Published:Updated:

`தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று!’ - குஜராத்தில் இரண்டாவது உயிரிழப்பு #NowAtVikatan

கொரோனா
கொரோனா

25.3.2020 |இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

25 Mar 2020 7 AM

கொரோனாவுக்குத் தமிழகத்தில் முதல் இழப்பு!

கொரோனா காரணமாக பாதிப்படைந்த மதுரையைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். கொரோனாவால் தமிழகத்தில் ஏற்பட்ட முதல் இழப்பு இதுதான். 54 வயதான அந்த நபர் மதுரை இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

25 Mar 2020 1 PM

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்!

கொரோனா அச்சுறுத்தலால் ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்த முடியாத சூழலால் புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு இன்று வெளியிட்ட உத்தரவில், ``கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

அதனால் ஆண்டு இறுதித்தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு இறுதித்தேர்வு புதுச்சேரியில் ரத்து செய்யப்படுகிறது. 1 முதல் 9 வரை படித்த அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

25 Mar 2020 1 PM

சிறைக் கைதிகளை விடுவித்த புதுச்சேரி அரசு!

பார்வையாளர்கள், வழக்கறிஞர்கள் சிறைக்கு வர தடை விதிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், சிறிய குற்ற வழக்குகளில் (Petty Offences Cases) சிறையில் உள்ளவர்களை சொந்த பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுக்குமாறு கூறியிருக்கிறது. இந்நிலையில்தான் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் மத்திய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ”4 பெண் கைதிகள் உள்பட 79 பேரை விடுவிக்கபட்டிருக்கின்றனர்” என்று சிறைத்துறை கண்காணிப்பாளர் கோபிநாத் தெரிவித்தார். இந்தச் சிறையில் மட்டும் 160 விசாரணை கைதிகளும், 80 தண்டனை கைதிகளும், 5 பெண் கைதிகளும் இருந்தனர்.

25 Mar 2020 3 PM

சேலத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா
கொரோனா

சேலத்தில் இந்தோனேஷியாவில் இருந்து வந்த 4 பேர் மற்றும் அவர்களுடன் கைடாக வந்த ஒருவர் என 5 பேருக்கு கொரோனா உறுதியானது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்திருக்கிறது.

25 Mar 2020 11 PM

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் 18 வயது இளைஞர் ஒருவருக்கும், துபாயில் இருந்து திரும்பிய 63 வயது முதியவர் மற்றும் பெருந்துறையில் 66 வயதான முதியவருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனா
கொரோனா
Freepik

குஜராத் மாநிலம் அகமதபாத் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த பெண் உயிரிழந்தார். இது அம்மாநிலத்தில் கொரோனாவால் ஏற்படும் இரண்டாவது உயிரிழப்பாகும்.

அடுத்த கட்டுரைக்கு