Published:Updated:

எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்; உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை! மருத்துவமனை நிர்வாகம் #NowAtVikatan

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்

24-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

24 Sep 2020 11 AM

விஜயகாந்த் உடல்நிலை! - மியாட் மருத்துவமனை அறிக்கை

மருத்துவமனை அறிக்கை
மருத்துவமனை அறிக்கை

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மியாட் மருத்துவமனை, அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் கடந்த 22-ம் தேதி விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

24 Sep 2020 7 PM

எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்!

மருத்துவமனை அறிக்கை
மருத்துவமனை அறிக்கை

பாடகர் எஸ்.பி.பி-யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சைபெற்று வரும் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பி-யின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்ததாகவும், அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

``எஸ்.பி.பி-யும் வாலி சாரும் ஒண்ணா உட்கார்ந்தா அவ்ளோ கலாட்டாவா இருக்கும்!''- தாணு
24 Sep 2020 5 PM

விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா!

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் உடல்நிலைக் குறித்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 22 -ம் தேதி விஜயகாந்த் -க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ``தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நடத்துடன் இருக்கிறார்” என்றார். தொடர்ந்து, ``சிறு அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். தனிமைப்படுத்துதல் வீடு என மாநகாராட்சி நொட்டீஸ் ஒட்டுவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அரசின் அனைத்து விதிகளையும் மதிக்கும் கட்சி தேமுதிக என்பது எல்லோருக்கும் தெரியும்” என்றார். மேலும் விரைவில் வீடு திரும்பும் விஜயகாந்த், தொடர்ந்து கட்சி பணிகளையும் மேற்கொள்வார் என்றார்.

24 Sep 2020 3 PM

10, 11, 12 -ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம்!

பள்ளி
பள்ளி
Church of the King on Unsplash

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில், பலகட்ட தளர்வுகள் வழங்கப்பட்டபோதும், பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், 10, 11, 12-ம் வகுப்பு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மாணவர்களின் விருப்பத்தின்பேரில் பள்ளிக்குச் செல்லலாம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

`மாணவர்கள் தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு பள்ளிக்கு வரலாம். என்றாலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள்ளிருக்கும் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதி கிடையாது’ என தமிழக அரசு தனது அறிவிப்பில் தெரிவித்திருக்கிறது.

24 Sep 2020 12 PM

பேரறிவாளனுக்கு 30 நாள்கள் விடுப்பு!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு 90 நாள்கள் விடுப்பு வழங்கக் கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அவருக்கு 30 நாள்கள் விடுப்பு வழங்கியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்!

24 Sep 2020 9 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 57,32,519 -ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,129 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பலி எண்ணிக்கை 91,149 -ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 46,74,988 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் தற்போது வரை 6,74,36,031மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 11,56,569 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு