Published:Updated:

கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாசிட்டிவ்?#NowAtVikatan

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

25-04-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

25 Apr 2020 9 PM

கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாசிட்டிவ்?

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரி பாதுகாப்பான பகுதியாக கருதப்பட்டு வந்த நிலையில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓசூரை சேர்ந்த அவர் கடந்த சில தினங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து அரசு அதிகாரபூர்வமாக நாளை அறிவிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

25 Apr 2020 6 PM

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,821ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

25 Apr 2020 2 PM

மருத்துவர்களுக்குப் பணி நீட்டிப்பு

ஏப்ரல் 30-ம் தேதியுடன் பணி ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அடுத்த 2 மாதங்கள் பணி நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேர வேண்டும் எனவும் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

25 Apr 2020 11 AM

மருத்துவர் உடலை இடமாற்றம் செய்ய வாய்ப்பில்லை!

சென்னையில் கொரோனா தொற்றால் பலியான மருத்துவரின் உடல், பொதுமக்களின் எதிர்ப்பால், அண்ணாநகர் வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது மனைவி, தனது கணவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். சைமனின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய முழு ஒத்துழைப்பு வழங்குவதாக பேராயர் ஜார்ஜ் அந்தோணி தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் மருத்துவர் உடலை இடமாற்றம் செய்ய வாய்ப்பில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறையின் அறிக்கையின்படி அது பாதுகாப்பானது இல்லை என்பதால் அவரது மனைவியின் கோரிக்கையை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 Apr 2020 8 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,506 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 6,817பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனவால் பலியானவர்களின் எண்ணிக்கை 723 இல் இருந்து 775 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்ட்ராவில் பலியானவர்களின் எண்ணிக்கை 300 -ஐ கடந்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5,063 ஆக உள்ளதாக என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

25 Apr 2020 8 AM

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா...!

கொரோனா
கொரோனா

உலக அளவில் கொரோனாவால் ஏற்பட்டு வரும் பாதிப்பு தொடர்ந்து கொண்டே இருப்பது அனைத்து தரப்பு மக்களையும் கவலை கொள்ள செய்திருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,28,617 ஆக இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. தற்போது வரை 1,97,091 பேர் கொரோனாவால் உலகம் முழுவதும் பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக அமெரிக்காவில் 9,25,038 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 52,185 பேர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சமாக இருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு