`ஆகஸ்ட் மாதம் 12 -ம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து!’ - ரயில்வே அறிவிப்பு #NowAtVikatan

25.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
ஆகஸ்ட் மாதம் 12 -ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து!

நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 12 -ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில், நகர்ப்புற மின்சார ரயில்கள் என அனைத்து சேவைகளும் இந்த காலகட்டத்தில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் ரயில்வே வாரியம் அறிவிப்பு
இடி, மின்னல் தாக்கி 83 பேர் மரணம்!

பீகாரில் இன்று ஒரே நாளில் இடி மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக, 13-க்கும் மேற்பட்டோர் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர்கள் என மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இடி மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத பாதிப்பு!
தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,977-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,834 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,648 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா நோய்த் தொற்றால் ஒரே நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 45 -ஆக அதிகரித்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 911 -ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,236 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை தமிழகத்திலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,999 ஆக உள்ளது.
சாத்தான்குளம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படும்!
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ``கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகள் கூட திணறுகிறது. ஆனால், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவல் என்ற நிலைக்குச் செல்லவில்லை’’ என்றார்.

மேலும், ``மருத்துவ நிபுணர்கள் கூறும் ஆலோசனைக் கேட்டிருந்தால் நாம் ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழந்திருக்க மாட்டோம். அதிகாரிகள் மூலம் நிவாரணப் பொருட்களை தி.மு.க வழங்கியிருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது’’ என்றும் தெரிவித்தார். சாத்தான்குளம் சம்பவம் குறித்து பேசுகையில், ``சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு செயல்படுத்தப்படும்’’ என்றும் முதல்வர் கூறினார்.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து!
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், பல்வேறு மாநில அரசுகளும் பள்ளித் தேர்வுகளை ரத்து செய்து வருகின்றன. தமிழகத்தில் 10ம் வகுப்புப் பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 10, 12ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. `ஜூலை 1ம் தேதி தொடங்குவதாக இருந்த 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், 10ம் வகுப்புப் பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படுகிறது’ என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,.
இந்தியாவில் 4.73 லட்சம் பேருக்குப் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,56,183லிருந்து 4,73,105 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 16,922 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,476-லிருந்து 14,894 அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,71,697 ஆகவும் உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 95,20,098 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பிலிருந்து 51,69,145 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,83,957ஆக உயர்ந்துள்ளது.