Congress CWC: `7 மணிநேரக் கூட்டம் நிறைவு!' - புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்காத காங்கிரஸ் கட்சி #NowAtVikatan

24-08-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!
புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்காத காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நிறைவுபெற்றது. சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில், `காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை’ என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமைக்கு சீனியர்கள் எழுதிய கடிதம் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் நிலையில், `அது பா.ஜ.க-வுடன் இணைந்து செய்யப்பட்ட வேலை ’என ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாகத் தகவல் வெளியானது.

இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் அந்த விமர்சனத்துக்கு பதிலளித்து, ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். பின்னர், ராகுல் காந்தியே தம்மைத் தொடர்புகொண்டு அப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை என்று கூறியதால், அந்தப் பதிவை நீக்குவதாகக் கூறி விமர்சனத்திலிருந்து பின்வாங்கிக்கொண்டார் கபில் சிபல். இந்தப் பரபரப்புகளுக்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் பொறுப்புகளிலிருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என சோனியா காந்தி பேசியதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்காமலேயே காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் முடிவுற்றதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் புதிதாக 5,967 பேருக்குத் தொற்று!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,967 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,342-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,129 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,25,456-ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கொரோனாநோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 97 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 6,614-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மேலும் 1,278 பேருக்குத் தொற்று!
சென்னையில் மட்டும் இன்று 1,278 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,677-ஆக அதிகரித்துள்ளது.
காவலர் உயிர் எதிர்க்கட்சிகளுக்குத் தெரியவில்லையா?

`ரெளடிகளால் போலீஸார் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன' என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் ரெளடியை பிடிக்கச் சென்றபோது உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் எதுவும் சொல்லாதது ஏன்... காவலர் உயிர் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு உயிராகத் தெரியவில்லையா... ரெளடிகளையும் சமூக விரோதிகளையும் ஒழிக்கக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்’ எனவும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.
காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்!
`காலாவதியாகும் வாகனப் பதிவுச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாகன பர்மிட் (அனைத்து வகையானவை) உள்ளிட்ட ஆவணங்கள் டிசம்பர் 31-ம் தேதி வரை செல்லுபடியாகும்’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைக் கருத்தில்கொண்டு பிப்ரவரி 1, 2020 முதல் காலாவதியான ஆவணங்கள் டிசம்பர் 31, 2020 வரை செல்லுபடியாகும். லாக்டௌன் சூழலில் பொதுமக்களின் நலன்கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு!

தேசியக்கொடியை அவமதித்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். விசாரணைக்கு ஆஜரான எஸ்.வி சேகரை மீண்டும் 28-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டிருப்பதாக காவல்துறை, உயர் நீதிமன்றத்தில் தனது விளக்கமாகப் பதிவுசெய்திருக்கிறது. மேலும், `நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது’ என காவல்துறை உறுதியளித்திருக்கிறது.
மருத்துவப் படிப்பில் 50 சதவிகித ஓபிசி இட ஒதுக்கீடு - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவப் படிப்பில் 50 சதவிகித ஓபிசி இட ஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்தக் கோரி, அ.தி.மு.க தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இ-பாஸ் நடைமுறை கைவிடப்படுமா?
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை புதிய தளர்வுகளுடன் வழங்கப்பட்டுவருகிறது. `மக்கள் எங்கிருந்து எங்கு செல்கிறார்கள் என்பதை டிராக் செய்வதற்கு இ-பாஸ் நடைமுறையில் இருக்க வேண்டியது அவசியம்’ என்கிறார்கள் சிலர். இந்த நிலையில் மத்திய அரசு, மாநிலங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் மக்கள் பயணிக்க மாநில அரசுகள் எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கக் கூடாது’ என உத்தரவிட்டுள்ளது. ``மத்திய அரசின் உத்தரவின்படி, இ-பாஸ் நடைமுறையை முழுமையாக விலக்கினால் கொரோனா தடுப்புப் பணிகள் மேலும் சவாலானதாக இருக்கும்’’ என்றிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
இந்த நிலையில்தான், மத்திய அரசின் உத்தரவைக் கருத்தில்கொண்டு இ-பாஸ் நடைமுறைகளைக் கைவிடலாமா என்பது குறித்து பிற்பகல் 3 மணிக்கு தலைமைச் செயலர் ஆலோசனை நடத்துகிறார்.
பார்களை மூடக் கோரிக்கை -தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
தமிழகம் முழுவதுமுள்ள பார்களை மூட உத்தரவிட கோரிய வழக்கு விசாரணையின் முடிவில், ``மதுக்கடைகள், பார்களை மூடுவது மாநில அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் தலையிட முடியாது” எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
பாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா தொற்று இல்லை?

`பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு தற்போது கொரோனா தொற்று இல்லை’ என அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்ததாகத் தகவல் வெளியானநிலையில், தற்போது எஸ்.பி.பி.சரண் அந்தத் தகவலை மறுத்திருக்கிறார். மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்திவிட்டு, வழக்கம்போல் அவரது உடல்நிலை தொடர்பான கருத்துகளைத் தருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,06,349 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 61,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 836 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57,542 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,38,036 ஆகவும் உயர்ந்துள்ளது.
இன்று காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்!
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சித் தலைவர் தேர்வு குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று மாலை, இடைக்கால தலைவராக இருக்கும் சோனியா காந்தி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அந்த தகவலை மறுத்தார். இன்றைய கூட்டத்துக்கு பின்னர் காங்கிரஸ் தலைவர் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோனியா காந்தியே தலைவராக தொடர வேண்டும் எனவும், அவர்கள் மறுக்கும் பட்சத்தில் ராகுல், பிரியங்கா ஆகியோரில் ஒருவரை தலைவராக கொண்டு வருவது எனவும் செயற்குழு உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை அக்குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க முடிவெடுத்தால், உட்கட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் சில கோரிக்கை வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி குறித்த கருத்துகளால், இன்றைய செயற்குழுக் கூட்டம், அதிக கவனம் பெற்று இருக்கிறது.