் கொரோனா தொற்று உடன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பின் காரணமாக கர்நாடகா, டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 7 பேர் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில் நேற்று மேலும் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இமாசலப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 10வது நபராக மும்பை முதியவர் உயிரிழந்துள்ளார். மேலும் தற்போது வரை 490-க்கும் அதிகமான பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.

24 Mar 2020 2 PM

தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா!

தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். 74 வயது மதிக்கத்தக்க ஆண், 50 வயதுடைய பெண் என இருவர் அமெரிக்காவில் இருந்தும், 25 வயதுடைய ஒருவர் சுவிட்சர்லாந்தில் இருந்தும் நாடு திரும்பிய நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும், கேஎம்சி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

24 Mar 2020 3 PM

ஆதார் – பான் கார்டு இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு

பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என கடந்தாண்டு மத்திய அரசு அறிவித்தது. 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இணைக்க வேண்டும் என கால அவகாசம் கொடுக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த உத்தரவையடுத்து பலர் நீதிமன்றம் சென்றனர். இதையடுத்து இந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன் பின்னர் ஆதாருடன் பான் இணைப்பது அவசியம் என்று உத்தரவிட்டது.

ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு 2020, மார்ச் 30-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆதாருடன் பான் எண் இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

24 Mar 2020 6 PM

அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தொற்று நோய் சட்டம் 1897-ல் ஷரத்து 2-ன்படி மாவட்ட எல்லைகளை மூடப்படும். மார்ச் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்" எனத் தெரிவித்தார். இந்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 Mar 2020 7 PM

`கொரோனா நிவாரணத் தொகை ரூ.2,000!’- புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

நாராயணசாமி
நாராயணசாமி

கொரோனா நிவாரணத் தொகையாக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.2000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருக்கிறார்.

24 Mar 2020 7 PM

கடனுக்கான இ.எம்.ஐ உள்ளிட்டவைகளை 6 மாதம் ஒத்திவையுங்கள்!

ராமதாஸ்
ராமதாஸ்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கொரோனா வைரஸால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதை மனதில் வைத்துக்கொண்டு கடன்களுக்கு மாதத் தவணைகள், வட்டியையும் ரத்து செய்ய வேண்டும் அதேபோல் இ.எம்.ஐ காப்பீட்டுக்கான பிரீமியம் கடனட்டை தவணைகள் பள்ளிக் கல்விக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றை ஆறு மாதத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார் ராமதாஸ்.

24 Mar 2020 8 PM

நள்ளிரவு 12 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். குறைந்தபட்சம் இந்த ஊரடங்கு அடுத்த 21 நாள்களுக்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த 21 நாள்களை நம்மால் சமாளிக்க முடியவில்லை என்றால் நாம் 21 வருடங்கள் பின் நோக்கிச் சென்று விடுவோம் என்று கூறிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சமூகத்திலிருந்து ஒதுங்கி இருப்பது ஒன்றுதான் வழி என்றும் கூறினார். கடந்த 22-ம் தேதி #janatacurfew நாட்டுக்கும் மனிதகுலத்துக்கும் எதிராக எந்தவொரு பிரச்னை வந்தாலும் இந்தியர்கள் எப்படி கைகோத்து ஒன்றாகப் போராடுவார்கள் என்பதைக் காட்டியது என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

24 Mar 2020 9 PM

தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று! பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்வு

 விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கூடுதலாக மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழகத்தில் 18 ஆக உயர்ந்திருக்கிறது.

நியூசிலாந்தில் இருந்து தாயகம் திரும்பிய 65 வயதான ஆண், சைதாப்பேட்டையைச் சேர்ந்த 55 வயதான பெண் மற்றும் லண்டனில் இருந்து திரும்பிய 25 வயது இளைஞர் என மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு