Published:Updated:

`தமிழகத்தில் 3,000-க்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு; சென்னையில் 779!’ - கொரோனா அப்டேட்ஸ் #NowAtVikatan

கொரோனா
கொரோனா

24-10-2020 |இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

24 Oct 2020 6 PM

அரசு அலுவலகங்களில் வேலை நாட்கள் 5 ஆக குறைப்பு!

கொரோனா காலங்களில் 100% ஊழியர்களுடன் சனிக்கிழமையும் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பழைய நடைமுறையான 5 வேலை நாட்கள் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

24 Oct 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா நிலவரம்:

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று, நீண்ட இடைவெளிக்குப் பிறகு 3,000 -க்கும் குறைவான பாதிப்பு பதிவாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் மொத்த பாதிப்பு 7,06,136 ஆக உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று 779 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப்பின் 800-க்கு கீழ் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி உள்ளது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4024 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மேலும் ஒரே நாளில் 35 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 10,893 ஆக உள்ளது!

24 Oct 2020 1 PM

இந்திய ராணுவம் அதிரடி!

இந்தியா, பாகிஸ்தான்
இந்தியா, பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 8 மணி அளவில் பாகிஸ்தானின் ட்ரோன் ஒன்று, எல்லை அருகே பறந்ததை இந்திய ராணுவம் கண்டுபிடித்தது. உடனடியாக, இந்தியா ராணுவம் அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தியது. சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த ட்ரோன், இந்திய எல்லைப் பகுதிக்குள் பறந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன!

24 Oct 2020 11 AM

ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``ஆளுநரை முதல்வர் பழனிசாமி கேள்வி கேட்காவிட்டால், எதிர்க்கட்சித் தலைவராக நான் கேள்வி கேட்பேன். மாணவர்களுக்கு நீட் தேர்வு பலி பீடமாக இருக்கிறது. தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன்” என்றார்.

24 Oct 2020 10 AM

மேலும் சில தளர்வுகள்?!

தமிழத்தில் தற்போது கொரோனா பரவல் சற்றுக் குறைந்துவருகிறது. கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராத நிலையிலும், மக்களின் பொருளாதார நிலையைக் கணக்கில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்தநிலையில், வரும் 28-ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவிருக்கிறார். தொடர்ச்சியாக, பண்டிகைக் காலம் என்பதால், இந்தக் கூட்டத்தில், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஏற்கெனவே பண்டிகைக் காலம் என்பதால், தமிழகத்தில் கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட முதல்வர் அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு