Published:Updated:

`காலமானார் பாடும் நிலா' - உடல்நலக் குறைவால் பாடகர் எஸ்.பி.பி மறைவு! #NowAtVikatan

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்

25-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு....!

25 Sep 2020 1 PM

உடல்நலக் குறைவால் பாடகர் எஸ்.பி.பி மறைவு!

உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதியம் 1:04 மணிக்கு எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக, அவரது மகன் எஸ்.பி.பி.சரண் அறிவித்தார். அவருக்கு வயது 74.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவந்தது. மேலும், எஸ்.பி.பி உடல்நிலை தொடர்பாக அவருடைய மகன் சரணும் வீடியோ மூலம் தகவல் தெரிவித்துவந்தார். கடந்த வாரம், அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், `மருத்துவர்களுக்கு நன்றி' என அவர் காகிதத்தில் எழுதிக் காட்டியதாகவும் தகவல் வெளியானது.

``எஸ்.பி.பி-யும் வாலி சாரும் ஒண்ணா உட்கார்ந்தா அவ்ளோ கலாட்டாவா இருக்கும்!''- தாணு

இந்தநிலையில், எஸ்.பி.பி-யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெற்றுவந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் நேற்று மாலை 6:30 மணியளவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும், எஸ்.பி.பி-யின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்ததாகவும், அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்துவருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ஆந்திராவிலுள்ள கொணேட்டாம்பேட்டையில் ஜூன் 4, 1946-ல் பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். `ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம்’ என அழைக்கப்படும் எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற மனைவி. காதல் மணம்புரிந்த இந்தத் தம்பதியருக்கு பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். முதன்முதலாக எஸ்.பி.பி. திரைப்பாடலாகப் பாடியது `சாந்தி நிலையம்' படத்துக்காக 'இயற்கை எனும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணி...'தான். ஆனால், திரைக்கு முதலில் வந்தது 'அடிமைப் பெண்' படப் பாடலான 'ஆயிரம் நிலவே வா...’ இதுவரை, தமிழ், தெலுங்கு, கன்னடம் என 16-க்கும் மேற்பட்ட மொழிகளில் 40,000-த்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.

`துடிக்கும் கரங்கள்' படம் தொடங்கி பல்வேறு மொழிகளில் 60 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 50 படங்களுக்கு மேல் நடிக்கவும் செய்திருக்கிறார் எஸ்.பி.பி.

25 Sep 2020 12 PM

பாரதிராஜா பேட்டி!

எஸ்.பி.பி
எஸ்.பி.பி

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு வந்த இயக்குநர் பாரதிராஜா, எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``துக்கத்தில், வருத்தத்தில் எனக்கு வார்த்தை வராது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் எனது 50 ஆண்டுக்கால நட்பு. மக்களின் பிரார்த்தனையால் எழுந்து வருவார் என எதிர்பார்க்கிறோம். இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. எல்லாவற்றையும் மீறிய சக்தி ஒன்று இருக்கிறது” என்றார்.

25 Sep 2020 10 AM

பீகார் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகுமா?

இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்

243 உறுப்பினர்களைக்கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபரில் தேர்தல் நடத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் இன்று மதியம் 12:30 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துகிறது. இதனால் பீகார் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. தமிழகத்திலும் காலியாக இருக்கும் சட்டப்பேரவைத் தொகுதி, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி ஆகியவற்றுக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

25 Sep 2020 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

கொரோனா
கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 58,18,571-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,141 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பலி எண்ணிக்கை 92,290 -ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 47,56,165 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு