Published:Updated:

U19 உலகக்கோப்பை கிரிக்கெட் - நியூசியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இந்திய இளம்படை! #NZvIND #NowAtVikatan

இந்திய அணி
இந்திய அணி ( BCCI )

24.1.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

24 Jan 2020 10 PM

காலிறுதிக்கு முன்னேறிய இந்திய இளம்படை!

U19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் இந்தத் தொடரில் இன்று இந்தியா நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 115 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது.

பின்னர் டக்வொர்த் முறைப்படி நியூசிலாந்துக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 21 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையுமே அந்த அணி பறிகொடுத்தது. இதையடுத்து இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

24 Jan 2020 3 PM

முதல் டி20 போட்டியில் வென்ற இந்திய அணி! #NZvIND

நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. 204 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன்களும் கே.எல்.ராகுல் 56, கேப்டன் விராட் கோலி 45 ரன்களும் எடுத்தனர். சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சேஸ் செய்த மூன்றாவது பெரிய இலக்கு இதுவாகும்.

24 Jan 2020 4 PM

டிஜிபி திரிபாதி எச்சரிக்கை!

காஞ்சிபுரம் சாலவாக்கம் அருகே பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரித்துள்ளார். காஞ்சிபுரம் சாலவாக்கம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

24 Jan 2020 2 PM

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து!

கடந்தாண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் குழு ஒன்றை நியமித்தும், தேர்தல் நடைபெறும் வரை தற்போதையை சிறப்பு அதிகாரி பதவியில் தொடர்வார் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

24 Jan 2020 2 PM

203 ரன்கள் குவித்த நியூசி!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய அந்த அணியில் முன்ரோ, கேப்டன் வில்லியம்சன், டெய்லர் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

நியூசிலாந்து அணியை இந்திய பௌலர்கள் கட்டுப்படுத்த தவறினர். அதேபோல் பீல்டிங்கிலும் இந்திய வீரர்கள் சொதப்பினர். இந்திய அணி தரப்பில் யாரும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. முகமது ஷமியைத் தவிர பந்துவீசிய அனைவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

24 Jan 2020 9 AM

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு உறுதி!

டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இல்லாமல் மேலும் 52 பேர், தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் உதவியுடன் விடைத்தாளில் திருத்தம் செய்துள்ளனர். எனவே, இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளான 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி
டி.என்.பி.எஸ்.சி

தேர்வர்களுக்கு உதவிய இடைத்தரகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சிஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தர வரிசைப் பட்டியலில் முன்னதாக முதல் 39 இடங்களைப் பிடித்தவர்களுக்குப் பதிலாகத் தகுதியான வேறு 39 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் மட்டுமே இந்த முறைகேடு நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 Jan 2020 8 AM

கொரோனா வைரஸ்!

சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 800-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் (Corona virus) என்று அழைக்கப்படும் இந்த வைரஸானது நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் தன்மைகொண்டது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த நிலையில், சீனாவின் பெய்ஜிங் நகரில் இந்திய தூதரகம் சார்பில் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள இந்தியர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை இந்த உதவி மையம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதவிக்கு சிறப்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

24 Jan 2020 7 AM

`இன்று தை அமாவாசை..!’

வாழ்வில் இருள் நீக்கி ஒளி சேர்க்கும் தை அமாவாசை மகத்துவங்கள்... கடைப்பிடிப்பது எப்படி?

பித்ரு தோஷத்திலிருந்து விடுபட கிடைத்திருக்கும் அற்புதமான வாய்ப்பாக அமாவாசை தின பித்ரு வழிபாடு இருக்கிறது. இந்த நாளில் இறைவழிபாட்டோடு பித்ரு வழிபாடும் செய்வது மிகவும் அவசியம்.

உலகப்பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் இன்று தை அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் நேற்று இரவு முதலே யாத்தீரிகள் வந்து முகாமிட்டனர். அதிகாலையில் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி பித்துருக்களுக்கு பிண்டம், எள் வைத்து தர்ப்பணம் செய்து, முன்னோர்களுக்கு பூஜைகள் செய்தனர். லட்சக்கணக்கான மக்கள் கூடுவதால் கடும் பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பின் செல்ல