Published:Updated:

`ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க சிகிச்சை; ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது!’ - மருத்துவமனை நிர்வாகம் #NowAtVikatan

25-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

25 Dec 2020 7 PM

ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க சிகிச்சை!

`அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற நடிகர் ரஜினிகாந்த், ரத்த அழுத்தம் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ரத்த அழுத்தத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரஜினி
ரஜினி

தற்போது அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவலில், ``ரஜினிகாந்தின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறது. அவரது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிலிருக்க சிகிச்சைகள் தரப்படுகின்றன. அவர் இன்றிரவு மருத்துவமனையில் இருப்பார். நாளை மேற்கொண்டு அவரது உடல்நிலை எப்படியிருக்கிறது என்று பார்க்கப்படும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

மேலும், ``யாரும் அவரைப் பார்க்க அனுமதி இல்லை. அவரது மகள் அவரோடு இருக்கிறார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை மருத்துவர்களுடன் தொலைபேசியில் பேசினார். ரஜினி வேகமாக குணமடைய வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது!

25 Dec 2020 5 PM

பண்பாட்டு வேர்களைத் தேடிய ஆய்வாளர் மறைந்தார்!

பண்பாடு, மானுடவியல், மொழியியல், நாட்டார் வழக்காறு, வரலாறு என பன்முகத் தலைப்புகளில் ஆழமும் அழுத்தமுமாக தமிழில் எழுதியும் பேசியும் வந்தவர், பேராசிரியர். தொ.பரமசிவன். திராவிட இயக்கச் சிந்தனையாளர்களில் சிறப்புக்குரியவராகக் கருதப்படும் தொ.பரமசிவன் 24-ம் தேதி பாளையங்கோட்டையில் மரணமடைந்தார்.

தொ.பரமசிவன் உடலுக்கு அஞ்சலி
தொ.பரமசிவன் உடலுக்கு அஞ்சலி

இன்று நெல்லையில் நடைபெற்ற ஊர்வலத்தில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

25 Dec 2020 1 PM

ஹைதராபாத் அப்போலோவில் ரஜினிகாந்த் அனுமதி

நடிகர் ரஜினிகாந்த் வரும் 31-ம் தேதி புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியிட இருந்த சூழலில், `அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துவந்த நிலையில், படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ரஜினி
ரஜினி

இந்தநிலையில், ரஜினியும் தன்னை ஹைதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்தச் சூழலில் இன்று நடிகர் ரஜினிகாந்த், ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அப்போலோ அறிக்கை
அப்போலோ அறிக்கை

அதில், ``ஐதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ரத்த அழுத்தத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை, கொரோனா அறிகுறிகளும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இன்று மாலைக்குள் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

25 Dec 2020 1 PM

பிரிட்டனிலிருந்து திரும்பியவர்களில் ஐந்துபேருக்கு கொரோனா..! 

கொரோனா
கொரோனா

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உலக நாடுகள் பலவும் பிரிட்டன் விமானங்களுக்கு தடை விதித்திருக்கின்றன. இந்தியாவிலும் பிரிட்டன் விமானங்கள் வர தற்காலிகத் தடை உள்ள நிலையில், ஏற்கனவே பிரட்டனிலிருந்து வந்தவர்களையும் சோதனை மேற்கொள்ள வலியுறுத்தியிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். ஏற்கெனவே பிரட்டனிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் நான்கு பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

25 Dec 2020 11 AM

திருட்டு வழக்கு பதிந்தது சி.பி.சி.ஐ.டி!

சட்டவிரோத தங்கம் இறக்குமதி தொடர்பாக 2012-ல் சென்னையிலுள்ள சுரானா நிறுவனத்தில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டில் சி.பி.ஐ பறிமுதல் செய்த 400.47 கிலோ தங்கத்தில் 103.86 கிலோ தங்கம் காணாமல்போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. சி.பி.ஐ வசமிருந்த சுரானா நிறுவனத்தின் தங்கம் கிலோக் கணக்கில் மாயமான வழக்கில் திருட்டு வழக்கு பதிந்தது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.

சி.பி.ஐ அலுவலகம்
சி.பி.ஐ அலுவலகம்

மேலும், இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி எஸ்.பி விஜயகுமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். எஸ்.பி அந்தஸ்துக்குக் குறையாத அதிகாரிகளை, விசாரணை அதிகாரியாக நியமிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

25 Dec 2020 9 AM

பா.ஜ.க-வில் இணைந்த ம.நீ.ம பொதுச்செயலாளர்!

தமிழகத்தில் தேர்தல் காலம் நெருங்கி வருவதைப் பல்வேறு கட்சித் தாவல் நடவடிக்கைகள் நமக்குக் காட்டிக்கொடுக்கின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்க அடித்தளமிட்ட நாள் முதல் கமல்ஹாசன் அருகில் இருந்தவர் அருணாச்சலம். கட்சி தொடங்கிய பின்னர், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளராக செயலாற்றிவந்தார். இந்தநிலையில் இன்று அவர் பா.ஜ.க-வில் இணைந்தார். சென்னை பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார்.

அருணாச்சலம்
அருணாச்சலம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருணாச்சலம்,``தொலைநோக்குப் பார்வையுடன் மத்திய பா.ஜ.க அரசு வேளாண் சட்டங்களை வகுத்திருக்கிறது. மக்கள் நீதி மய்யம் புதிய வேளாண் சட்டங்களை ஏற்காததால், அந்தக் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு