Published:Updated:

Tamil News Today: `உள்ளாட்சித் தேர்தல் குறித்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!'

ஸ்டாலின்
ஸ்டாலின்

24-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

24 Jun 2021 1 PM

உள்ளாட்சித் தேர்தல் குறித்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கக் கூடுகிறது, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம். இந்தக் கூட்டம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 26-ம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது என திமுக-வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

24 Jun 2021 1 PM

மத்திய அரசின் சிறு துறைமுகங்களுக்கான திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு!

தமிழக மக்களின் கனவுத் திட்டமான சேது கால்வாய் திட்டம், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை சரக்கு மாற்று முனையமாக மாற்றும் திட்டம் ஆகியவற்றை ஒன்றிய அரசு விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமத்தை ஒழுங்குமுறை அமைப்பாக மாற்றுவதற்கும், மத்திய அரசின் சிறு துறைமுகங்களுக்கான திருத்த மசோதாவுக்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய இணை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற கடல்சார் மேம்பாட்டுக் கூட்டத்தில், புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார்.

24 Jun 2021 10 AM

``ஆளுநர் உரை வெறும் டிரெய்லர்தான்’’ - ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்து முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. சட்டப்பேரவையின் கடைசிநாளான இன்று, முதல்வர் ஸ்டாலின் பதிலுரை வழங்கிவருகிறார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ``தேர்தல் நேரத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். இப்போதே ஒவ்வொன்றாக நிறைவேற்றிவருகிறோம். ஆளுநர் உரை வெறும் டிரெய்லர்தான்" என்று தெரிவித்தார்.

24 Jun 2021 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 54,069 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மெதுவாக உயரத் தொடங்கியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. நேற்று முன்தினம் 42,000 பேர், நேற்று 50,000 பேர் என்று இருந்த எண்ணிக்கை இன்று 54,000-ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 3,00,82,778 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,321. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,91,981-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
மாதிரிப் படம்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,90,63,740-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 6,27,057 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 68,885 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 30,16,26,028 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

24 Jun 2021 9 AM

காஷ்மீர் தலைவர்களுடன் இன்று பிரதமர் முக்கிய ஆலோசனை!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5 -ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்ததுடன், அது இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. தற்போது, இந்தநிலையில், காஷ்மீரில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஏற்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. குறிப்பாக காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில், இன்று பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் அடங்கிய குப்கர் கூட்டமைப்பு, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளன. ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள், பிரதமரிடம் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு