CoronaVirus: தமிழகத்தில் 3.91 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 5,951 பேருக்குத் தொற்று! #NowAtVikatan

25-08-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!
தமிழகத்தில் புதிதாக 5,951 பேருக்குத் தொற்று!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,998 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,32,454-ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கொரோனாநோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 107 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 6,721-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மேலும் 1,270 பேருக்குத் தொற்று!
சென்னையில் மட்டும் இன்று 1,270 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,27,949-ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அன்று மதியம் 3 மணிக்கு நடக்கும் ஆலோசனைக்கு பின்னர் செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் கடை பிடிக்க வேண்டிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.
பா.ஜ.கவில் இணைந்தார் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை!

டெல்லியில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை, தமிழக பா.ஜ.க தலைவர் முருகன், பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்டோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தொடர்ந்து பேசிய அவர், பதவியை எதிர்பார்த்து பாரதிய ஜனதா கட்சியில் சேரவில்லை எனவும் சாதாரண தொண்டராகவே வந்துள்ளேன் எனவும் கூறினார்.
திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை

தமிழகத்தில் திரையரங்கு திறப்பு தொடர்பாக பல்வேறு கருத்துகள் நிலவி வரும் சூழலில், அமைச்சர் கடம்பூர் ராஜூ, மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை எனவும் கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரே தியேட்டர்களை திறக்க வாய்ப்பு உள்ளதாவும் தெரிவித்திருக்கிறார்.
உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து!
தமிழகத்தில் 2017 -ம் ஆண்டில் குட்கா விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. இந்நிலையில் குட்காவை சட்டமன்றத்திற்கு கொண்டு சென்றதால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டது

இந்த நிலையில் உரிமை மீறல் நோட்டீஸுக்கு எதிராக திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில், குட்காவை சட்டப்பேரவைக்கு கொண்டு வந்ததாக தி.மு.க.வினருக்கு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால் மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
தொல்லியல் அகழாய்வுகள் - முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020!
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை, 2019-2020-ம் ஆண்டில், சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர், தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு பணிகள் குறித்து 31-7-2020 வரையிலான பணி முன்னேற்ற அறிக்கை மற்றும் இதுவரையிலான முக்கிய கண்டுபிடிப்புகள் குறித்த விவரங்கள் உள்ளடக்கிய நூல் வடிவத்தில் தொல்லியல் துறையால் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் - முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020” என்ற அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இடிந்து விழுந்த அடுக்கு மாடி குடியிருப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கஜல்புரா என்ற பகுதியில் 5 மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு நேற்றிரவு 7 மணியளவில் இடிந்து விழுந்தது. 35 குடியிருப்புகள் கொண்ட அந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட பலர் சிக்கி கொண்டனர்.

விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை தொடங்கினர். இருவர் உயிரிழந்த நிலையில், பலர் மீட்கப்பட்டனர். இன்னமும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 18-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படை இயக்குநரிடம் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டிய உதவிகளை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,67,324 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 60,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 848 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58,390 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,04,585 ஆகவும் உயர்ந்துள்ளது.
பா.ஜ.கவில் இணைகிறார் அண்ணாமலை!

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை இன்று காலை 11 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார். டெல்லி பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் கட்சியில் இணைகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் ஆர்வம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை சில மாதங்களுக்கு முன்னர் தற்சார்பு விவசாயத்தில் கவனம் செலுத்தினார். தொடர்ந்து ரஜினிக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வந்த அண்ணாமலை தற்போது, பா.ஜ.க வில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது
இ-பாஸ் - 29ம்தேதி முதல்வர் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் இ-பாஸ் நடைமுறையை தொடரலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க, வரும் 29ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை நடத்த இருக்கிறார். மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் செப்டம்பர் மாதம் முதல் அளிக்கப்பட இருக்கும் ஊரடங்கு தளர்வுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.